பயிற்சி ஆசிரியர்களின் வெளிநாட்டு அனுபவக் கல்விப் பயணம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) தேசியக் கல்விக் கழக ஆசியமொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின்கீழ் இயங்கும் தமிழ்மொழி, பண்பாட்டுத்துறை மார்ச் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்கான கல்விப் பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர், ஈப்போ மாநிலம் ஆகியவற்றிலுள்ள தொடக்கப்பள்ளி, பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி வழங்கும் பல்கலைக்கழகம், பயிற்சிக் கல்லூரி ஆகிய கற்றல் நிலையங்களுக்குப் பயணக்குழு சென்றிருந்தது. 16 பேர் கொண்ட இப்பயணக்குழுவில் மாணவ ஆசிரியர்களுடன் தமிழ்த்துறை விரிவரையாளர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரே பயணத்தில் ஐந்து கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் நடைபெறுவது இதுவே முதல் முறை.

பயண நோக்கங்கள் 

தமிழ் இலக்கணம், இலக்கியம், பண்பாட்டுக்கூறுகள், கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மாணவ ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை மேலும் மேம்படுத்தி ஆழப்படுத்துவதை அடிப்படை இலக்காகக்கொண்டு இக்கல்விப்பயணம் திட்டமிடப்பட்டது.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள், தமிழாசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி, தமிழ்க்கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் ஆய்வுத்திட்டங்கள் போன்ற கூறுகளின் வழியே மலேசியத் தமிழ்க்கல்வியைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ள முடிந்தது.

அத்துடன் மலேசியாவில் தமிழை முதல் மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் கற்றுத்தருதல் குறித்து ஆழமான பார்வையையும் உள்ளார்ந்த அனுபவத்தையும் கைவரப்பெற முடிந்தது.

வட்டார நாடுகளில் தமிழ்ப்பணியாற்றும் திறன்மிகு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் விரிவுரைகளைக் கேட்டறிந்ததோடு மலேசியாவில் இருக்கும் கல்வி நிலையங்களுக்குச் சென்று வருதல்; அங்குள்ள பள்ளி வகுப்பறை ஒன்றில் பாடங்களை உற்றுநோக்கும் வாய்ப்பைப் பெற்று, அவர்களுடன் கலந்துரையாடுவதன் வழியாக மாணவ ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தலை மேலும் மேம்படுத்திக்கொள்ளச் செய்தல் ஆகியவையே இந்தப் பயணத்தின் நோக்கங்களாகும்.

மேலும், மாணவ ஆசிரியர்கள் அங்கிருக்கும் வரலாறு, கலை, பாரம்பரிய, பண்பாட்டுச்  சிறப்புவாய்ந்த இடங்களுக்கும் சென்று அனுபவக் கல்வி பெற்றுவருவதும் திட்டத்தினுள் அடக்கம். 

மாணவர் மையமான கல்வி 

பயணத்தின் முதல் நாளன்று, ஈப்போ மாநிலத்திலுள்ள ரவாங் தொடக்கப்பள்ளிக்குக் கல்விப் பயணக்குழு சென்றது. அங்கு ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியது.

இப்பள்ளியில் முதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது. வகுப்பறைப் படிப்புக்கு அப்பால் பள்ளியில் மூலிகைத் தோட்டம் ஒன்று, மாணவரின் நலன் பேணும் கல்வியாக அமைக்கப்பெற்றுள்ளது. அங்கே அரிய மூலிகைகளைப் பற்றியும் அவற்றின் மகத்துவம் பற்றியும் குழு அறிந்து வந்தது.

பள்ளி வளாகத்தின் சுவர்களில் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மாணவரை மையமாகக் கொண்டதாக பள்ளியின் ஒட்டுமொத்த சூழலும் அமைந்திருந்தது.

வகுப்பறைப் பாடத்தைக் கவனித்த பின்னர், சிங்கப்பூரைச் சார்ந்த மாணவ ஆசிரியர்களும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினர். அதையடுத்து, இரு நாட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றல் கற்பித்தல் உத்திகள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதில் இரு நாடுகளின் கற்றல், கற்பித்தல் முறைகள், பாடத்திட்ட வடிவமைப்பு, மாணவர்களின் மனநலன், கற்றலில் காணப்படும் போக்குகள் முதலியவற்றைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது.

அறிவுக்கு விருந்து 

மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழ்மொழியின் தொன்மை, தமிழர்களின் ஆட்சிப் பரப்பு, தொல்காப்பியத்தின் சிறப்பு போன்ற பல அரிய செய்திகளைத் ஆய்வுநிலையில் தக்க சான்றுகளுடன் விளக்கினார், அப்பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர் இராஜேந்திரன். மேலும், மெய்நிகர்வழியாகக் கல்வி வல்லுநர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் தங்கள் கல்விச் சிந்தனைகளை முன்வைத்தனர். 

ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்து வருகை புரிந்திருந்த முனைவர் சந்திரிகா, தம் நாட்டு அனுபவம்வழியாக, தமிழ்மொழி வாழும் மொழியாக நிலைத்திருக்க வீட்டில் தமிழ் பேசுவதன் இன்றியமையாமையை வலியுறுத்தினார்.

இக்கருத்தரங்கில் 20க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தேசியக் கல்விக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் மாணவ ஆசிரியர்களும் ஒன்பது ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர்.

மாணவ ஆசிரியர்களின் தன்னம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த அனுபவம் அமைந்தது.  

இப்பல்கலைக்கழகத்தின் மொழி, மொழியியல் பிரிவுடனும் இந்திய ஆய்வுகள் துறையுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பெற்றன.

