வீழ்ச்சியிலிருந்து அனுபவப் புரட்சிவரை

மறுமலர்ச்சி கண்டுவரும் திரையரங்குகள்

வீழ்ச்சியிலிருந்து அனுபவப் புரட்சிவரை

4 mins read
ace69c99-ddb4-48ba-b261-5ebb95f9749f
ஷா தியேட்டர்ஸ் லிடோவில் பழைய ஐமேக்ஸ் திரையைக் கீழே இறக்கும் பணியாளர்கள். - படம்: ஷா தியேட்டர்ஸ்

செய்தி: சித்தார்த் பிள்ளை

இருள் தழுவிய அரங்கம், ஒளிரும் பிரம்மாண்டமான வெள்ளித்திரை, கதாபாத்திரங்களின் அறிமுகக் காட்சியின்போது எழும் காதடைக்கும் ஆரவாரம்.

இப்படிச் சிங்கப்பூரர்களை மகிழ்வித்து பல அனுபவங்களைத் தந்த திரையரங்குகள், இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கின்றனவா? ‘கேத்தே சினிபிளெக்சஸ்’ சிங்கப்பூரில் உதித்து, ஏறத்தாழ 86 ஆண்டுகாலம் செயல்பட்ட திரையரங்கு.

1952ஆம் ஆண்டு சிங்கப்பூர் திரையரங்கு ஒன்றில் முப்பரிமாண  வண்ணத் திரைப்படமான ‘புவானா டெவில்’ திரையிடப்பட்டபோது,  ‘போலரைஸ்டு’ கண்ணாடி அணிந்து படம் பார்த்த ரசிகர்கள்.
1952ஆம் ஆண்டு சிங்கப்பூர் திரையரங்கு ஒன்றில் முப்பரிமாண வண்ணத் திரைப்படமான ‘புவானா டெவில்’ திரையிடப்பட்டபோது, ‘போலரைஸ்டு’ கண்ணாடி அணிந்து படம் பார்த்த ரசிகர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடுமையான நிதி நெருக்கடியால் 2025ஆம் ஆண்டு தனது கதவுகளை ‘கேத்தே சினிபிளெக்சஸ்’ நிரந்தரமாக மூடியது.

“பல தலைமுறை சிங்கப்பூரர்களின் நினைவுகளைச் சுமந்த ஒரு சகாப்தத்தின் மௌன மரணம்,” என்றார் ஓய்வுபெற்ற 70 வயது சமூக ஊழியர் திரு வெற்றிமாறன்.

இந்தத் துயர நிலை கேத்தேயுடன் நின்றுவிடவில்லை.

32 ஆண்டுகளாகப் பலரை உற்சாகப்படுத்திய ‘தியோங் பாரு பிளாசா’ கிளையை ‘கோல்டன் வில்லேஜ்’ நிறுவனம் மார்ச் 25ஆம் தேதி மூடிவிட்டது.

தியோங் பாரு பிளாசாவில் செயல்பட்ட கோல்டன் வில்லேஜ் திரையரங்கம் 2025 மார்ச்சில் மூடப்பட்டது.
தியோங் பாரு பிளாசாவில் செயல்பட்ட கோல்டன் வில்லேஜ் திரையரங்கம் 2025 மார்ச்சில் மூடப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வணிகத் திரையரங்குகள் மட்டுமல்ல, கலைத் திரைப்படங்களையும் தன்முயற்சிப் படைப்புகளையும் கொண்டாடிய ‘தி புரொஜெக்டர்’ திரையரங்கமும் 2025ஆம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டது.

