பெய்ஜிங்: சீனாவில் உள்நாட்டுச் சுற்றுப்பயணங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அங்குள்ள சுற்றுலாத் துறையில் ‘சியாவ்ஹோங்ஷு’ என்ற வாழ்க்கைமுறைச் செயலி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் ‘பின்டரெஸ்ட்’ மற்றும் ‘இன்ஸ்டகிராம்’ போன்ற அம்சங்களைக் கொண்ட இந்தச் செயலி, சீனாவில் ‘ரெட்நோட்’ என்றும் அழைக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டிலேயே பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெறத் தயாராகி வரும் இந்தத் தளத்தை, மாதாந்திர அடிப்படையில் ஏறத்தாழ 350 மில்லியன் பயனாளர்கள் தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
சீனாவின் இளம் தலைமுறைப் பயணிகள் புதிய சுற்றுலாத் தளங்களைக் கண்டறியவும் தங்களது பயணத் திட்டங்களை வகுக்கவும் இந்தச் செயலியையே அதிகம் நாடுகின்றனர்.
குறிப்பாக, பெய்ஜிங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஷிசாஹாய்’ ஏரி போன்ற பகுதிகளில், பாரம்பரிய ஆடைகளை அணிந்து படங்கள் எடுத்து இந்தச் செயலியில் பகிர்வது பிரபலமடைந்துள்ளது.
இதனால் அத்தகைய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளதோடு, அவர்களுக்குப் படம் எடுத்துத் தரும் தொழில்முறைப் புகைப்படக் கலைஞர்களுக்கு இடையேயான போட்டியும் கடுமையாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இந்தச் செயலியில் குறிப்பிட்ட இடங்களைப் பற்றி பகிர்வதன் மூலம், இதுவரை பிரபலமாகாத சியான்டாங் மாநிலத்தின் ‘சிபோ’ போன்ற சிறு தொழில்நகரங்களும் அங்குள்ள எளிய உணவகங்களும்கூட புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களாக உருவெடுத்துள்ளன. உணவகங்கள், போக்குவரத்து வழிகள் என அனைத்துக்கும் இந்தச் செயலியின் பரிந்துரைகளையே முழுமையாக நம்பியிருப்பதாக இளம் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

