முதன்முறையாக ரோபோக்கள் நடத்தும் மூத்தோர் பராமரிப்பு நிலையம்

முதன்முறையாக ரோபோக்கள் நடத்தும் மூத்தோர் பராமரிப்பு நிலையம்

2 mins read
f3fd43df-a4b2-4821-af9b-c98c0b5c2a76
பெய்ஜிங்கில் உள்ள அறிவார்ந்த மூத்தோர் பராமரிப்பு நிலையம். - படம்: சிஜிடிஎன் / விசிஜி
multi-img1 of 3

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ரோபோக்கள் மூலம் மூத்தோர் பராமரிப்பு நிலையம் நடத்தப்பட்டு வருகிறது.

பெய்ஜிங்கின் ரொங்ஹுவா பகுதியில் அமைந்துள்ள இந்நிலையம் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. 1,100 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலையத்தில் சமூக மன்றம், தொழில்நுட்பக் கண்காட்சி, தாதிமை இல்லம் ஆகிய மூன்று அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ரொங்ஹுவா வட்டாரத்தில் அமைந்துள்ள நான்கு மூத்தோர் பராமரிப்பு நிலையங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இதர மூன்று நிலையங்களும் வழக்கமானவையே.

ரொங்ஹுவாவில் வசிப்போரில் கால் பங்குக்கும் மேலானவர்கள் 60 வயதைத் தாண்டியவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மூத்தோரின் விகிதம் 35 விழுக்காட்டைத் தொடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொங்ஹுவாவில் முதுமை சார்ந்த சூழல் மிகவும் தீவிரமாக உள்ளதாக அப்பகுதிக்கான அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். பாரம்பரிய மூத்தோர் பராமரிப்பு நிலையங்களில் வழங்கப்படுவதையும் தாண்டி கூடுதல் சேவைகளை வழங்கத் திட்டமிடப்பட்டதாக அவர் சொன்னார். அந்த வகையில், தொழில்நுட்ப அம்சங்கள் நாடப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையம், முத்தரப்புப் பங்காளித்துவத்தினால் சாத்தியமான முயற்சியாகும். உள்ளூர் அரசாங்கம் நிதி மற்றும் மேற்பார்வைச் சேவைகளை வழங்குகிறது, அன்றாட நடவடிக்கைகளைத் தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது, அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ‘ரோபோட் மால்’ (Robot Mall) எனப்படும் நிறுவனம், 24 இயந்திரவியல் நிறுவனங்களிடமிருந்து இயந்திரங்களைத் தருவிக்கிறது.

அறிவார்ந்த மூத்தோர் பராமரிப்பு நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து 43 ரோபோக்கள் அந்தக் கட்டடம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவிட்டன. பேன்கேக் (pancake) தயார்செய்யும் இயந்திரம், சதுரங்கம் விளையாடும் ரோபோட்டிக் கை (robotic hand) உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

பயனீட்டாளர் கருத்துகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யும் வகையில் 10 ரோபோக்கள் மீட்டுக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்