மறுவடிவமைக்கக்கூடிய இயந்திரமனிதர்களை மாணவர்களிடம் கொண்டுசெல்லும் உலகின் முன்னணிப் போட்டிகளில் ஒன்றான ‘ரோபோரோர்ஸ்’ (RoboRoarZ), நான்கு ஆண்டுகளில் ஐந்தாம் முறையாக சிங்கப்பூரில் நடந்தேறியுள்ளது.
ஜனவரி மாதம் நடந்த போட்டியில் சிங்கப்பூர், சீனா, இந்தியா, இந்தோனீசியா, வியட்னாம், மலேசியா, ஓமான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியைச் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) சிங்கப்பூரில் மட்டுமன்றி இந்தோனீசியா, மலேசியா, இந்தியாவிலும் இதற்குமுன் ஏற்பாடு செய்துள்ளது.
‘எஸ்யுடிடி’ உருவாக்கிய ‘ஸ்மார்ஃபி’ (Smorphi) எனும் மறுவடிவமைக்கக்கூடிய இயந்திரமனிதரைக் கொண்டு வெவ்வேறு சவால்களை முடிப்பதே போட்டியின் நோக்கம்.
நேரடிச் சவால், மாதிரிச் சவால்களுடன் இவ்வாண்டு முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவுச் சவாலும் இடம்பெற்றது. அது விருந்தோம்பல் துறையைச் சார்ந்திருந்தது. படுக்கை சரிசெய்யப்பட்டுள்ளதா, தரையில் ஏதேனும் உள்ளதா போன்றவற்றைக் கண்டறியப் போட்டியாளர்கள் பல புகைப்படங்களை ஏஐ மூலம் ஆராய்ந்து வகைப்படுத்தினர்.
“சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், விருந்தோம்பல் துறையில் நேரச் சேமிப்பைக் கொண்டுவருவது முக்கியம். 2026ல் இப்போட்டியைப் பத்து நாடுகளுக்கு கொண்டு செல்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் 2023ல் ‘ரோபோரோர்ஸ்’ போட்டியைத் தொடங்கிய ‘எஸ்யுடிடி’யின் இணைப் பேராசிரியர் மோகன் இராஜேஷ் இலரா. எஸ்யுடிடி ஆராய்ச்சியாளர் டாக்டர் பாக்யா சமரகோன் போட்டித் தலைவராக இருந்துவருகிறார்.
போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கும் இளையர்
‘ரோபோரோர்ஸ்’சில் முதன்முறையாக இவ்வாண்டு கலந்துகொண்டார் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி (எஸ்பி) கணினிப் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி மீனாக்ஷி ராமசுப்பிரமணியன், 19.
மீனாக்ஷியின் அணி மாதிரிச் சவாலில் மூன்றாம் இடத்திலும் நேரடிச் சவாலில் நான்காம் இடத்திலும் வந்தது. அணியினர் அனைவரும் எஸ்பி ரோபாடிக்ஸ் தன்னார்வக் குழுவைச் சேர்ந்தவர்கள். அதே அணியின் ஜானத்தன் லிம் வெய் காங், 19, ‘ரோபோரோர்ஸ்’ போட்டிகளில் வெற்றிகளைச் சுவைத்திருப்பவலர். 2025ல் இந்தோனீசியாவில் நடந்த போட்டியில் ஜானத்தனின் அணி மூன்று சவால்களில் மூன்றாம் பரிசை வென்றது. அதே ஆண்டு சிங்கப்பூரில் நடந்த போட்டியில் நேரடிச் சவாலில் இரண்டாம் நிலையில் வந்தது.
இருவரும் சென்ற ஆண்டு எஸ்யுடிடி நடத்திய ‘வாட் த ஹேக்’ சவாலிலும் வென்றனர். பல கணினி நிரலாக்கப் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். இவ்வாண்டு ஜூன், ஜூலையில் தென்கொரியாவில் நடைபெறவுள்ள ‘ரோபோகப்’பிலும் அவர்கள் காற்பந்து விளையாடக்கூடிய இயந்திரமனிதர்களைப் படைக்கவுள்ளனர்.
மீனாக்ஷி, தன் கல்லூரியின் ‘SP-RITE’ எனப்படும் இயந்திரமனிதர் புத்தாக்க மன்றத்துக்குச் சென்ற ஆண்டு துணைத் தலைவராக இருந்தார்.
“சென்ற ஆண்டுகளைவிட இவ்வாண்டு ரோபோரோர்ஸ் சற்று கடினமாக இருந்தது. முந்தைய ஆண்டுகளில் ஒரு கோட்டைப் பின்தொடர்ந்து சில சவால்களை முடிக்கும் இயந்திரமனிதரை உருவாக்கினோம்; இம்முறையோ இலக்கை அடைய உதவும் கோடு இல்லை,” என்றார் ஜானத்தன்.
“மற்ற நாடுகள் ரோபாடிக்ஸ் சார்ந்து என்னென்ன செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள இப்போட்டி நல்வாய்ப்பாக அமைந்தது,” என்றார் மீனாக்ஷி.
வெற்றியாளர்கள்
பலதுறைத் தொழிற்கல்லூரி/ பல்கலைக்கழகப் பிரிவில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலிருந்து (என்யுஎஸ்) இரு மாணவ அணிகள் நேரடி, ஏஐ சவால்களில் வாகைசூடின. மாதிரிச் சவாலில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி வென்றது.
உயர்நிலை/ தொடக்கக் கல்லூரி/ ஐடிஇ பிரிவில் விக்டோரியா தொடக்கக் கல்லூரியும் ஒன் வர்ல்ட் அனைத்துலகப் பள்ளியும் வென்றன. தொடக்கப்பள்ளிப் பிரிவில் சன்ஷைன் கிராஜுவேட் ஃபினிஷிங் பள்ளியும் (Sunshine Graduate Finishing School) உட்குரோவ் தொடக்கப்பள்ளியும் வென்றன.

