ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே! என்ற பாடலுக்கேற்ப, தமிழன் செல்லும் இடமெல்லாம் சிறப்பு. அவன் தன்னை மட்டும் அந்த இடத்துக்குக் கொண்டுசெல்வதில்லை.
தாய்மொழி, தமிழ்க் கலைகள், கலாசாரம், தமிழர் பண்பாடு, உணவு வகைகள், ஆன்மிகம் போன்ற பலவற்றையும் தன்னோடு கொண்டுசென்று, தான் வாழும் இடத்தில் ஆழப் பதிய வைக்கிறான்.
அந்த வகையில், சிங்கப்பூரிலிருந்து பயணப் படகு மூலம் 45 நிமிடப் பயணத் தொலைவில் அமைந்துள்ள பாத்தாம் தீவில் தமிழ்மொழி, தமிழ்க் கலைகள், தமிழர் பண்பாடு, உணவு வகைகள், இறை வழிபாடு என்று அனைத்தும் உண்டு.
அங்கு பணியாற்ற வந்த இந்திய நாட்டுத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை இன்றுவரை கட்டிக்காத்து வருகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு அவற்றை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். மேலும், குடும்பங்களின் ஒன்றிணைப்புக்கும் அவர்களின் முயற்சி வழிவகுக்கிறது. அந்த வகையில் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
பாத்தாமில் பணியாற்ற வந்த தமிழர்கள் கடுமையாக உழைத்து உயர்பதவிகளை வகிக்கின்றனர். அவர்களில் பலர் சொந்த நிறுவனங்களை நிறுவி, தமிழ்நாட்டு ஆடவர்க்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நம் சான்றோர் வாக்கு. அதற்கேற்ப, 2005ஆம் ஆண்டில் இறை வழிபாட்டுக்காக, பாத்தாம் தீவில் உள்ள பாலி இந்துக் கோயில் வளாகத்தில் முறையான அனுமதி பெற்று, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோயிலைத் தென்னிந்திய சாயலில் கட்டி முடித்து, குடமுழுக்கும் செய்து வைக்கப்பட்டது.
அது முதல் பாத்தாம் தீவு மக்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, வெளிநாட்டுத் தமிழர்களும் அந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
அத்தீவில் தமிழ் தழைத்தோங்கி நிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையில்லை.
தொடர்புடைய செய்திகள்
பாத்தாம் தமிழ்ச்சங்கம் 2018 ஜனவரியில் தொடங்கப்பட்டது. அப்போது அதில் தொடக்க உறுப்பினர்களாக 30 பேர் இருந்தனர். தற்போது அதில் 310 பேர் உறுப்பினர்கள் துடிப்புடன் செயல்படுகின்றனர்.
அண்மையில், 2026 பிப்ரவரி 8ஆம் தேதியன்று, பாத்தாம் தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் முரசு செய்திக் குழுவுடன் நானும் சென்றிருந்தேன்.
8ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ந்து தமிழ்ப் பண்பாடு மற்றும் பொங்கல் பண்டிகை தொடர்பான பற்பல நிகழ்ச்சிகளைப் படைத்து வியக்க வைத்தனர் பாத்தாம்வாழ் தமிழர்கள்.
அத்துடன், 24 வகையான தமிழ்ப் பாரம்பரிய உணவுவகைகளை அவர்களே சமைத்து, வாழை இலையில் பரிமாறி வந்தோரைப் பரவசப்படுத்தினர்.
பாத்தாம் தமிழ்ச் சமூகம் மாதாந்தர சமூக நடவடிக்கைகளைத் தவறாமல் நடத்துகிறது. ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் பிற தொண்டு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குகிறது.
மேலும், பொது இடங்கள், கடற்கரைகள் போன்ற சுற்றுலாத் தலங்களைச் சுத்தம் செய்தல், இந்தோனீசியாவில் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை அளித்தல் போன்ற சமூக சேவை நடவடிக்கைகளிலும் பாத்தாம் தமிழ் சமூகம் பங்கேற்கிறது.
இப்படியாக, ஓர் இந்தோனீசியத் தீவில், பெரும்பான்மை இந்தோனீசிய மக்களுடன் வாழும் தமிழர்கள், அங்கு மதிப்புக்குரிய சமூகத்தினராகப் பார்க்கப்படுகின்றனர், மதிக்கப்படுகின்றனர் என்பதை அறியும்போது, தமிழர்களாக நமக்கும் பெருமையாக உள்ளது.
வாழ்க தமிழ்! மேன்மேலும் வளர்க தமிழர்கள்!