தன்முயற்சிப் படைப்புகளை வெளியிட்டுவந்த திரையரங்கான ‘தி புரொஜெக்டர்’, 2025 ஆகஸ்ட் 23ஆம் நாள் அதிகாரபூர்வமற்ற முறையில் விடைபெற்றது.
தன்முயற்சிப் படைப்புகளை வெளியிட்டுவந்த திரையரங்கான ‘தி புரொஜெக்டர்’, 2025 ஆகஸ்ட் 23ஆம் நாள் அதிகாரபூர்வமற்ற முறையில் விடைபெற்றது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓடிடி தளங்களின் அசுரப் பாய்ச்சலே இந்தப் பெருமாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

திரையரங்காக மாறிய வீட்டின் வரவேற்பறை

“நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற தளங்கள் இன்று ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையையும் தனிப்பட்ட திரையரங்கமாக மாற்றிவிட்டன,” என்கிறார் அடிக்கடி ஒடிடி தளங்களில் படங்கள் பார்க்கும் 48 வயது திரு ஷிவரத்தினம் கிருஷ்ணன்.

“நேரக் கட்டுப்பாடின்றி, விரும்பிய படங்களை விரும்பிய நேரத்தில் காணும் எல்லையற்ற சுதந்திரம் கிடைத்துவிட்டது,” என்கிறார் அவர்.

“திரையரங்கிற்குச் செல்வோர் நுழைவுச்சீட்டு, சிற்றுண்டிகளையும் சேர்த்து குறைந்தது 20 வெள்ளியேனும் செலவுசெய்வர்.

“மாறாக, ஒரு மாதத்திற்கான முழுமையான சந்தாவை நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற தளங்களுக்குக் கொடுத்துவிட்டால் வீட்டில் இருந்தவாறே படம் பார்த்து மகிழலாம். நேரமும் பணமும் மிச்சமாகிறது,” என்றார் இல்லத்தரசி சுமதி இளங்கோ.

ஓடிடி தளங்கள் வசதியானவைதான். ஆனால், திரையரங்கு தரும் அனுபவத்தை வீட்டிலேயே பெற முடியுமா?

“கைப்பேசித் திரைகளோ வீட்டுத் தொலைக்காட்சிகளோ அந்தச் சமூக உணர்வை வழங்க இயலாது. நூறு பேரோடு இணைந்து படம் பார்க்கும் அனுபவத்தை வீட்டு இருக்கைகள் தந்துவிட முடியாது. அந்த உணர்வுபூர்வமான பிணைப்புதான் மக்களை மீண்டும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி ஈர்க்கிறது,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் அட்ரின் மனோகர்.

ஷா தியேட்டர்ஸ்

இத்தகைய சூழலில், இன்றைய பார்வையாளர்களுக்குத் தேவை வெறும் திரைப்படமன்று, ஒரு முழுமையான, பிரம்மாண்டமான அனுபவம் என்ற உத்தியைக் கையில் எடுத்துள்ளது ‘ஷா தியேட்டர்ஸ்’.

ஷா தியேட்டர்ஸ் லிடோவில் பொருத்துவதற்கான புதிய ஐமேக்ஸ் திரையைப் பெற்றுக்கொள்ளும் பணியாளர்கள்.
ஷா தியேட்டர்ஸ் லிடோவில் பொருத்துவதற்கான புதிய ஐமேக்ஸ் திரையைப் பெற்றுக்கொள்ளும் பணியாளர்கள். - படம்: ஷா தியேட்டர்ஸ்

மௌனப் படங்களின் சகாப்தத்தில் தொடங்கியது அதன் பயணம். இன்று அதிநவீன சொகுசு அரங்குகளுடன் இயங்குகிறது.

“பார்வையாளர்களை அவர்களின் வீட்டு மெத்திருக்கைகளில் இருந்து எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும். அதற்கு ஒரு வலுவான காரணம் தேவைப்படுகிறது,” எனக் கூறினார் ஷா நிறுவனத்தின் இயக்குநர் மார்க் ஷா.

2026 பிப்ரவரி 9 அன்று ஷா தியேட்டர்ஸ் லிடோவின் புதிய ‘லுமியர் கிராண்ட்’ அரங்கில், ஷா நிறுவனத்தின் இயக்குநர் மார்க் ஷா.
2026 பிப்ரவரி 9 அன்று ஷா தியேட்டர்ஸ் லிடோவின் புதிய ‘லுமியர் கிராண்ட்’ அரங்கில், ஷா நிறுவனத்தின் இயக்குநர் மார்க் ஷா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதன் வெளிப்பாடே, ஆர்ச்சர்ட் சாலை ‘லிடோ’ திரையரங்கில் அறிமுகமான ‘லுமியர் கிராண்ட்’.

