தி ஹேக்: ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் வரும் அனைத்துலக நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 23) வழங்கவுள்ள தீர்ப்பு, உலகம் முழுவதும் எதிர்கால பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளின் போக்கைத் தீர்மானிக்கும்.
அனைத்துலக நீதிமன்றத்தின் 15 நீதிபதிகள் வழங்கும் ஆலோசனை, சட்டபூர்வமாக நாடுகளைக் கட்டுப்படுத்தாதது. எனினும், இது சட்ட, அரசியல் அழுத்தம் கொண்டது. எதிர்கால பருவநிலை வழக்குகள் அதனைப் புறக்கணிக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
“இந்த ஆலோசனை பெரும்பாலும் நீதிமன்ற வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம், ஏனெனில், மனித இனத்தின் உயிர்வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கும் பேரழிவைத் தவிர்ப்பதற்கான அனைத்துலகச் சட்டக் கடமைகளை இது தெளிவுபடுத்துகிறது” என்று அனைத்துலக சட்டப் பேராசிரியர் பயாம் அகவன் கூறினார்.
அனைத்துலக நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் இரண்டு வாரங்கள் நடந்த விசாரணையில், தாழ்வான, சிறிய தீவு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசிய பேராசிரியர் அகவன், அவை கடல்மட்ட உயர்வால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகக் கூறினார்.
அவ்விசாரணையில், ஐநா சபை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளுமாறு இரு கேள்விகளை முன்வைத்தனர்.
ஒன்று அனைத்துலகச் சட்டத்தின் கீழ், கரியமல வாயு வெளியேற்றத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க, நாடுகள் கொண்டிருக்கும் கடப்பாடு. மற்றது, பருவநிலை அமைப்புக்குத் தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு எத்தகைய சட்ட விளைவுகள் ஏற்படும் என்பது.
இதுகுறித்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளும் அனைத்துலக அமைப்புகளும் கருத்துகளைத் தெரிவித்தன.
2015ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தம் உள்பட, பெரும்பாலும் கட்டுப்படுத்தாத பருநிலை ஒப்பந்தங்கள் தங்கள் பொறுப்புகளை முடிவு செய்வதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும் என்று உலகின் வடக்குப் பகுதி பணக்கார நாடுகள் நீதிபதிகளிடம் கூறின.
தொடர்புடைய செய்திகள்
வளரும் நாடுகளும் சிறிய தீவு நாடுகளும் கரிம வெளியேற்றத்தைத் தடுக்க சில வேளைகளில் சட்டரீதியாகவும் வலுவான நடவடிக்கைகள் தேவை எனக் கூறின.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்துலக நீதிமன்றத்தில் (International Court of Justice). ஐநாவில் அங்கத்தினராக இருக்கும் அனைத்து நாடுகளும் உறுப்பினராக உள்ளன.

