எல்லையிலா மனநிறைவு அளிக்கும் சமூக பராமரிப்பு துறை

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி) வழங்கும் ‘சிசிஏ’ பணியானது மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள், சிகிச்சை இல்லங்கள் ஆகியவற்றுக்குத் திறம்வாய்ந்த பராமரிப்பு ஊழியர்களை உருவாக்குகிறது.

மருத்துவத்துறை திருவாட்டி சசி பிரியா ரவியை 30 ஆண்டுகளாய் அரவணைத்திருந்தது. துணை நோயாளி பராமரிப்பாளராக தாதிகளுடனும் மருத்துவர்களுடனும் அணுக்கமாய் பணிபுரிந்த அவர், நேரடி மருத்துவ பராமரிப்பில் முழுநேரமாக இறங்கியதோ கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான்.

52 வயது திருவாட்டி சசி பிரியா தற்போது 2021 முதல் ரென் சி மருத்துவமனையில் இணை சமூக பராமரிப்பாளராக (சிசிஏ) 16 அந்திமக்கால நோயாளிகளைக் கவனித்து வருகிறார். மனிதவள குறைபாடு கொண்டுள்ள நமது சமூக பராமரிப்புத் துறையில் பணியாற்றும் அவர், களத்தில் இறங்குவதற்கு கனிந்த மனமும் கற்பதற்கான ஆர்வமுமே மிக முக்கியம் என்றார்.

முதியோருக்கு மனமுவந்து சேவை செய்யும் திருவாட்டி சசி பிரியா. படம்: ரென் சி மருத்துவமனை

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி) வழங்கும் ‘சிசிஏ’ பணியானது மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள், சிகிச்சை இல்லங்கள் ஆகியவற்றுக்குத் திறம்வாய்ந்த பராமரிப்பு ஊழியர்களை உருவாக்குகிறது. இவர்கள், முதியோருக்கு தினமும் உகந்த மருத்துவ பராமரிப்பு வழங்குவதுடன் அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பேணுகின்றனர். இல்லவாசிகளின் குடும்பத்தாருடனும் நல்லுறவு கொண்டு முழுமையான நலன் காக்க உழைக்கின்றனர். சிசிஏ, மூத்த சிசிஏ, சமூக பராமரிப்பு அதிகாரி, சமூக பராமரிப்பு நிர்வாகி என ஊழியர்கள் படிப்படியாக பதவி உயரவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது.

மருத்துவமனையில் தான் கழித்த நேரத்தைக் காட்டிலும் தற்போது சிசிஏ பணியில் நோயாளிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டுள்ளார் திருவாட்டி சசி பிரியா. இறுதி நாள்களை எதிர்நோக்கி இருக்கும் மூத்தோரை தூய்மைப்படுத்தி, தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் மனநலனைப் பாதுகாப்பதில் அவரின் பங்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

“சாதாரண மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்வர். அவர்களுடன் குறைவான நேரமே நாங்கள் செலவிடுவதுண்டு. இங்கோ, தங்கியிருக்கும் நோயாளிகளுடன் தினமும் உறவாடுவது மனதுக்கு நெருக்கமாகிவிட்டது,” என்றார் திருவாட்டி சசி பிரியா. சில சமயங்களில் காலஞ்சென்ற நோயாளிகளின் இறுதி சடங்குகள்வரை துணை நிற்கின்றனர், இவரைப் போன்ற சிசிஏ பணியாளர்கள்.

திருவாட்டி சசி பிரியாவின் முந்தைய பணியில் நேரடி மருத்துவ பராமரிப்பு குறைவாகவே இருந்தது. சிசிஏ-க்களின் திறன்களை மெருகூட்டி பணிக்குத் தயார்படுத்தும் பல்வகை பயிற்சித் திட்டங்களை திருவாட்டி சசி பிரியா மேற்கொண்டார். தற்போது, முக்கிய மருத்துவ இயந்திரங்களை எப்படி கையாள்வது, நோயாளிகளின் தேவைகளை எப்படி அணுகுவது முதலியவற்றில் அனுபவம் பெற்று அவர் கைதேர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர், இத்தகைய முன்கள பணிகளை நேரில் நின்று தன்னால் கையாள முடியும் என்று அவர் நம்பியிருக்கமாட்டார். பெருமளவில் சிசிஏ பணி தனது திறனை மேம்படுத்தியதோடு, செயலாற்றுவதில் கூடுதல் நம்பிக்கையும் உறுதியும் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரென் சி மருத்துவமனையில் தமது கவனிப்பில் இருந்தோரில் குறிப்பிட்ட ஒருவரான திரு சான், திருவாட்டி சசி பிரியாவின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், எப்போதும் சிடுசிடுவென விளங்கும் சுபாவமுடையவர். முன்கோபப்படுவதும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதுமாக இருந்த அவர் ஒருமுறை தம்மை அறைய பார்த்ததை நினைவுகூர்ந்தார் திருவாட்டி சசி பிரியா. அப்போதும் பொறுமை காத்து, அவரின் மனபாரத்தை எப்படி போக்கலாம் என்று அவர் எண்ணி இருந்தார்.

