கல்வி என்பது மதிப்பெண்களுக்கு அப்பால் வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத்தர வேண்டும் என்ற நிலையில், செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் மாணவர்களுக்குப் பல்வேறு திறன்களையும் பாதைகளையும் அளிக்கிறது என்கிறார் கணினித்துறை மாணவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இளநிலை நான்காம் ஆண்டில் பயிலும் அவர், தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ வலையொளித் தொடருக்கான நேர்காணலில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
“நேரத்தைச் சேமிக்கவும் திறன்களை மேம்படுத்தவும் ‘ஏஐ’ உதவுகிறது. கணினித்துறை மாணவர்களுக்கு மென்பொருள் நிரலாக்கம் போன்ற பணிகளுக்கு முன்பு இரண்டு நாள்கள் வரை தேவைப்பட்டது. தற்போது ‘ஏஐ’ கருவிகளைப் பயன்படுத்தி 5 முதல் 10 நிமிடங்களில் முடித்துவிடலாம்,” என்றார் கார்த்தி.
இதனால் மிஞ்சும் நேரத்தைச் சமூக சேவை, கலைப் பயிற்சி போன்ற பிடித்தமான பொழுதுபோக்குகளிலோ துறைசார்ந்த புதிய அம்சங்களைக் கற்றுக்கொள்வதிலோ மாணவர்கள் செலவிட முடிகிறது என்று அவர் கூறினார்.
“பல வேலைகளைச் செய்யக்கூடிய ஓர் உதவியாளர் போன்றது ‘ஏஐ’. நிரலாக்கம், கதை, கட்டுரைகள் உருவாக்குவது, புகைப்படம், காணொளிகளைத் தயாரிப்பது எனப் பலவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம். எனினும், அதை எந்த இடத்திற்கு, எந்தக் காரணத்திற்காகப் பயன்படுத்துவது என்ற முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும். அந்த முடிவெடுக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றும் கார்த்தி வலியுறுத்தினார்.
குறுக்கு வழியா? ஆழமான கற்றலா?
“தொடக்கத்தில் மாணவர்கள் விளக்கக்காட்சிக்கான திரைப்பக்கம் (Presentation slide) தயாரிப்பது, ஆய்வுக்கட்டுரை எழுதுவது போன்றவற்றுக்கு ‘ஏஐ’யை ஒரு குறுக்கு வழியாகப் பார்த்தாலும், தற்போது அதன் ஆற்றல் வளர வளர அதை ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கணினி நிரலாக்கத்தில் இளம் பணியாளர்கள் செய்யும் அடிப்படையான நிரல் எழுதும், தவறுகளைத் திருத்தும் வேலைகளை ‘ஏஐ’ செய்யத் தொடங்கியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பற்றிய குழப்பங்கள் நிலவினாலும், சிக்கல்களை வேகமாக அடையாளம் கண்டு, நுட்பமான தீர்வுகளைக் காண்பதில் மனிதர்களின் திறமைக்கே முதலிடம் உள்ளது,” என்று கார்த்தி குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறுவதுபோல, நிரலாக்கம் செய்வது மட்டும் பொறியாளரின் வேலையன்று. சுற்றியுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து தொழில்நுட்பத் தீர்வு காண்பதே முதன்மையானது என்று அவர் விளக்கினார்.
கல்வித் துறையில் ‘ஏஐ’, ஆசிரியர்களின் பங்கு
தற்போது ‘ஏஜென்டிக் ஏஐ’ (Agentic AI) போன்ற புதிய கருவிகள் பலகட்ட வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கற்றல் வழிகாட்டலில் நேரடி ஆசிரியரின் இடத்தை ‘ஏஐ’ முழுமையாக மாற்ற முடியாது என்றார்.
“ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் நேரில் பார்த்துப் புரிந்துகொண்டு கற்பிக்கிறார். ஆனால், தேர்வுக்கு முந்தைய நேரங்களிலோ பாட நேரத்துக்கு அப்பால் சந்தேகங்கள் எழும்போதோ ‘ஏஐ’ பேருதவியாக இருக்கிறது,” என்று கூறிய கார்த்தி, வருங்காலத்தில் ஆசிரியர்-ஏஐ கூட்டணியை எடுத்துக்கொண்டால், “ஆசிரியர்கள் பயிற்சித்தாள் தயாரிப்பது, மதிப்பெண் வழங்குவது போன்ற வேலைகளை ‘ஏஐ’ மூலம் தானியக்கப்படுத்திவிட்டு, மாணவர்களின் கற்றல் பயணத்தில் கூடுதல் கவனம் செலுத்தலாம்,” என்றார்.
பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தாம் நடத்தும் பயிலரங்குகளில், ஆசிரியர்கள் பாடங்களை எளிமையாக்கவும் புகைப்படங்களாக மாற்றவும் ‘ஏஐ’ கருவிகளைப் பயன்படுத்த ஆர்வத்துடன் முன்வருவதாகக் குறிப்பிட்டார். சலிப்பூட்டக்கூடிய பாடங்களையும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் கற்பிக்க ‘ஏஐ’ உதவும் என்றும் அவர் கூறினார்.
படைப்பாற்றலும் தமிழ்ச் சிந்தனையும்
“தாய்மொழியில் சிந்தித்துப் படைப்புகளை உருவாக்குபவர்கள் தங்கள் சொந்தச் சிந்தனைத் திறனை ‘ஏஐ’யிடம் தாரை வார்த்துவிடக் கூடாது. படைப்பை உருவாக்கியபின், தரவுகளைச் சரிபார்க்கவும் ஆய்வுகளுக்கும் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். போலியான தகவல்கள், பதிப்புரிமை மீறல்கள் (Copyright infringement) போன்ற தவறுகளுக்கு ‘ஏஐ’ காரணமன்று; அதைத் தவறாகப் பயன்படுத்தும் மனிதர்களே காரணம்,” என்றார் அவர்.
‘ஏஐ’ நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தாலும், சரியான வழியில் மேற்கோள்காட்டி, பொறுப்புடன் பயன்படுத்துவது பயனாளரின் கைகளில்தான் உள்ளது.
எதிர்காலத் தலைமுறைக்கு அறிவுரை
“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள், உங்கள் வேலைகளில் எங்கெல்லாம் அது உதவ முடியுமோ அங்கெல்லாம் அதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் வருங்காலம். ஆனால் உங்கள் சிந்தனைத் திறனையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் அதனிடம் முழுமையாக இழந்துவிடாதீர்கள். ‘ஏஐ’யைப் பயன்படுத்தி உங்களை மேலும் திறமைசாலியாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று எதிர்காலத் தலைமுறையினரை கார்த்தி கேட்டுக்கொண்டார்.
