ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம் காஸாவில் மருந்துப் பொருள்களைச் சேர்த்துவைக்க இஸ்ரேல் அதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதார நிலவரம் அங்குப் படுமோசமாய் இருப்பதாக உலக நிறுவனம் சொன்னது. இஸ்ரேல், காஸா நகரை முழுமையாய் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னர் அங்குச் செல்ல அனுமதி தரவேண்டும் என்று உலக நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) கோரிக்கை விடுத்தது.
“மனிதாபிமான உதவிப்பொருள்கள் அதிக அளவில் காஸாவிற்குள் அனுமதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு இதுவரை நடக்கவில்லை அல்லது மிக மெதுவாக நடைபெறுகிறது,” என்று பாலஸ்தீன வட்டாரத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி திரு ரிக் பீப்பர்கோர்ன் தெரிவித்தார்.
மருந்துப்பொருள்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவை அறவே இல்லை என்றார் அவர்.
காஸாவில் பஞ்சம் உச்சத்தில் இருப்பதாக ஜூலை மாதம் உலக நிறுவனம் கூறியது.
இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகளால் மிகக் குறைவான மருந்துப்பொருள்களையே காஸாவிற்குள் கொண்டுசெல்ல முடிந்ததாகத் திரு பீப்பர்கோர்ன் சொன்னார்.
மருத்துவமனைகளில் சுமார் 50 விழுக்காடும் முதன்மை சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் 38 விழுக்காடும் மட்டுமே செயல்படுவதாக அவர் கூறினார்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 148 பேர் மாண்டதாகவும் ஜூலை மாத நிலவரப்படி ஐந்து வயதுக்கும் குறைந்த கிட்டத்தட்ட 12,000 பிள்ளைகள் அவதியுறுவதாகவும் அவர் கூறினார்.