சீரான வேலைவாய்ப்பு, ஏற்றமிகு வருவாய் பெறும் தொழில்நுட்ப பட்டதாரிகள்

2 mins read
சாதிக்கும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் 
bc9ea2ba-c5f4-4d24-91f5-ec10636d4c96
பட்டமளிப்பு விழாவை அடுத்து மகிழ்ச்சியுடன் காணப்படும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பக்கழக மாணவர்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (எஸ்ஐடி) 2023ஆம் ஆண்டு பட்டதாரிகளில், 10ல் 9 பேர் ஆறு மாதங்களுக்குள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 10 பேரில் எண்மர் முழுநேர நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளதாகவும் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பட்டதாரிகள் வேலைவாய்ப்பு குறித்து செப்டம்பர் 12ஆம் தேதி ‘எஸ்ஐடி’ வெளியிட்ட ஆய்வின் முடிவில், பல்கலைக்கழகத்தின் புதிய பட்டதாரிகள் அதிக தொடக்கச் சம்பளம் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 2023ஆம் ஆண்டு பட்டம் பெற்ற 2,412 மாணவர்களில் 1,881 பேர் பங்கேற்றனர்.  அக்கல்வி நிலையத்தின் முதல் தொகுதிப் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்று வெளியானது முதல், அவர்களின் இடைநிலை மொத்த மாதச் சம்பளம் சீராக உயர்ந்து வருகிறது எனவும் ஆய்வறிக்கை கூறியது.

ஆய்வின் முடிவில், நிரந்தர முழுநேர வேலையில் இருப்போர், 2023ஆம் ஆண்டில் சராசரி மொத்த மாத வருமானமாக $4,000 ஈட்டினர் எனவும், 2022ஆம் ஆண்டு அது $3,950 ஆக இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஒருங்கிணைந்த வேலை, கல்வித் திட்டம் பற்றி...

“எஸ்ஐடியின் முதன்மைத் திட்டமான இந்த ஒருங்கிணைந்த வேலை - கல்வித் திட்டம் (Integrated Work Study Programme), வேலையுலகில் மாணவர்கள் 12 மாதகாலம் பணியாற்ற வழிவகுக்கும். தரமான, போதுமான தொழில்துறை அனுபவத்தை எஸ்ஐடி பட்டதாரிகள் பெறுவதற்கு இத்திட்டம் முக்கியப் பங்களிக்கிறது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுப் பலனடைந்துள்ளனர். அவ்வாறு பயனடைந்தோரில் 26 வயது சாமுவெலும் ஒருவர். கடற்துறை சார்ந்த பொறியியல் படிப்பு பயின்றுள்ள இவர், தற்போது கடற்படை வடிவமைப்பாளராகப்  பணியாற்றி வருகிறார்.

ஒருங்கிணைந்த திட்டம் வாயிலாக ‘டெட் நார்ஸ்க் வெரிடாஸ்’ (டிஎன்வி) எனும் முன்னணி  அமைப்பில் ஏழுமாத காலம் பணியாற்ற விண்ணப்பித்தார் சாமுவெல். அதன் தொடர்பில் தரவுத் தள வடிவமைப்பு, ஆய்வுகள் உள்ளிட்டவை மூலம் பயன்பாடு, நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த திறன்களைப் பெற்றார் அவர்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக சிங்கப்பூரில் கப்பற்படைக் கலன்களில் மின்னூட்டம் குறித்த விரிவான வழிகாட்டி நூல் ஒன்றை எழுதவும் அவருக்கு வாய்ப்பு கிட்டியது.

இந்நிலையில் இந்த ஒருங்கிணைந்த வேலை - கல்வித் திட்டம், தற்போது 900க்கும் அதிகமான பங்காளித்துவ நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு விகிதம் அதிகமுள்ள துறைகள் பற்றி...

சுகாதார, சமூக அறிவியல் சார்ந்த பாடத் திட்டங்கள் பொதுவாகச் சிறப்பான வேலைவாய்ப்பு விகிதத்தை எட்டியுள்ளதாகவும் ஆய்வு தெரிவித்தது. 

அவற்றுள் நோய் நாடல் ஊடுகதிரியல், (Diagnostic Radiography), உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து, (Dietetics and Nutrition), அன்றாடச் செயலாக்கச் சிகிச்சை (Occupational Therapy) உள்ளிட்ட பாடத் திட்டங்கள் பயின்ற பட்டதாரிகள், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் 100% வேலைவாய்ப்பைப் பெற்றதாகவும் ஆய்வறிக்கை கூறியது.

“தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகமாக நாம் 10 ஆண்டுகளைக் கொண்டாடும் இவ்வேளையில், தொழில்துறையுடன் மேலும் அணுக்கமாகச் செயல்படும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறோம். வேலைக்குத் தயாராகும் திறனாளர்களை, மாற்றங்கள் நிறைந்த வேலையுலகில் வெற்றிபெற வளர்ச்சிப் பாதையை அமைத்திடுவோம்,” என்று கூறினார் எஸ்ஐடி தலைவர் பேராசிரியர் சுவா கீ சாய்ங்.

குறிப்புச் சொற்கள்