கனவு மெய்ப்பட உதவும் உடன்பாடு

3 mins read
c2093360-be33-404b-8eb1-38bc8781579c
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடமிருந்து உதவி பெற்ற சல்மான், பிறருக்குத் தற்போது வழிகாட்டி உதவுகிறார். - படம்: சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை

எளிய குடும்பத்தைச் சேர்ந்த சல்மான் ஃபஸ்ருடின் சாகுல் ஹமீத், 28, இன்று பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவாறு மற்ற இளையர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குகிறார்.

இவர் போன்ற இளையர்கள் தங்களின் கல்விப்பயணத்தில் வெற்றி காண்பதற்கு, கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து வழங்கப்படும் நிதி ஆதரவு உதவுகிறது.

மாணவர்கள் தங்களின் நிதிச்சவாலை எதிர்கொள்ள ‘எஸ்ஐஇடி’ எனும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை ‘ஏடி கேப்பிட்டல்’ நிறுவனத்துடன் அண்மையில் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை இவ்வாறு கைகொடுத்து வருகின்றன.

மாணவர்களுக்குத் திறமையும் உழைப்பும் இருந்தாலும் நிதிப்பற்றாக்குறையால் அவர்களது வாழ்க்கைப் பாதையே மாறிப் போகலாம். இதே நிலையை எதிர்நோக்கிய சல்மான், மனம் தளராமல் தொடர்ந்து நடை போட்டார்.

சல்மானைச் சேர்த்து அவரின் பெற்றோருக்கு ஆறு பிள்ளைகள். சல்மானின் தந்தை மட்டும்தான் சம்பாதித்தார். அவரின் தாயார் இல்லத்தரசியாகப் பிள்ளைகளைப் பராமரித்து வந்தார்.

வீட்டில் ஆக மூத்த பிள்ளையான சல்மான், சிறுவயது முதல் விமானங்களின் மீது ஆர்வம் உள்ளவர்.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் பொறியியல் படிப்பைப் பயின்று, தலைசிறந்த 10 விழுக்காட்டு மாணவர்களில் ஒருவராகத் தகுதிபெற்றார்.

சிறந்த மதிப்பெண்கள் மூலம் விண்வெளித் தொடர்பான கல்வி வாய்ப்பைப் பெற்று அவர் வெற்றிகரமாக முப்பரிமாண வானூர்தி மாதிரி (3D drone model) ஒன்றை உருவாக்கினார்.

தமது பலதுறைத் தொழிற்கல்லூரியின் வரவேற்பு தினத்தன்று அந்த வானூர்தி மாதிரி, காட்சிக்கு வைக்கப்பட்டதை மிகப் பெருமையாகக் கருதினார் சல்மான்.

தாம் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்த சல்மான், சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை வழங்கிய உதவிக்கு நன்றி நவின்றார்.

“வாழ்க்கையில் முன்னேறி குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான சிறந்த வழி, கல்வி. அறக்கட்டளை வழங்கிய வட்டியில்லாக் கடன் எனக்குத் தக்க நேரத்தில் உதவியது,” என்று அவர் கூறினார்.

இணக்கக்குறிப்பு ஏழாண்டுக்குப் பின் மே 10ஆம் தேதி கையெழுத்தானது.

தேவைப்படும் நிதித்தொகையை வழங்கி, கல்விப் பணத்தை முழுமையாக்கும் இந்த நிதியத்தின்மீது ‘ஏடி கேப்பிட்டல்’ கொண்டுள்ள கடப்பாட்டை அந்தக் கையொப்ப நிகழ்வு உறுதிப்படுத்தியது.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 540 மாணவர்கள் உபகாரச் சம்பளத்துக்குத் தகுதிபெற்றனர். உபகாரச் சம்பளத்திற்கு மேல் நிதி தேவைப்பட்ட மாணவர்கள் கடன் பெறுவதற்கும் அறக்கட்டளை உதவி வருகிறது.

ஆரம்பத்தில் பெற்றோர் தம்மீது வருத்தம் கொண்டனர் என்றும் பின்னாளில் தமது கடின உழைப்பால் அதை மகிழ்ச்சியாகத் தாம் மாற்றியதாகவும் கூறினார் சல்மான்.

இருப்பினும், ஏட்டுக்கல்வியில் மட்டும் சிறந்து விளங்குவது போதாது என்பதை சல்மான் நன்கறிந்திருந்தார்.

தமது உலகனுபவத்துக்குப் பயனளிக்கும் தொடர்பு வட்டத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக ‘கேம்’ எனப்படும் வழிகாட்டித் திட்டத்தில் சேர்ந்தார்.

அவரது திறனை அடையாளம் கண்டு, சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், அவரை அதன் ‘கேம் அரைஸ்’ திட்டத் தலைவராக நியமித்தது.

“எஸ்ஐஇடி எனக்கு உதவி செய்வதுடன் நின்றுவிடாமல் பிறருக்கும் உதவி செய்வதற்கான தளத்தை வழங்கியுள்ளது,” என்று கூறினார் சல்மான்.

“எஸ்ஐஇடி மாணவர்களின் வெற்றிக்காக முதலீடு செய்கிறது. ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட சூழ்நிலையை அறிந்து நீக்குப்போக்கு காட்டும் அவர்களது அணுகுமுறை, மாணவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிடும்,” என்றார் அவர்.

வாழ்க்கையில் முன்னேறி குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான சிறந்த வழி, கல்வி.
சல்மான் ஃபஸ்ருடின் சாகுல் ஹமீத், 28
குறிப்புச் சொற்கள்