தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை எதிர்காலத்தை ஆராய்ந்த கருத்தரங்கு

3 mins read
fd9f1f5f-2a65-45ee-9900-04177b68b529
நீடித்த நிலைத்தன்மை தொடர்பான சிங்கப்பூரின் முயற்சிகள் குறித்து நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தொழில் நிபுணர்களின் கலந்துரையாடல் அங்கம் நடைபெற்றது. - படம்: ஜாக்கி ஹோ
multi-img1 of 3

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த கருத்தரங்கு ஒன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 24) தேசிய பல்கலைக்கழகத்தின் ‘ஷா ஃபவுண்டேஷன் அலும்னை ஹவுஸ்’ அரங்கில் நடைபெற்றது.

கொள்கை ஆய்வுக் கழகத்தின் புதிய ‘எஸ்­ஆர் நாதன் ஃபெல்லோஷிப் இளம் தலைவர்கள்’ கருத்தரங்குத் தொடரின் முதல் கருத்தரங்கான இது, சுமார் 160 பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்தது.

முக்கிய தேசிய பிரச்சினைகளைப் பற்றிய விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் ஊக்குவிப்பதோடு இளம் தொழில் நிபுணர்களையும் தலைவர்களையும் ஈடுபடுத்துவதை இத்தொடர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் முதன்மைப் பேச்சாளரான செல்வி மெலிசா லோ, தேசிய பல்கலைக்கழகத்தின் இயற்கை அடிப்படையிலான பருவநிலைத் தீர்வுகள் நிலையத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார்.

பன்னாட்டு ஒத்துழைப்பின்வழி எவ்வாறு பசுமை வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கி, கரியமில வர்த்தகக் கட்டமைப்புகளை வலுப்படுத்த முடியும் என்பதற்கான நுண்ணறிவு பற்றியும் தமது உரையில் விளக்கினார்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக செல்வி மெலிசா, ‘ஜஸ்ட் கீப் திங்கிங்’ அமைப்பின் நிறுவனர் காங் மான் ஜிங், உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தின் கரியமில நிதி, சந்தைகள் பணிக்குழுவின் அனைத்துலகத் தலைவர் ரூபன் மனோகரா, ‘லேபாக்‌இன் எஸ்ஜி’ அமைப்பின் இணை நிறுவனர் ஹோ சியாங் தியன் ஆகியோரின் கலந்துரையாடல் அங்கம் நடைபெற்றது.

பருவநிலை சார்ந்த சிங்கப்பூரின் பயணம்

கரியமிலவாயு வெளியேற்றம் 2025 முதல் 2028 வரை உச்சத்தை எட்டுவதைத் தொடர்ந்து, 2035ல் சிங்கப்பூர் அதன் கரியமிலவாயு வெளியேற்றத்தை 45 மில்லியன் மெட்ரிக் டன் முதல் 50 மில்லியன் மெட்ரிக் டன் வரை குறைப்பதற்கான உறுதிப்பாட்டை முதன்முறையாக இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி எடுத்தது.

இது நாட்டின் பருவநிலை சார்ந்த கொள்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லைப் பிரதிபலிப்பதுடன் பாரிஸ் ஒப்பந்தத்தின் நீண்டகால வெப்பநிலை இலக்குகளை அடைய சிங்கப்பூரின் கடப்பாட்டையும் காட்டுகிறது.

இயற்கை வளம் குறைந்த நகரமான சிங்கப்பூர், அதன் பருவநிலை இலக்குகளை நிறைவேற்றத் தேவையான கரியமில உமிழ்வைக் குறைப்பதற்கு அனைத்துலக ஒத்துழைப்பு முக்கியப் பங்கு ஆற்றுகிறது. பாரிஸ் ஒப்பந்தத்தின் 6ஆம் பிரிவுடன் இணைந்துபோகும் அனைத்துலக கரியமில சந்தைகளைப் பயன்படுத்துவது அத்தகைய ஒரு வழிமுறையாகும்.

அனைத்துலக கரியமில சந்தைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வாய்ப்புகளும் சவால்களும், சுற்றுச்சூழல் தொடர்பான ஒருமைப்பாட்டை உறுதிசெய்தல் போன்ற தலைப்புகளை ஒட்டி நிபுணர்கள் கலந்துரையாடினர்.

சிங்கப்பூரின் பருவநிலை இலக்குகளை அடைய ஆராய்ச்சி, கொள்கை இரண்டின் ஒருங்கிணைப்பும் பொதுமக்‌களின் வலுவான ஈடுபாடும் மிக முக்கியம் என்று அவர்கள் எடுத்துரைத்தனர்.

“பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை முன்னெடுப்பதில் இளையர்களின் ஈடுபாடு அவசியம்,” என்று ரூபன் தமிழ் முரசிடம் கூறினார்.

எந்த ஒரு நபரிடமும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் இருக்காது என்பதால் ‘முழு சமூகமும் ஈடுபடும்’ அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“அரசாங்கம், வர்த்தகங்கள், தனிநபர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை நாம் அடைவதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்,” என்று 35 வயது ரூபன் கூறினார்.

பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை முன்னெடுப்பதில் இளையர்களின் ஈடுபாடு அவசியம். அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
ரூபன் மனோகரா, 35
குறிப்புச் சொற்கள்