தமிழ் மொழியின் இன்றைய நிலை, பள்ளிகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்கள், அவற்றைக் களையக் கையாளப்படவேண்டிய உத்திமுறைகள் போன்ற பல செய்திகள் இக்கருத்தரங்கில் பகிரப்பட்டன.

மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்களுடனும் மாணவர்களுடனும் நடந்தேறிய கலந்துரையாடலில் அங்குள்ள பாடத்திட்டம், மாணவர்களின் பின்னணி, பட்டப்படிப்புக்குப் பின் அவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புகள் போன்ற பல தகவல்கள் பரிமாறிப்பட்டன.

புத்தாக்கத்தின் வெளிப்பாடு 

சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பிரிவைச் சேர்ந்த கல்வி வல்லுநர்கள், இடைநிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்குத் தரப்படும் பயிற்சிகள் பற்றி விளக்கம் அளித்தனர். அவை தொடர்பான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். பயணக்குழுவினர் பல்கலையின் ஆசிரியர் பயிற்சி பற்றிய தகவல்கள் குறித்து விளக்கம் பெற்றனர்.   

இதனையடுத்து, இருதரப்பிலிருந்து பயிற்சி ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் ஆய்வுக்கட்டுரைகள் படைத்தனர்.

மாணவ ஆசிரியர்கள்தம் படைப்பாக்கத் திறன் வெளிப்படும் வகையில் பயிற்றுவளங்களும் பயிற்றுகருவிகளும் புத்தாக்கச் சிந்தனையைத் தூண்டும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருதரப்பு ஆசிரியர்களும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட வகைசெய்தன. 

ஆய்வுவழி வளங்கள் தயாரிப்பு 

ஆசிரியர்க்கான பயிற்சிகளை ஈப்போ ஆசிரியர் கல்விக்கழகம் வழங்குகிறது. இங்கிருக்கும் மாணவ ஆசிரியர்கள் நான்காண்டுகால இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் முழுநேர ஆசிரியர்களாகப் பணியைத் தொடங்குகின்றனர். 

சிறுவர் இலக்கியம், மலேசியாவில் தமிழ்மொழியின் வளர்ச்சி, மொழிபெயர்ப்பு போன்ற பாடங்களை இம்மாணவ ஆசிரியர்கள் பயில்கின்றனர். மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையில் அமைந்த பயிற்றுவளங்கள் மாநில அளவில் பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருப்பதுடன் அவர்களது படைப்புகள் நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

இப்பல்கலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களின் அரிய முயற்சியில் ஆய்வடங்கலும் இலக்கியப் படைப்புகளும் படைத்திருப்பது பயணக்குழுவின் பாராட்டைப் பெற்றது.

இவைபோன்ற நடவடிக்கைகளில் தம் பயிற்சிக் காலத்தின்போது தாமும் அதிகமாக ஈடுபடவேண்டும் என்னும் ஒரு உத்வேகத்தைப் பயணக்குழுவுக்கு ஏற்படுத்தியது.

தமிழ்மொழி சார்ந்த கற்றல் கற்பித்தலில் அவர்கள் மேற்கொள்ளும் பாடத்திட்டங்கள், பாடத்தரம், பயிற்றுவளங்கள், தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை இப்பயணத்தின் வாயிலாகத் தெரிந்துகொள்ள அரியதொரு வாய்ப்பாக அமைந்தது. 

மேலும், கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படை மொழிக்கூறுகளிலிருந்து இலக்கணப் பாடத்தைப் பிரித்துத் தனிப் பாடமாகக் கற்பிக்கும் முறை குறித்தும் பயிற்சி ஆசிரியர்கள் அறிந்தனர்.

இலக்கணம் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, பார்வை, உணர்வு போன்றவற்றையும் ஆய்வு செய்து பலனடைந்துள்ளனர்.

உள்ளார்வம், தூண்டுகோல் 

நிறைவாக, தமிழ்மொழி கற்றல் கற்பித்தலின் மேன்மை, இருநாட்டுக் கொள்கைகள், பாடம் நடத்தும் முறை, கற்பித்தல் முறைமை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும் அவற்றிலிருந்து ஆழமான அறிவு பெறவும் இக்கல்விப் பயணம் வகைசெய்துள்ளது.

கல்வியியல் குறித்த நிகழ்வுகளுக்கிடையே பண்பாட்டுச் செய்திகளைப் பெறவும் நாட்டின் வரலாற்றுச் சிறப்பு பெற்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று காணவும் இப்பயணம் வழிவகுத்தது.

இந்தக் கற்றல் பயணத்தின் வாயிலாகப் பெறப்பட்ட அனுபவங்களிலிருந்து சிங்கப்பூர்க் கல்வியியல் சூழலுக்கு ஏற்றவற்றைப் பெற்றுக்கொண்டு அவற்றைச் செயல்முறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப் பயணக்குழு எண்ணியுள்ளது.

நம் நாட்டு மாணவர்களுக்குத் தகுந்த முறையில் ஆசிரியரே வளங்களை ஆய்வுப் பின்னணியோடு உருவாக்கி, கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம் என்னும் புதிய சிந்தனையும் ஆர்வமும் நம் மாணவ ஆசிரியர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

செய்தி: தேசியக் கல்விக் கழக மாணவ ஆசிரியர்கள் இப்ராஹீம் அஷ்ரப் அலி, குணசேகர் ரம்யா, வைத்தியநாதன் தீபலட்சுமி, சின்னப்பா பொன்னுசாமி கவிதா, கருணாநிதி துர்கா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!