சிறுவயதில் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படை விமானங்களின் சாகசங்களைப் பார்த்தவுடன் அவனிஷ் மலைத்துப்போனார்.
சிறகில்லாமல் விமானிகள் வானில் பறந்ததைப் பார்த்தவுடன் அவருக்குள் அன்று தோன்றிய ஆசையே, தொடர் முயற்சியால் சீரிய வடிவம் பெற்றது. தற்போது விமானம் செலுத்துவதற்கான தனியார் உரிமத்திற்குத் தகுதிபெற்றுள்ளார் தொடக்கக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவரான அவனிஷ் ஆனந்த், 18.
“எட்டு வயதாக இருந்தபோது அப்பா விமானக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது வானில் போர்விமானங்கள் நிகழ்த்திய சாகசங்களைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
“அதுவே விமானம் மீதான ஆர்வத்தை முதன்முதலில் என்னுள் விதைத்தது. அத்துடன், விமானிகள் உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அனுபவங்களை விவரிக்கையில் எதிர்காலத்தில் இதை நான் செய்தாக வேண்டும் என்ற உறுதியை எனக்குள் ஏற்படுத்தியது,” என்று கூறினார் அவனிஷ்.
“ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யாமல், வானில் பறப்பதுதான் வேலை என்ற எண்ணம், என் உறுதியை மேலும் வலுப்படுத்தியது,” என்றார் இவர்.
உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது சிங்கப்பூர் இளம் விமானிகள் சங்கத்தின் (Singapore Youth Flying Club) மாதிரி விமான வடிவமைப்பு (aeromodelling) தொடர்பான இணைப்பாட வகுப்பில் சேர்ந்தார் அவனிஷ்.
பிறகு, தொடக்கக் கல்லூரியில் பயிலும்போது சிங்கப்பூர் இளம் விமானிகள் சங்கத்தின் விமானிப் பயிற்சிக்கான வகுப்பில் சேர்ந்து பயின்றார்.
“கல்வி சார்ந்த நடவடிக்கைகள், பாடங்களுக்கு இடையே தனியார் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சி என்று நேரத்தை வகுத்துக்கொள்ள தொடக்கத்தில் சிரமமாக இருந்தது,” என்று சொன்னார் அவனிஷ்.
தொடர்புடைய செய்திகள்
“முன்பெல்லாம் ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது எனக்கு வாடிக்கை. எதிலும் சிறிது நேரம்தான் கவனம் செலுத்துவேன். ஆனால், பயிற்சிக்குப் பிறகு, கிடைக்கும் நேரமெல்லாம் பயனுள்ள வகையில் செலவழித்தல், சிதறாத கவனத்துடன் செயல்களில் ஈடுபடுதல், சவால்களைக் கண்டு துவண்டுவிடாத மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றையும் கடைப்பிடிக்கிறேன்.
“பாடம், பயிற்சி வகுப்பு, குடும்பம், பொழுதுபோக்கு என ஒவ்வொன்றிற்கான நேரத்தையும் எவ்வாறு சரியாக வகுத்துக்கொள்வது என்பதையும் கற்றுக்கொண்டேன்,” எனத் தெரிவித்தார் அவனிஷ்.
முதன்முதலாகத் தனியாக விமானம் இயக்கிய தருணத்தை நினைவுகூர்ந்த அவனிஷ், “மொத்த விமானமும் என் கட்டுப்பாட்டில் இருக்க, விண்ணில் தனியாக விமானத்தைச் செலுத்தி உயரப் பறந்த அனுபவம் பலநாள் முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்,” என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தமது குறிக்கோளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் சிங்கப்பூர் இளம் விமானிகள் சங்கத்தின் பயிற்சி அமைந்ததாகக் கூறினார் அவனிஷ்.
“பல ஆண்டுகளாக தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது வானில் வட்டமடித்து சாதனை நிகழ்த்தும் விமானச் சாகசங்களை நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்துள்ள நான், அதேபோன்று பிற்காலத்தில் விமானச் சாகசங்களை நிகழ்த்தும் விமானியாக ஆகாயப்படையில் சேவையாற்ற ஆசைப்படுகிறேன்,” என்று உறுதிபட கூறினார் அவனிஷ்.
“பேரார்வம், கவனம், பொறுமை, கடப்பாடு ஆகிய பண்புகள் மேலோங்கி இருந்தால், விமானியாக வேண்டும் என்ற ஆசைப்படும் எவருக்கும் வானம் வசப்படும்,” என்றார் இந்த இளையர்.


