சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணரும் ‘உச்சம்’ கலைப்போட்டியை சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் மீண்டும் நடத்துகிறது.
இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 4 மணிவரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.
‘உச்சம் 2025’ பாடல், நடனம், குறும்படம் என்ற மூன்று முக்கியப் பிரிவுகளின்கீழ் நடத்தப்படுகிறது.
14 முதல் 35 வயதுக்குட்பட்ட இளையர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவர்.
இவ்வாண்டு கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்கப் பதிவுசெய்த காரணத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னர் ஒரு முன்னோட்டச் சுற்று நடத்தப்பட்டது. இதில், பாடல் பிரிவைத் திருவாட்டி விக்னேஸ்வரியும், குறும்படப் பிரிவை திரு செல்வா அவன்ட்டும் மதிப்பீடு செய்தனர்.
முன்னோட்டச் சுற்றின் முடிவில், இறுதிப் போட்டிக்கு ஆறு பாடல் மேடை நிகழ்ச்சிகளும், ஐந்து நடன மேடை நிகழ்ச்சிகளும், மூன்று குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இறுதிச்சுற்றை உள்ளூர்ப் பிரபலங்களான செல்வி பாரதி ராணி, திரு அரவிந்த், திரு எபி சங்கரா, திரு சரவணன் அய்யாவு ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நடுவர் குழு மதிப்பிடவுள்ளது.
வெற்றியாளர்களுக்கு முறையே முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக $500, $300, $200 பரிசுத்தொகையுடன் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு மேலும் உற்சாகத்துடன் பல்வேறு திறமைகளும் புதுமைகளும் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியைத் தாண்டி, ‘உச்சம் 2025’ இளையர்களுக்கு ஊக்கமும் அதிகாரமும் அளிக்கும் தளமாகவும், தமிழ்மொழி, பாரம்பரியத்தின்மீதான பற்றை வலுப்படுத்தும் மேடையாகவும் திகழ்கிறது.
நிகழ்ச்சிக்கு நுழைவு அனுமதி இலவசம். ஆர்வமுள்ளோர் https://ucham2025.peatix.com என்ற இணையத்தளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.