சோல் / பெய்ஜிங்: தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) சீனாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் அங்குச் செல்கிறார்.
தைவான் விவகாரத்தால் ஜப்பானுடனான உறவில் சீனாவுக்குக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபரும் தென்கொரிய அதிபரும் இரண்டு மாதத்தில் இரண்டாம் முறையாகச் சந்திக்கவிருக்கின்றனர். சோலுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் பெய்ஜிங் ஈடுபட்டுள்ளதையே அது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். பொருளியல் ஒத்துழைப்பையும் சுற்றுப்பயணத் துறையையும் ஊக்குவிக்க இருதரப்பும் முயலும் என்று நம்பப்படுகிறது.
தைவான் மீது சீனா உத்தேசத் தாக்குதலை நடத்தினால் தோக்கியோ ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று சென்ற ஆண்டு (2025) நவம்பர் மாதம் ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி கூறியிருந்தார். அது சீனாவுக்குச் சினமூட்டியது.
தென்கொரியத் தலைவர்கள் ஜப்பானுக்குச் செல்லும் முன்னர், சோலுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்திக்கொண்டுவிட வேண்டும் எனச் சீனா கருதக்கூடும் என்று கவனிப்பாளர்கள் நம்புகின்றனர்.
லீ நிர்வாகமும் பெய்ஜிங்குடன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள விரும்புவதாகக் கூறியிருக்கிறது. தென்கொரியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடு, சீனா என்பதையும் அது சுட்டியது.

