சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைத் தென்கொரியாவில் வியாழக்கிழமை (அக்டோபர் 30) சந்திக்கவிருக்கிறார்.
இரு நாட்டுக்கும் இடையில் மாதக்கணக்காக நீடிக்கும் வர்த்தகப் பதற்றத்திற்கு இடையில் தலைவர்களின் சந்திப்பு, பூசான் துறைமுக நகரில் இடம்பெறுகிறது. உலகத் தலைவர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் அதனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
“உத்திபூர்வ, நீண்டகால விவகாரங்கள் குறித்துத் தலைவர்கள் இருவரும் விரிவாக விவாதிப்பார்கள்,” என்று சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் குவோ ஜியாக்குன் புதன்கிழமை தெரிவித்தார்.
“அமெரிக்காவுடன் சேர்ந்து ஆக்ககரமான முடிவுகளை எட்ட ஆவலோடு இருக்கிறோம். சீன-அமெரிக்க உறவு நிலையாக முன்னேறுவதற்குச் சந்திப்பு, புதிய வழிகாட்டியாகவும் உந்துதலாகவும் இருக்கும்,” என்றார் திரு குவோ.
முன்னதாக, புதன்கிழமை தென்கொரியாவுக்கு ஆகாயப் படை விமானத்தில் திரு டிரம்ப் சென்றபோது, தாமும் அதிபர் ஸியும் இரு நாட்டுக்கும் நல்லதோர் உடன்பாட்டை நிறைவேற்றித் தரப்போவதாக உறுதிகூறினார்.
அமெரிக்க-சீனத் தலைவர்கள் சந்திக்கப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு, கடந்த மாதத்திலிருந்து பங்குச் சந்தையை நிலைப்படுத்தக் கைகொடுத்துள்ளது.
வர்த்தகப் பூசல் பெரிதானதற்கு வாஷிங்டனும் பெய்ஜிங்கும் ஒன்றை மற்றொன்று குறைகூறுகின்றன. சீனா, அரியவகைக் கனிமங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதாகக் கூறுகிறது அமெரிக்கா. ஆனால் பெய்ஜிங்கோ, சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலிடுவதை மேலும் மேலும் வாஷிங்டன் கட்டுப்படுத்துவதாகச் சொல்கிறது.
வீரியமிக்க ஃபென்ட்டனைல் மருந்துப்பொருள்கள், திறன்மிக்க உயர்தர நுண்சில்லுகள், சோயாபீன் முதலியவற்றின் ஏற்றுமதி குறித்தும் நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை நிலவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திரு ஸி, ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை, தென்கொரியாவில் இருப்பார்.
திரு டிரம்ப், ஏபெக் மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


