தமிழ் முரசு இவ்வாண்டு தனது 90ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. வார இதழாகத் தொடங்கி, நாளிதழாக மாறி, தற்போது இணையம், சமூக ஊடகமென அது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது.
அவ்வாறு இளையர்களின் குரலாக விளங்கும் நோக்குடன் அவர்களுக்கெனச் சிறப்பாக 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இளையர் முரசு இன்றுவரை பல்வேறு இளையர்களுக்கு பற்பல வழிகளில் உதவி வந்துள்ளது.
தொடக்கத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் தமிழ் முரசின் கடைப்சி பக்கம் இளையர் முரசுக்காக வழங்கப்பட்டது. இன்று இளையர் முரசு ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவருகிறது.
பொதுத் தேர்தல், வரவு செலவுத் திட்டம், போன்ற முக்கிய தேசிய விவகாரங்களைக் குறித்து இளையர்களின் கருத்துகள் என்னவென்று புரிந்துக்கொள்வதில் இளையர் முரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ளது.
இவ்விவகாரங்கள் குறித்து வல்லுநர்களின் கருத்துகளுடன் இளையர்களின் கருத்துகளையும் தமிழ் முரசு கேட்க முயல்வது குறிப்பிடத்தக்கதெனக் கூறினார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் சஞ்சய் முத்துக்குமரன்.
“இவ்வாண்டின் வேட்புமனுத் தாக்கல் தினச் சிறப்பு வலையொளியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. முதல் முறை வாக்காளராக இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் போன்றவர்களுடன் உயர்ந்து வரும் வாழ்க்கை செலவினம் போன்றவை குறித்து எனது கருத்துகளையும் முன்வைக்க முடிந்தது.”
“அதே வேளையில், கலந்துரையாடல் வழி பல முக்கிய கூறுகளையும் கற்றேன்,” என்று அவர் கூறினார்.
வலையொளியில் பங்கேற்றதால் தன் நண்பர்களிடையேயும் தேர்தல் குறித்த ஆர்வம் அதிகரித்ததாக சஞ்சய் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் முரசின் செயலி, சமூக ஊடக பக்கங்களின் வழி செய்திகளை அதிகம் தெரிந்துக்கொள்ளும் 18 வயது மணிகண்டன் ஆர்த்தி, தமிழ் முரசு இத்தளங்களில் செய்திகளை வழங்குவது வசதியாக இருக்கிறதெனக் கூறினார்.
“தமிழ் முரசின் சமூக ஊடகப் பக்கங்களில் பலதரப்பட்ட செய்திகள் குறுங்காணொளிகளாக வெளியிடப்படுகின்றன. எனக்கு நீண்ட செய்திகளை வாசிப்பதைவிட இத்தகைய காணொளிகள் வழி அதைத் தெரிந்துகொள்வது வசதியாக உள்ளது. பல நேரங்களில் இத்தகைய காணொளிகளையும் பதிவுகளையும் நண்பர்களுடன் பகிர்வேன்.”
“முரசு செயலியில் ‘முரசு சொல்லாட்டம்’ என்ற விளையாட்டு மொழித் திறனைச் சுவாரசியமான முறையில் வளர்க்க உதவுகிறது,” என்றார் ஆர்த்தி.
செயலியின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள், செய்திகளை எளிதில் புரிந்துககொள்ள உதவுவதாகக் கூறினார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர் பூபாலன் சுபால்.
“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வழங்கப்படும் மொழிபெயர்ப்பு நுணுக்கமான தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களை எளிதில் தெரிவிப்பதால் செய்திகளைக் குழப்பமின்றிப் படிக்க முடிகிறது. மேலும், மற்ற வேலைகள் செய்துகொண்டு, செய்திகளைக் கேட்கும் வசதியும் செயலியில் இருப்பது பிடித்திருக்கிறது.”
“நாட்டு நடப்பு, விவாதத்தற்குரிய தலைப்புகள், விழாக்கள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கும் காணொளிகளும் பெருமளவு பயனுள்ளதாக உள்ளன,” என்று 17 வயது பூபாலன் கூறினார்.
இளையர்களைச் சமூகத்துடன் இணைக்கவும் தமிழ் முரசு உதவி வருகிறது.
செய்திகளை வழங்கும் அதே வேளையில், சமூக நிகழ்வுகளுக்குத் தமிழ் முரசு வழங்கும் ஆதரவை 22 வயது சட்டத் துறை மாணவி கெஜ ஷ்ரேயா மெச்சினார்.
“சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தமிழ் முரசு அளித்த ஆதரவு அந்நிகழ்ச்சி குறித்து பலருக்கும் கொண்டு சேர்த்தது.”
“தமிழ்ச் சமூகத்திலிருக்கும் முக்கிய நுணுக்கங்களை நன்கு புரிந்து வைத்திருப்பதால், ஒரு செய்தித்தாளாக மட்டுமில்லாமல், சமூகத்தின் குரலாகவும் தமிழ் முரசால் இயங்க முடிகிறது. இத்தகைய சமூக நடவடிக்கைகள் குறித்து செய்திகளை வெளியிடுவது சிங்கப்பூர் போன்ற பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாட்டில் தமிழ் அடையாளத்தைக் கட்டி காக்க உதவுகிறது,” என்று அவர் கூறினார்.
“சமூக நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாலும் இவ்வமைப்புகள் குறித்த விழிப்புணர்வை மற்ற சமூக அமைப்புகளுக்கு ஏற்படுத்துவதாலும் நிறைய கூட்டு முயற்சிகளுக்கு இது வழி வகுக்கிறது,” என்றார் கெஜ ஷ்ரேயா.
தமிழ்ச் சமூகத்தின் சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வெளியிடுவதைப் பாராட்டினார் 20 வயது அன்னபூரணி பிள்ளை.
அண்மையில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழ் பாடத்துடன் ஆரம்ப கல்வியில் பட்டயம் பெற்றுள்ள இவர், தனது படிப்பில் இரண்டாவது சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளை வெள்ளி பதக்கத்தையும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளி வேலைப்பயிற்சியின்போது சிறப்பான செயல்திறனுக்காகவும் ஈ-பிரிட்ஜ் பாலர் பள்ளி பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது சாதனையால் அவர் குறித்த செய்தி தமிழ் முரசில் வெளியானது.
“சிறு வயதிலிருந்தே படித்த செய்தித்தாளில் என் கதை வருவது எனக்கு பெருமையாக உள்ளது. இதனால், தமிழ் துறைக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டுமென்ற உத்வேகமும் ஏற்படுகிறது.”
“தமிழ் முரசு தொடர்ந்து இளைய சாதனையாளர்களின் கதைகளை மக்களுக்குக் கூற வேண்டும். இதனால், பலரும் தொடர்ந்து அவர்களது கனவுகளை நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளதோடு இளம் தலைமுறையினருக்குச் சிறந்த முன்னுதாரணங்களையும் இது எடுத்துக்காட்டும்,” என்றார் அவர்.