மெஹ்ரின் பிர்ஸாதா தெலுங்கு திரையுலக ரசிகர்களின் புதிய கனவுக்கன்னிகளின் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர்.
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பின்னர் தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் இணைந்து நடித்தார்.
அதன் பிறகு தெலுங்குத் திரையுலகில் சிவம்புக் கம்பள வரவேற்பு கிடைத்ததால் அங்கு தீவிர கவனம் செலுத்தி வந்தவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளனர். வசந்த் ரவி நடிப்பில் வெளியான ‘இந்திரா’ படம் தமிழில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உதவும் என நம்புகிறாராம்.
‘மெஹ்ரின் பிர்ஸாதா’ என்பதற்கு, இயற்கை என்பது அர்த்தம் எனச் சொல்பவர், உண்மையாகவே இயற்கையை மிகவும் நேசிக்கிறார். மெஹ்ரின் தந்தை விவசாயப் பின்னணி கொண்டவர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார் தாயார் இல்லத்தரசி.
பத்து வயதிலேயே விளம்பர அழகித் (மாடலிங்) துறையில் நுழைந்துவிட்டார் மெஹ்ரின். பல விளம்பர வாய்ப்புகள் உடனுக்குடன் அமைந்ததால், விளம்பர உலகில் மிக விரைவில் பிரபலமாகிவிட்டார். தெற்காசிய ஆளுமைப் பட்டம் உட்பட சில விருதுகளும் கிடைத்தன.
அந்தச் சமயத்தில்தான் தெலுங்கில் நடிகர் நானியுடன் கிருஷ்ணகாடி ‘வீர பிரேமு கதா’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்பிறகு மெஹ்ரினுக்கு வெற்றிப் படங்களில் ஏறுவதில் எந்தச் சிரமும் ஏற்படவில்லை.
வெங்கடேஷ், தனுஷ், சுனில், தமன்னா என முன்னணி நடிகர்கள், நடிகைகளுடன் பல படங்களில் நடித்து அனுபவம் பெற்றுள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்துள்ள மெஹ்ரின், சத்தமில்லாமல் பஞ்சாபி மொழியிலும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். கடைசியாக இந்தியில் ‘சுல்தானா டில்லி’ என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“இப்படித் திறமைக்கேற்ற வாய்ப்புகளும் நல்ல பெயரும் கிடைத்துள்ளன என்றாலும், தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை விருப்பம். அதற்கு என்னை முழுமையாகத் தயார்படுத்தி வருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு ஒரு படத்தில் நானே தமிழில் வசனம் பேசி நடிக்கும் நாள் வரும்.
“தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது லேசாகப் பொறாமை ஏற்படுகிறது. இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தான் இதற்குக் காரணம். ‘ஜெயிலர்’ படம் தொடங்கி பல தமிழ்ப் படங்கள் என் விருப்பப் பட்டியலில் உள்ளன.
“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. மேலும் பல இயக்குநர்களைக் கொண்ட பட்டியல் தனியாக உள்ளது,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மெஹ்ரின்.
தற்போது வெளியாகி உள்ள ‘இந்திரா’ படம், சைக்கோ கொலையாளியைப் பற்றிய படமாம். இதுவரை இப்படியொரு திகில் படத்தில் நடித்ததில்லை என்று கூறியுள்ள மெஹ்ரின், இந்தப் படத்தில் பயமும் அன்பும் கொண்ட ‘கயல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருவது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார். தற்போது தமிழில் பேசவும் படிக்கவும் பயிற்சி மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறார்.
தனுஷுடன் நடித்த அனுபவம்?
“ஒரு விஷயத்தை எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் தனுஷிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். ‘பட்டாஸ்’ படப்பிடிப்பின்போது எனக்கு தமிழ் அறவே தெரியாது.
“அப்போது தனுஷ் என் தயக்கத்தையும் பயத்தையும் போக்கினார். ‘நானும் உங்களைப் போன்றுதான் இந்தியில் நடிக்கும்போது மிகவும் சிரமப்பட்டேன். சில விஷயங்கள் தெரியாது என்பதை வெளிப்படையாகச் சொல்லி கற்றுக்கொள்வதில் தவறில்லை. எனவே, என்ன சந்தேகம் என்றாலும் என்னைக் கேளுங்கள்’ என்றார் தனுஷ்.
“அவரிடம் கற்ற இந்தப் பாடத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்,” என்கிறார் மெஹ்ரின்.