ஷா தியேட்டர்ஸ் லிடோவின் புதிய ‘லுமியர் கிராண்ட்’ அரங்கம்.
ஷா தியேட்டர்ஸ் லிடோவின் புதிய ‘லுமியர் கிராண்ட்’ அரங்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

500 இருக்கைகள் கொண்ட வழக்கமான அரங்கம், 331 அதிநவீன சொகுசு இருக்கைகள் கொண்ட விசாலமான அரங்கமாக உருமாறியுள்ளது.

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள, சிங்கப்பூரின் முதலாவது அடுத்த தலைமுறை ‘ஐமேக்ஸ் வித் லேசர்’அரங்கில் லேசர் புரொஜெக்டரை இயக்குகிறார் ஒளிபரப்பாளர் ரிட்வான் ஷெரீப். இது சிங்கப்பூரின் நான்காவது ஐமேக்ஸ் திரையரங்கம் என்றாலும், லேசர் வசதியுடன் கூடிய முதல் ஐமேக்ஸ் அரங்கம் இதுவேயாகும். 
ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள, சிங்கப்பூரின் முதலாவது அடுத்த தலைமுறை ‘ஐமேக்ஸ் வித் லேசர்’அரங்கில் லேசர் புரொஜெக்டரை இயக்குகிறார் ஒளிபரப்பாளர் ரிட்வான் ஷெரீப். இது சிங்கப்பூரின் நான்காவது ஐமேக்ஸ் திரையரங்கம் என்றாலும், லேசர் வசதியுடன் கூடிய முதல் ஐமேக்ஸ் அரங்கம் இதுவேயாகும்.  - The Straits Times

காட்சிப் பிரம்மாண்டத்தின் உச்சமாக, 4K லேசர் மற்றும் 12 சேனல் ஒலியமைப்புடன் கூடிய ‘ஐமேக்ஸ்’ பார்வையாளர்களைக் காட்சியின் மையத்திற்கே அழைத்துச் செல்கிறது.

421 இருக்கைகள் கொண்ட ஷா தியேட்டர்ஸ் லிடோவின் ஐமேக்ஸ் அரங்கம்.
421 இருக்கைகள் கொண்ட ஷா தியேட்டர்ஸ் லிடோவின் ஐமேக்ஸ் அரங்கம். - படம்: சாவ்பாவ்

குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைக் கவர, சாதாரண இருக்கைகளுக்குப் பதிலாக வண்ணமயமான ‘பீன் பேக்’ இருக்கைகள் கொண்ட ‘டிரீமர்ஸ்’ அரங்கமும் ஷா நிறுவனத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

வண்ணமயமான பீன் பேக் இருக்கைகளைக் கொண்ட ஷா தியேட்டர்ஸ் பாலஸ்டியரின் ‘டிரீமர்ஸ்’ அரங்கம்.
வண்ணமயமான பீன் பேக் இருக்கைகளைக் கொண்ட ஷா தியேட்டர்ஸ் பாலஸ்டியரின் ‘டிரீமர்ஸ்’ அரங்கம். - படம்: ஷா தியேட்டர்ஸ்

கோல்டன் வில்லேஜ்

ஷா மட்டுமின்றி, கோல்டன் வில்லேஜ் நிறுவனமும் ‘கோல்ட் கிளாஸ்’ மற்றும் ஆசியாவின் மாபெரும் திரைகளில் ஒன்றான ‘ஜிவி மேக்ஸ்’ மூலம் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

விவோசிட்டி ‘ஜிவி கோல்ட் கிளாஸ்’ அரங்கில் உள்ள பார்சிலோனா இருக்கைகள், சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களில் பயன்படுத்தப்படும் அதே ‘நாப்பா’ தோலால் செய்யப்பட்டவை.
விவோசிட்டி ‘ஜிவி கோல்ட் கிளாஸ்’ அரங்கில் உள்ள பார்சிலோனா இருக்கைகள், சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களில் பயன்படுத்தப்படும் அதே ‘நாப்பா’ தோலால் செய்யப்பட்டவை. - படம்: கோல்டன் வில்லேஜ்

அதுமட்டுமின்றி, உலகளாவிய கே-பாப் இசைக்குழுக்களின் கச்சேரிகளை நேரலையாக ஒளிபரப்பி, திரையரங்கின் பரிமாணத்தையே இந்நிறுவனங்கள் விரிவுபடுத்தியுள்ளன.