திரு சானைப் போல, வெவ்வேறு வகைகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமப்படும் முதியோர்களை சிசிஏ பணியாளர்கள் கையாளவேண்டும். அவர்களின் நடத்தையும் எண்ணமும் சில நேரங்களில் குழந்தைகளைப் போல இருக்கும் என கூறினார் திருவாட்டி சசி பிரியா. எது நிகழ்ந்தாலும், அவர்களிடத்தில் எப்போதும் அன்பும் அக்கறையும் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

80 வயது தாயாரை பராமரித்து வரும் அவருக்கு, முதியோர்கள்மீது தனிப்பட்ட பாசம் உண்டு. ரென் சி மருத்துவமனையில் முதியோர்களின் உடல்நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மனநலனுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவருக்கு புத்துணர்வூட்டும் ஒன்றாகும். ஆடி, பாடி முதியோரை மகிழ்விப்பதில் அலாதி நிறைவு காண்கிறார் திருவாட்டி சசி பிரியா.

முதியோர் பராமரிப்பில் சிறந்தோங்கும் திருவாட்டி சசி பிரியா. படம்: ரென் சி மருத்துவமனை

திரு சான் தமது கடைசி நாள்களை நெருங்கி கொண்டிருந்த சமயத்தை திருவாட்டி சசி பிரியாவால் மறக்க முடியாது. வழக்கமான ஆற்றலும் கோபமும் இன்றி துவண்டு போய் அமைதியாய் இருந்த அவரிடம் அவர் தொடர்ந்து பேசினார். திரு சானை ஆசுவாசப்படுத்த முயன்றார். அவர் இறப்பதற்கு முந்தைய தினம் அவரின் கையைப் பிடித்து வழக்கமாக தான் கூறும் ஆறுதலான வார்த்தைகளைக் கூறி இருந்தார்.

இவ்வழியில் வேலையிடத்தில் ஒரு குடும்ப சூழலை கண்டுகொண்டார் திருவாட்டி சசி பிரியா. தமது கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் கூறி உதவும் சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் அவருக்குப் பல வழிகளில் ஆதரவளித்துள்ளனர். நோயாளிகளின் குடும்பத்தாருடனும் அணுக்கமான உறவு வளர்த்துக்கொள்கின்றனர், திருவாட்டி சசி பிரியா போன்ற சிசிஏ பணியாளர்கள்.

தமது 20 வயதில் முதன்முதலில் புற்றுநோய் பிரிவில் பணி துவங்கியபோது தமது வேலையை திருவாட்டி சசி பிரியா சற்றே வெறுத்தார். ஒருபோதும் மன உளைச்சல் தரக்கூடிய சூழல், நோயாளிகளின் வலி, வேதனை ஆகியவை அவரின் மனதை வெகுவாக உறுத்தின. காலப்போக்கில், நோயாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் வல்லமை தமது பணிக்கு உண்டு என்பதை அவர் உணர்ந்தார்.

எனவேதான், கொவிட்-19 காலத்தின்போது இப்பணியில் தொடரலாமா, ஓய்வுதரும் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கலாமா என அவர் யோசித்தபோதும் மருத்துவ பராமரிப்புத்துறையைக் கைவிட அவருக்கு மனம் வரவில்லை. நண்பர்களின் வாயிலாக சிசிஏ பற்றி அறிய வந்ததன் பின்னர், அதில் ஆர்வம் ஏற்பட்டு இணைந்தார் திருவாட்டி சசி பிரியா.

இப்பணியில் திருவாட்டி சசி பிரியாவுக்கு சிக்கல்கள் இல்லாமல் இல்லை. “மிக நெருக்கமாகிவிட்ட முதியவர்கள் இறந்துபோகும்போது ஏற்படும் வேதனையை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இதயம் கனத்துப்போகும். ஆனால், அவர்கள் கண்ணியமான முறையில் இயற்கை எய்தினர் என்பதும், அதில் நாம் வகித்த பங்கு மிக அர்த்தமுள்ளது என்பதும் மனதுக்கு ஆறுதலளிக்கும்,” என நெகிழ்ந்தார் திருவாட்டி சசி பிரியா.

முன்னனுபவம் இல்லாதோரும் சிசிஏ பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேல் விவரம் அறிய: youalreadycare.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!