புதிய ஆண்டில் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடத் தொடங்கிவிட்டனர் இளையர்கள் சிலர்.
கடந்த ஆண்டின் முக்கிய சாதனைகளையும் மைல்கற்களையும் கொண்டாடும் ஒரு வாய்ப்பாகவும் விடுமுறை காலத்தைப் பயன்படுத்த சிலர் எண்ணியுள்ளனர்.
இவ்வாண்டு ஜூன் விடுமுறையில் தனது தந்தையுடன் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் 23 வயது ஆதிரா ஜோஷி.
இந்தப் பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆதிரா எதிர்பார்த்திருப்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. தனது வருவாயில் இந்தப் பயணத்தின் அனைத்து செலவுகளையும் செய்ய உள்ளார் ஆதிரா.
கடந்த ஆண்டு வங்கி ஒன்றி முதல் முழுநேர வேலையைத் தொடங்கிய ஆதிரா, அதைக் கொண்டாடவும் தன் தந்தைக்குத் தனது நன்றி தெரிவிக்கவும் இந்த விடுமுறை பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்.
“எனது தந்தைதான் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதரவு. இதுவரை அவர் எனக்கு செய்த அனைத்திற்கும் திருப்பிக் கொடுப்பதன் முதல் படியாக, நாங்கள் இருவரும் அதிகம் விரும்பும் நாடான ஜப்பானுக்கு அவரை அழைத்து செல்வதில் நான் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்றார் அவர்.
சில சிங்கப்பூர் இளையர்கள், 2025ஆம் ஆண்டில் காதலையும் உறவுகளையும் கொண்டாடவுள்ளனர்.
அண்மையில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடு (பிடிஓ) கிடைத்த மகிழ்ச்சியை காதலர் தினத்தன்று பாரிஸுக்குச் சென்று கொண்டாட திட்டமிட்டுள்ளனர் பா. காயத்திரியும், 25, அவரது வருங்கால கணவரான சு. அருணும், 27.
ஒன்றாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நீண்ட காலமாக ஆசைப்பட்டதாகவும் அந்த ஆசையை நனவாக்குவதற்கான சரியான தருணம் இதுவே என்று இருவரும் முடிவு செய்ததாகவும் காயத்திரி சொன்னார்.
சில மாதங்களுக்கு முன் தனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற 25 வயது த்ரிஷா ரமேஷ் ஆஸ்திரேலியா, ஐரோப்பா முதலிய இடங்களில் நீண்ட கார் பயணங்களை மேற்கொள்ள எண்ணியுள்ளார். ஐரோப்பாவில் ஜெர்மனியில் தொடங்கி நெதர்லாந்து, பிரசல்ஸ், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து முதலிய இடங்களுக்கு குடும்பத்தினருடன் கார் பயணம் செய்ய இவர் திட்டமிட்டுள்ளார்.

