அன்புக்கு ஆசைப்பட்ட குழந்தை. ஆனால், அழுகையை நிறுத்த முடியாமல் திணறிய பெற்றோர், குழந்தையை உலுக்கி, மூக்கை, வாயைப் போர்வையால் மூடி, அடித்தனர். கடைசி இரவில் அப்பா கைப்பேசியில் விளையாடிக்கொண்டிருக்க, அம்மா குழந்தையின் முகத்தைப் போர்வையால் அழுத்தி, கொன்றாள்.
இது திரைப்படமன்று. கடந்த வாரம் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட டிரெவர் நியோ யூ ஹின் என்ற எட்டு மாதக் குழந்தையின் கதை.
தங்கள் மகனைத் தொடர்ந்து துன்புறுத்தி, அவன் உயிரிழக்கக் காரணமான அந்த இளம்பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சொன்னார்: “இளமை, அனுபவமின்மை என்பதற்காக கொடூரத்தை மன்னிக்க முடியாது,’’ என்று.
இந்த ஒரு குழந்தையின் மரணம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில், இவ்வாரம் வெளியான சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ‘குடும்ப வன்முறைப் போக்குகள் அறிக்கை 2026’ சொல்லும் உண்மை இன்னும் கவலைக்குரியது. அது நாம் கேட்க விரும்பாத விவரங்களைச் சொல்லுகின்றன.
கடந்த 2025ஆம் ஆண்டில் சமூக அமைப்புகளால் நேரடியாகக் கையாளப்பட்ட சிறார் துன்புறுத்தல் முதல்நிலைச் சம்பவங்களின் எண்ணிக்கை 2,476ஆகக் கூடியதாக அறிக்கை சுட்டுகிறது.
கருணை என்ற சொல்லுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க வேண்டிய வயதில், பள்ளிச் சீருடைக்குள் காயங்களை எப்படி மறைப்பது என்று கற்றுக்கொள்கின்றனர்.
அவர்கள் எப்படித் துன்புறுத்தப்படுகிறார்கள்? அறிக்கை மிகத் தெளிவாகச் சொல்கிறது. 1,421 வழக்குகள் உடல்சார்ந்த தாக்குதல். அதாவது பாதிக்கு மேல்.
‘கண்டிக்கிறேன் என்ற பெயரில் பெற்றோர் எல்லை மீறுகின்றனர்’ என்பதும் அறிக்கை கூறிய உண்மை. கண்டிப்புக்கும் கொடூரத்திற்கும் வித்தியாசம் தெரியாத பெற்றோரா நாம்?
அதில் அதிக ஆபத்துள்ள சம்பவங்களான தீக்காயம், எலும்புமுறிவு, பாலியல் துன்புறுத்தல் போன்றவை 1,917 வழக்குகள். ஆயினும், குடும்ப வன்முறைப் புகார்களுக்கான உதவி எண்ணுக்கு வந்த புகார்கள் ஏறத்தாழ 50% கூடிவிட்டன. அப்படியென்றால் சமூகம் இப்போது தயங்குவதில்லை, புகார் செய்கிறது. அதுதான் ஒரே ஆறுதல்.
தொடக்கத்தில் நாம் படித்த டிரெவர் தனியொரு சம்பவமன்று. சில ஆண்டுகளுக்குமுன் நான்கு வயது மேகன் என்ற சிறுமி தாயாலும் தாயின் காதலனாலும் கொல்லப்பட்டு பீப்பாயில் அடைக்கப்பட்டாள். கடந்த மாதம் பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர் ஏழு குழந்தைகளை இசைக்கருவிகளால் தலையில் அடித்தார். எழுபது வயது முதியவர் பதினொரு குழந்தைகளை 30 ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல் செய்தார்.
இப்படிப் பல சம்பவங்கள் கண்முன்னே நிழலாடுகின்றன.
நம்மை நாமே நேர்மையாக கேட்டுக்கொள்வோம். நம் சமூகத்தில் எத்தனை முறை கேட்டிருக்கிறோம், ‘அடித்து வளர்க்கவில்லை எனில் பிள்ளை கெட்டுப்போய்விடும்’ என்று. இல்லை, அடித்து வளர்த்தால் பிள்ளை செத்துப்போகும் என்பதை டிரெவர், மேகன் கதைகள் சொல்கின்றன.
அன்பு வழியில் கண்டிக்க முடியும். அமைச்சு சொல்வதுபோல நேர்மறையான பிள்ளை வளர்ப்புத்தான் முக்கியத் தீர்வு.
59 விழுக்காட்டுக் குழந்தைகள் குடும்ப அடிப்படையிலான பராமரிப்பில் இருப்பதாக அறிக்கை சுட்டியிருப்பது நம்பிக்கை தருகிறது. ஆனால், 13-18 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினரை வளர்க்க பலர் முன்வருவதில்லை என்பது இன்னொரு சோகம். இப்போது வெளியான அறிக்கையும், அப்போது உயிரிழந்த குழந்தைகளும் இரு வேறு கதைகள் அல்ல.
சிங்கப்பூர்ச் சட்டங்கள் கடுமையானவை, அமைப்புகள் வலுவானவை. ஆனால், சட்டத்தைவிட பக்கத்து வீட்டுக் குழந்தை அழும் சத்தம் கேட்டால், ‘அது அவர்கள் குடும்ப விஷயம்’ என்று கதவைச் சாத்தாமல், உதவி எண்ணை (1800-777-0000) அழைப்பதுதான் இப்போது தேவை.
கடவுள் குழந்தைகளைப் பெற்றோரிடம் நம்பிக் கொடுக்கிறார். நாம் ஒவ்வொருவரும் கண் திறந்தால் மட்டுமே, நாளை இன்னொரு டிரெவர், இன்னொரு மேகனை இழக்காமல் காக்க முடியும்.
