நியூயார்க்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா 3-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவிடம் தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மொராக்கோ காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் கடுமையாக விளையாடின. இதனால் ஆட்டத்தின் முதற்பாதியிலேயே ஆறு மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன.
கனடாவின் தற்காப்பு ஆட்டத்தை உடைக்க முடியாமல் திணறிய மொராக்கோ இரண்டாவது பாதியில் விழித்துக்கொண்டது.
மொராக்கோவின் அசீடின் ஒனாகி ஆட்டத்தின் 50வது மற்றும் 82வது நிமிடங்களில் கோல்கள் அடித்து அசத்தினார். கனடாவும் கோல் அடிக்கப் போராடியது, இருப்பினும் அதன் அனைத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் (90+8) சூஃபியான் ரஹீமி கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கனடா, உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறினாலும் அது இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. கனடியப் பிரதமர் மார்க் கார்னேவும் எக்ஸ் பக்கத்தில் அணியைப் பாராட்டிப் பதிவிட்டார்.
பிரான்ஸ் வெற்றி
பராகுவேவுடனான ஆட்டத்தில் பிரான்ஸ் தட்டுத் தடுமாறி வெற்றிபெற்றது.
கடுமையான வெயில், பராகுவே வீரர்களின் முரட்டுத் தனமான ஆட்டம் எனப் பல சவால்களைச் சமாளிக்க வேண்டிய நிலைக்குப் பிரான்ஸ் தள்ளப்பட்டது.
ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிலியன் இம்பாப்பே கோலாக மாற்றினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.
ஜூலை 10ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு பிரான்சும் மொராக்கோவும் காலிறுதியில் மோதுகின்றன.
இரு அணிகளும் வேகமாக ஆடக்கூடிய அணிகள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

