எல்லையில் உயிரிழந்த தந்தை: உருகும் ருக்மிணி வசந்த்

3 mins read
5bbf184a-f94e-442b-98f5-bb5a50876369
ருக்மிணி வசந்த். - படம்: ஊடகம்

‘அமரன்’ படம் வெளியான பின்னர், இளம் நாயகி ருக்மிணி வசந்தை பலரும் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். காரணம், இவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

வீர தீரச் செயல்களுக்காக இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்படும் அசோக சக்ரா விருதைப் பெற்றவராம்.

“கடந்த 2007ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில்தான் என் தந்தை பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டது.

“அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் என் தந்தை வசந்த் வேணுகோபால் வீர மரணம் அடைந்தார். கர்நாடக மாநிலத்தில் இருந்து அசோக சக்ரா விருது பெற்ற முதல் ராணுவ அதிகாரி என் தந்தைதான்.

“இன்று ‘அமரன்’ படம் குறித்து பலரும் பாராட்டிப் பேசும்போது என் தந்தையின் நினைவுதான் வருகிறது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ருக்மிணி வசந்த்.

கடந்த 2019ஆம் ஆண்டு கன்னடத் திரையுலகில் இவர் அறிமுகமானார். பின்னர் சூட்டோடுசூடாக அதே ஆண்டு இந்தியிலும் நடித்தார். கடந்த 2023ஆம் ஆண்டு இவர் நடித்த மூன்று படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றன.

இதையடுத்து, தென்னிந்தியத் திரையுலகில் வேகமாக முன்னேறும் நாயகிகளின் பட்டியலில் ருக்மிணி பெயரும் இடம்பெற்றது.

இந்நிலையில், கன்னடத்தில் இவர் நடித்த ‘சப்த சாகருலு தாட்டி’ படத்துக்காக சிறந்த தென்னிந்திய நடிகைக்கான விருதைப் பெற்றார்.

அதே படத்துக்காக ‘சைமா’, அனைத்துலக இந்திய திரைப்பட விருது ஆகியவையும் கிடைத்தன. இதையடுத்து ருக்மிணியின் மதிப்பு திரையுலகில் கூடியது.

இந்நிலையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் புதுப்படம் ஒன்றில் நடிக்க ருக்மிணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவ்வளவு நடந்த பிறகு கோடம்பாக்க பிரமுகர்களின் பார்வை இவர் மீது விழாமல் இருக்குமா?

‘ஏஸ்’ என்ற படம், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஆகியவற்றில் ருக்மிணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதனிடையே, கன்னட முன்னணி நாயகர்களில் ஒருவரான சிவராஜ் குமாருடன் ‘பைரதி ரணகல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ருக்மிணி.

இதில் அவர் மருத்துவராகத் திரையில் தோன்றுகிறாராம். ஏற்கெனவே ‘பஹீரா’ என்ற படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார்.

“சிவராஜ்குமாருடன் இணைந்து நடித்துள்ளதை பெருமையாகக் கருதுகிறேன். அதேபோல் மீண்டும் மருத்துவர் வேடத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவர்கள் மீது சிறு வயது முதலே எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

“முறையாக மருத்துவம் கற்றுக்கொள்ள ஏழெட்டு ஆண்டுகள் ஆகும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இரண்டு படங்களில் நடித்து விட்டதால் மருத்துவம் கற்றுக்கொண்டதாக ஆகிவிடாது. எனினும் இந்தப்படத்துக்காக பல விவரங்களை தெரிந்து கொண்டேன்,” என்கிறார் ருக்மிணி.

தனக்குத் தெரிந்த சில மருத்துவர்களுடன் விரிவாகப் பேசினாராம். ‘ஸ்டெதஸ்கோப்’ கருவியை கழுத்தில் அணிவது முதல், ஒரு சிறு பையில் பல்வேறு மருத்துவக் கருவிகளை எடுத்துச் செல்வது வரை பல்வேறு நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டாராம்.

“மருத்துவராகப் பொறுப்புடன் பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஒரு மருத்துவர் சுமந்துசெல்லும் ஒவ்வொரு சிறு கருவியும் மக்களின் உயிர் காக்க உதவும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த வகையில் மீண்டும் ஸ்டெதஸ்கோப் அணிந்து நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்,” என்று சொல்லும் ருக்மிணிக்கு, மாறுபட்ட கதைக்களங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் குறிக்கோளாம்.

‘சப்த சாகருலு தாட்டி’ படத்தில் இவரது நடிப்பு அருமையாக இருந்ததாக ஊடங்களில் பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர். விமர்சகர்களின் இதுபோன்ற வரவேற்புதான் தமக்கு மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதாகச் சொல்கிறார்.

“தந்தையின் மறைவுக்குப்பிறகு அம்மா சுபாஷினி வசந்த்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறார். அவர் அடிப்படையில் சிறந்த பரதநாட்டியக் கலைஞர். போரில் உயிர்நீத்த ராணுவ அதிகாரிகளின் மனைவியருக்கு உதவும் வகையில் கர்நாடகாவில் ஓர் அமைப்பு தோற்றுவித்து வழிநடத்தி வருகிறார்.

“நான், ராணுவப் பள்ளியிலும் பின்னர் விமானப்படை பள்ளியிலும் படித்தேன். பின்னர் லண்டனில் உள்ள ராயல் அகாடமியில் நடிப்புத்துறையில் பட்டம் பெற்றேன்.

“அந்தப் படிப்பு தந்த நம்பிக்கையும் ராணுவ அதிகாரியின் மகளாக இருப்பதால் என்னிடம் இயல்பாகவே உள்ள துணிச்சலும்தான் நடிகையாக நடைபோட வைத்துள்ளது,” என்கிறார் ருக்மிணி வசந்த்.

குறிப்புச் சொற்கள்