மாணவர்கள் தமிழ்மொழி ஆற்றலை வெளிப்படுத்துவதற்குத் தளம் அமைத்த ‘நற்றமிழ் உரைக்களம்’ பேச்சுப்போட்டியில் கிரசண்ட் பெண்கள் பள்ளி முதலிடத்தைத் தட்டிச் சென்றது.
‘நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கமும் சமூக அமைப்புகளும் ஆற்றும் உலகளாவிய பங்களிப்பு’ என்பது தலைப்பு.
தலைப்பை ஆய்வு செய்து கருத்துகளை முன்வைத்த உயர்நிலை மூன்று மாணவர்கள் ஸ்ரீனிகா ரகுராமன், ஐஸ்வர்யா சிதம்பரம், சுப்பையா ஆனந்தபிரியா வெற்றி வாகை சூடினர்.
தலைப்புக்கு ஏற்ப பாரம்பரிய பறை இசையுடன் பேச்சைத் தொடங்கிய கிரசண்ட் பெண்கள் பள்ளி மாணவிகள் பலரையும் வெகுவாகக் கவர்ந்தனர்.
போட்டிக்காக பறையை இசைக்க கற்றுகொண்ட மாணவி ஐஸ்வர்யா, தொடர்ந்து அதைக் கற்கபோவதாகச் சொன்னார்.
“போட்டிக்காக வெளிநாட்டு நிபுணர்களைத் தொடர்புகொண்டோம். அதோடு பாடங்களுக்கும் தேர்வுகளுக்கும் இடையே போட்டிக்குத் தயார் செய்தது சற்று சவாலாக இருந்தது,” என்ற மாணவி ஆனந்தபிரியா, ஆசிரியர்கள் பெற்றோர் உதவியுடன் கிடைத்த வெற்றியை எண்ணி பெருமிதம்கொள்வதாகச் சொன்னார்.
ஆய்வு செய்வது, படவில்லைகளைத் தயார்செய்வது, சேகரித்த தகவல்களைத் தமிழில் சிறப்பாக முன்வைப்பது போன்ற பல திறன்களை போட்டியின்வழி கற்றுகொண்டதாக மாணவி ஸ்ரீனிகா கூறினார்.
‘நற்றமிழ் உரைக்களம்’ போட்டியில் இரண்டாம் இடத்தில் செயிண்ட் ஜோசப்ஸ் கல்விநிலையம், ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி, காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் ஒருசேர வந்தன.
தொடர்புடைய செய்திகள்
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டியில் மொத்தம் 20 பள்ளிகளிலிருந்து 60 மாணவர்கள் பங்கேற்றனர். மார்ச் 1ஆம் தேதி தகுதிச்சுற்று நடைபெற்றது.
அதில் கிரசண்ட் பெண்கள் பள்ளி, செயிண்ட் ஜோசப்ஸ் கல்விநிலையம், ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளி, காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.
நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம் பற்றிய வெவ்வேறு தலைப்புகளையொட்டி ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 4 மாணவர்கள் இறுதிச்சுற்றில் கருத்துகளை முன்வைத்தனர்.
மாணவர்கள் முதலில் நான்கு நிமிடங்கள் உரையாற்றினர். பின் மூன்று நிமிட வினா-விடை அங்கம் இடம்பெற்றது. அந்த அங்கத்தில் சக போட்டியாளர்கள் உட்பட பார்வையாளர்களிடமிருந்தும் நடுவர்களிடமிருந்தும் வந்த கேள்வி கனல்களை மாணவர்கள் கையாண்டனர்.
போட்டிக்கு முன் பிப்ரவரி 8ஆம் தேதி பேச்சாளர் மன்றத்தைச் சேர்ந்த நிபுணர்களால் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. அதில் ஆய்வின் அடிப்படையில் உரையமைத்து பேசும் திறனை மேம்படுத்த மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
போட்டியின் மூலம் மாணவர்கள் தமிழில் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்களை ஆங்கிலத்திலும் மற்ற பாடங்களிலும் பயன்படுத்தலாம் என்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இயக்குநர் சாந்தி செல்லப்பன் குறிப்பிட்டார்.
இரண்டாவது முறையாக நடைபெற்ற ‘நற்றமிழ் உரைக்களம்’ போட்டியை இவ்வாண்டு ஏற்பாடு செய்ய உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய முன்னாள் மாணவர்கள் உதவினர்.
கடந்த ஆண்டு ஆசிரியர்களின் ஏற்பாட்டில் முதன்முறையாக ‘நற்றமிழ் உரைக்களம்’ போட்டி அரங்கேறியது.
அடுத்த ஆண்டு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய முன்னாள் மாணவர்களே சுயமாகத் திட்டமிட்டு போட்டியை நடத்த திட்டமிடுகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த போட்டியை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டு போட்டியை எப்படி இன்னும் சிறப்பாக நடத்த முற்பட்டோம் என்றார் முன்னாள் மாணவர்களின் நிர்வாகக் குழு உறுப்பினர் அ. திவ்யன், 21.
“இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் சிந்திக்கும் திறனைத் தூண்டுவதோடு தமிழில் தன்னம்பிக்கையுடன் பேசவும் உதவுகின்றன,” என்றார் முன்னாள் மாணவர்கள் நிர்வாகக்குழுத் தலைவர் செந்தில்குமார் ஹரீஸ்வர், 20.

