தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் 18 வயது ஹ்ரிதே திருமுரு.
தகவல் தொழில்நுட்பச் செயலிகள் தயாரிப்பு (IT Applications Development) துறையில் உயர் நைட்டெக் படிக்கும் ஹ்ரிதே இறுதியாண்டில் ஒரு நிறுவனத்தில் வேலைப்பயிற்சி பெற வேண்டும். ஒரு மாதமாகத் தேடியும் வேலைவாய்ப்புகள் அவருக்கு எட்டாக்கனியாக இருந்தன.
ஹ்ரிதேவுக்குப் பிறவியிலிருந்தே செவித்திறன் குறைபாடு உள்ளது. வலது காது முற்றிலும் செயல் இழந்துள்ளது. இடது காது ஒலிக்கருவிமூலம் 80 விழுக்காட்டு ஆற்றலுடன் செயல்படுகிறது.
ஐடிஇ-எஸ்ஜி எனேபல் வேலைப்பயிற்சி, வேலைவாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின்வழி ஆறு மாதங்களுக்குக் கிரிசலிக்ஸ் எனும் உள்ளூர்த் தொழில்நுட்ப உதவி நிறுவனத்தில் ஹ்ரிதே வேலைப் பயிற்சியை மேற்கொண்டார்.
மடிக்கணினிகளைச் சோதிப்பது, அவற்றிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது, அறிக்கைகளை எழுதுவது, கணக்குகளை ஒழுங்குபடுத்துவது எனப் பல பணிகளையும் அவர் செய்தார்.
வாடிக்கையாளர்களின் பணியிடத்திற்கே நேரடியாகச் சென்று உதவும் அளவுக்கு ஹ்ரிதே முன்னேறினார்.
ஹ்ரிதேவின் முன்னேற்றத்துக்கு உதவினார் ‘டிராம்போலீன்’ எனும் லாப நோக்கற்ற நிறுவனத்தைச் சேர்ந்த வேலை ஆலோசகர் ஹில்லரி லிம், 29. ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய ஹ்ரிதேவை அவர் ஊக்குவித்தார்.
““நான் வேலைகளைச் சரியாகக் கற்று சிறப்பாகச் செய்ததாக என் நிறுவனம் பாராட்டியது. என் தன்னம்பிக்கை வளர்ந்தது,” என்று பெருமிதத்துடன் சொன்னார் ஹ்ரிதே.
தொடர்புடைய செய்திகள்
இப்போது ‘டிராம்போலீன்’ நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு ஹ்ரிதே நிதியியல் தொடர்பான நிர்வாகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
ஹ்ரிதேயைப் போல பல மாணவர்களுக்கு உதவ, சென்ற ஆண்டு ஐடிஇ-எஸ்ஜி எனேபல் வேலைப்பயிற்சி, வேலைவாய்ப்பு ஆதரவுத் திட்டம் முன்னோட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது.
அத்திட்டம் பற்றி இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்திலும் கல்விக்கான இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் வலியுறுத்தினார்.
முன்னோட்டத் திட்டம் மூலம் ஹ்ரிதே உள்பட ஏறக்குறைய 100 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஆண்டுக்கு 250 மாணவர்களுக்கு இதை விரிவாக்கவும் திட்டங்கள் உள்ளன.
ஐடிஇ முடித்ததும் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணினித் துறையில் கல்வியைத் தொடர ஹ்ரிதே விரும்புகிறார்.
“எதிர்காலத்தில் கணினி, கைப்பேசிச் செயலிகளை உருவாக்க விரும்புகிறேன். கணினிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வேலையிலும் சேர வேண்டும் என்பது என் விருப்பம்,” என்றார் ஹ்ரிதே.