டிரம்ப் வரிவிதிப்பைச் சமாளித்து வரலாறு படைத்துள்ள உலக வணிகம்

2 mins read
2fbbfe4e-7614-468e-956a-8e48f4decac8
உலக வர்த்தக மதிப்பு 35 டிரில்லியன் டாலரைத் தொட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதித்தார்.

அதனைத் தொடர்ந்து உலக வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் பலர் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு மாறாக 2025ஆம் ஆண்டு உலக வணிகத்தின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 35 டிரில்லியன் டாலரைத் (44.9 டிரில்லியன் வெள்ளி) தொட்டுள்ளது. உலகளவில் வணிகம் ஏழு விழுக்காடு வளர்ச்சி கண்டது. இவ்விகிதம், 2024ல் பதிவானதில் இரு மடங்காகும்.

யுஎன்சிடிஏடி என்றழைக்கப்படும் ஐக்கிய நாட்டு வணிக, மேம்பாட்டு அமைப்பின் புள்ளிவிவரங்களில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. இவ்வமைப்பு, வளர்ந்து வரும் சந்தைகளில் வணிகத்தை ஊக்குவிக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பிரிவாகும்.

திரு டிரம்ப்பின் வரிவிதிப்பு, சேவைகளைவிட பொருள்களைத்தான் அதிகம் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் பொருள் வணிகத்தின் வளர்ச்சி இவ்வாண்டு ஆறு விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம், 2024ல் பதிவானதில் மும்மடங்காகும்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வணிகப் பூசல் இருந்து வந்தபோதும் இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் சீனா ஈடுபட்ட வணிகத்தின் மதிப்பு தேவைக்கும் மேல் 1 டிரில்லியன் டாலராகப் பதிவானது. இந்த அம்சத்தில் ஒரு நாடு ஓராண்டில் அத்தொகையை எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

மேலும், பகுதிமின்கடத்திக்கான தேவையால் தைவான், தென்கொரியா, மலேசியா ஆகியவை ஆக அதிகம் பலனடைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவுத் துறை சூடுபிடிப்பதன் காரணமாகப் பகுதிமின்கடத்திகளுக்கான தேவை அதிகரித்து வந்துள்ளது.

தைவானின் ஏற்றுமதிகள் வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சியடைந்தன. அதன் காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான அதன் பொருளியல் வளர்ச்சி 7.37 விழுக்காடாகப் பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இவ்விகிதம், 15 ஆண்டுகளில் ஆக அதிகம்.

தென்கொரியாவில் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் மொத்த மதிப்பு வரலாற்றில் முதன்முறையாக 700 பில்லியன் டாலராகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்