நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து தற்போது மருத்துவராகத் தகுதி பெற்றிருக்கிறார் 24 வயது பூஜிதா கிருபாகரன்.
பரிவுமிக்க, திறமைமிக்க மருத்துவர்களின் அரவணைப்பே, தன்னை இந்தச் சேவையில் ஈடுபட வைத்தது என்றார் அவர்.
குறிப்பாக, இடுப்பு முறிவால் ஒரு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட தம் பாட்டிக்குப் பரிவுடன் கலந்த மருத்துவ உதவி கிட்டியதை பூஜிதா இன்றளவும் நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறார்.
“நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மருத்துவராக இருக்க நான் விரும்பினேன். மருத்துவ அறிவைப் பயன்படுத்தி உடலுக்கு மட்டும் சிகிச்சை அளிக்காமல் அவர்கள் கூறுவதைக் காதுகொடுத்து கேட்டு அவர்களது உள்ளத்தைச் சாந்தப்படுத்த ஆசைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டில் பூஜிதா, தனது மருத்துவப் படிப்பை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) லீ கோங் சியான் மருத்துவப் பள்ளியில் பயில முடிவு செய்தார்.
மற்ற கல்வி நிலையங்களுடன் என்டியுவை ஒப்பிட்ட பூஜிதா, அதன் குழு அடிப்படையிலான கற்றல் முறையால் வெகுவாக ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
2010ல் தொடங்கப்பட்ட லீ கோங் சியான் மருத்துவப் பள்ளி, மற்ற பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அனுபவ ரீதியாகப் புதிதாகத் திறக்கப்பட்ட பள்ளி என்ற முறையில் தன் ஆர்வத்தைத் தூண்டியதாக பூஜிதா கூறினார்.
“மருத்துவக் கல்வி குறித்து பள்ளி கொண்டுள்ள அணுகுமுறை மாறுபட்டதாக எனக்குத் தோன்றியது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
கல்வி பயின்ற காலகட்டத்திலேயே, நோயாளியிடம் உரையாடுவதற்குத் தேவைப்படும் பேச்சுநயத்தைத் தன்னால் வளர்த்துக்கொள்ள இயன்றதை எண்ணி மகிழ்வதாக பூஜிதா கூறினார்.
கொவிட்-19 காலகட்டத்தில் நேரடிக் கற்றல் யாவும் முடங்கிப் போனது. இருப்பினும், தன் கல்விப் பயணத்தின் மறக்க முடியாத ஓர் அங்கமாகக் கடந்தாண்டு தமிழகத்தின் வேலூரிலுள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற அனுபவம் தனக்கு அமைந்ததாக பூஜிதா குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் மருத்துவர்களும் இதர மருத்துவப் பணியாளர்களும் தங்கள் வசமுள்ள வளங்களைக் கவனத்துடன் பயன்படுத்துவதைக் காண முடிந்தது. அதை நான் ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கிறேன்,” என்றார் பூஜிதா.
தற்போது கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பயிற்சி பெறும் பூஜிதா, மகப்பேற்றுத் துறையில் பணியாற்றுகிறார்.
வேலைக்கு அப்பாற்பட்டு மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு பூஜிதா, மெதுவோட்டத்திலும் காற்பந்து விளையாட்டிலும் ஈடுபடுகிறார்.
“மருத்துவராக இருப்பவர்கள் எந்நேரமும் வேலை செய்வதாகச் சிலர் எண்ணலாம். ஆனால், நான் என் நேரத்தைச் சரியாக வகுத்துக்கொள்ள கற்றுக்கொண்டேன்.
எனக்குப் பிடித்தவற்றைச் செய்வதற்குத் தேவைப்படும் நேரத்தை ஏற்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துகிறேன்,” என்று கூறினார் பூஜிதா.
எந்தச் சவால்களாக இருந்தாலும் பூஜிதாவின் குடும்பத்தினர் அவருக்குப் பக்கபலமாக உள்ளனர்.
“என் குடும்பத்தினரையும் நன்கு கவனித்துக்கொள்ள மருத்துவத் திறன்கள் உதவுகின்றன. அதனை நினைத்துக்கொண்டு படிக்கும்போது என் ஆர்வம் கூடுகிறது,” என்று அவர் கூறினார்.
அதேபோல, தம் எல்லாப் பாடங்களிலும், குறிப்பாக அறிவியல் பாடங்களின்மீது ஆர்வம் காட்டுகிறார்.
“இந்தத் தொழிலைத்தான் செய்யவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மருத்துவத் துறையை உண்மையிலேயே நேசிக்கிறேன். துவண்டுபோகாமல் தொடர்வதற்கு இவை முக்கியக் காரணங்களாக உள்ளன,” என்று அவர் கூறினார்.
தோல்விகள் ஏற்பட்டாலும் நடக்கும் அனைத்திற்கும் காரணம் இருப்பதாக எண்ணி மன அமைதி அடைவதாக பூஜிதா கூறுகிறார்.
“தோல்விகளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்காமல் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதை நன்கு சிந்தித்து என்னை மேம்படுத்திக்கொள்ள முயல்கிறேன்,” என்றார் இளம் மருத்துவர் பூஜிதா.