தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உன்னத விருதுக்கு வழிகாட்டிய தமிழ்மொழிப் பிணைப்பு

3 mins read
da234b14-74e5-4681-a56f-1d716bb11e93
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உயரிய உன்னத விருதை இவ்வாண்டு பெற்ற முருகன் ருபிகா, 18. - படம்: த.கவி

முருகன் ருபிகாவுக்கு தமிழ் ஒருபோதும் பள்ளிக் கல்வியில் கற்றுக்கொள்ளும் பாடமாக மட்டும் இருந்ததில்லை. அது வீட்டின் அன்றாட மொழி, தாத்தா, பாட்டியுடனான உரையாடல்கள், சிறுபருவத்தை வடிவமைத்த கதைகள் ஆகியவற்றின் உயிரோட்டமாக இருந்து வருகிறது.

அந்த ஆழமான பிணைப்பே, அவரை 2025ஆம் ஆண்டுக்கான உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உயரிய உன்னத விருதைப் பெற வழிவகுத்தது.

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் வழங்கும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உயரிய உன்னத விருதை பெறும் முருகன் ருபிகா.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் வழங்கும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உயரிய உன்னத விருதை பெறும் முருகன் ருபிகா. - படம்: த.கவி

கடந்த ஆண்டு தனது ‘ஓ’ நிலை தமிழ்மொழித் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற 18 வயது ருபிகா, இந்த விருதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார்.

“முந்தைய ஆண்டுகளில், மூத்த மாணவர்கள் இந்த விருதைப் பெற்றபோது, நான் அந்த விழாக்களின் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். இப்போது அதே இடத்தில் நானும் நிற்கிறேன் என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தனது விருதுக்கான நியமனத்தைப் பற்றி அவரிடம் தெரிவித்தபோது தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த தருணத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தமிழ், ருபிகாவின் வாழ்க்கையில் எப்போதும் நெருக்கமாகவே இருந்து வந்துள்ளது. வீட்டில் பேசப்பட்ட மொழி அதுவே. குறிப்பாக, தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று வலியுறுத்திய தனது தாத்தா, பாட்டியுடன் இருந்த உறவு, அவருக்குப் பெரிதும் நினைவில் நிற்கிறது.

“என் ஆரம்ப காலங்களிலிருந்தே, தமிழ் மொழி எனது ஒரு பகுதியாகவே இருந்தது,” என்றார் ருபிகா.

அகமது இப்ராகிம் தொடக்கப்பள்ளியிலும், நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்ற பிறகு, உயர் தமிழ் படிப்பதற்காக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சேர்ந்தது அவர் தமிழ்மீது கொண்ட ஆர்வத்தை மேலும் செழிக்கச் செய்தது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பயின்றது ருபிகாவுக்கு தமிழ்மீது கொண்ட ஆர்வத்தை மேலும் செழிக்கச் செய்தது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பயின்றது ருபிகாவுக்கு தமிழ்மீது கொண்ட ஆர்வத்தை மேலும் செழிக்கச் செய்தது. - படம்: த.கவி

நிலையத்தில், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்மூலம் ருபிகா தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானார். அவர்களின் உற்சாகமான கற்பித்தல், கடினமான நூல்களைக்கூட சுவாரஸ்யமாக மாற்றியது.

அதோடு படிப்பிற்கு அப்பால், தலைமைத்துவப் பொறுப்புகளையும் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் அவர் பெற்றார். “நான் என்னை சந்தேகித்த தருணங்களிலும், என் ஆசிரியர்கள் என்னை நம்பினர். அதுவே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான தன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்தது,” என்று ருபிகா சொன்னார்.

அந்த அனுபவங்கள், நிலையத்தின் உள்ளரங்கை அவருக்குச் சிறப்பான, மனத்திற்கு மிகவும் நெருக்கமான இடமாக மாற்றின.

“தொகுப்பாளராக எப்படிச் செயல்படுவது என்பதை நான் கற்றுக்கொண்டது அங்குதான். நிலையம், விக்டோரியா லேனிற்கு இடமாறும்போது, இந்த உள்ளரங்கைதான் மிகவும் நினைவுகூர்வேன்,” என்றார் ருபிகா.

பொங்கல் கொண்டாட்டங்களையொட்டி நாடகங்களில் நடிப்பது, விவாதப் போட்டிகளில் தொகுப்பாளராக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

பள்ளிப் படிப்பின் அழுத்தங்கள் அதிகமாக உணரப்பட்ட காலங்களிலும், நிலையம் அவருக்கு உற்சாகம் அளித்து ஊக்கப்படுத்தும், புத்துணர்ச்சியூட்டும் இடமாக இருந்துள்ளது என்று அவர் கூறினார்.

தற்போது நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியில் பொதுப் பொறியியல் படித்துக்கொண்டிருக்கும் ருபிகாவின் மனத்தில் தமிழ் உறுதியான இடத்தைப் பிடித்துள்ளது. தமிழைத் தனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக என்றும் நிலைநாட்ட, எதிர்காலத்தில் மேலும் தமிழ் அமைப்புகளில், சங்கங்களில் இணையத் திட்டமிட்டுள்ளார்.

சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த செய்தியாளர்களால் உத்வேகம் பெற்ற அவர், ஒருநாள் தமிழ் செய்தி ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவையும் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்