ஒருபுறம் அதிநவீன சொகுசு வசதிகள் பார்வையாளர்களை ஈர்க்க, மறுபுறம் சினிமா கொண்டாட்டத்தின் உண்மை வடிவமாகத் திகழ்கிறது கோல்டன் மைல் டவரில் அமைந்துள்ள ‘கார்னிவல் சினிமாஸ்’.

கோல்டன் மைல் டவர், பீச் ரோட்டில் அமைந்துள்ள கார்னிவல் சினிமாஸில் நடைபெற்ற ‘கூலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது (FDFS), ரஜினிகாந்தின் பதாகைக்கு ரசிகர்கள் புதிய மலர் மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர்.
கோல்டன் மைல் டவர், பீச் ரோட்டில் அமைந்துள்ள கார்னிவல் சினிமாஸில் நடைபெற்ற ‘கூலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது (FDFS), ரஜினிகாந்தின் பதாகைக்கு ரசிகர்கள் புதிய மலர் மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். - படம்: சுந்தர நடராஜ்

முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் ஒவ்வொரு முறையும், இந்தத் திரையரங்கம் தனது பெயருக்கேற்ப ஒரு மாபெரும் ‘கார்னிவலாக’ (திருவிழாவாக) உருமாறிவிடுகிறது.

கிட்டத்தட்ட ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த அரங்கில், தமிழ்த் திரைப்படம் வெளியாகும்போது ஏற்படும் அதிர்வலைகள் அலாதியானவை.

திரையில் துள்ளலான பாடல்கள் ஒலிக்கும்போது, ரசிகர்கள் சிலர் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து திரைக்குமுன் சென்று நடனமாடும் காட்சிகளும் இங்கு அரங்கேறுவதுண்டு.

இப்படியிருக்க, திரையரங்குகளின் எதிர்காலம் என்ன? அவை காலப்போக்கில் அழிந்துவிடுமா?

“நிச்சயமாக இல்லை,” எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார் 34 வயதான ஊடக ஆய்வாளர் கயல்விழி.

“வணிக நடைமுறை இயல்பை உற்று நோக்கினால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; மாறாக, இன்றைய நவீன திரைத்துறையை இயக்கும் இரு வேறு சக்கரங்கள் என்பது வெள்ளிடைமலை,” என்பது அவரது கருத்து.

பிரம்மாண்டத்தை அளவிடும் உரைகல்

ஒரு திரைப்படத்தின் உண்மையான சந்தை மதிப்பையும் பிரம்மாண்டத்தையும் அளவிடும் முதல் உரைகல்லாக இன்றும் திரையரங்குகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

அங்கு முதல் சில வாரங்களில் ஈட்டப்படும் வசூலும், மக்கள் அளிக்கும் நேரடி வரவேற்பும்தான் பின்னர் ஓடிடி தளங்களில் ஒரு படம் விற்கப்படும் விலையைத் தீர்மானிக்கின்றன.

எளிமையாகச் சொன்னால், திரையரங்கம் என்பது ஒரு திரைப்படத்தின் ‘அறிமுக மேடை’ என்றால், ஓடிடி என்பது அதன் ‘நிரந்தரப் பெட்டகம்’.

சில திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவதும் உண்டு. ஆனால், அவை பெரும்பாலும் அந்தந்த ஓடிடி தளங்களாலேயே தயாரிக்கப்படும் படைப்புகளாக உள்ளன.

காலம் மாறலாம், தொழில்நுட்பம் மேம்படலாம். ஆனால், ஒரு படைப்பைத் திரையரங்கில் காண்பதா அல்லது கைப்பேசியில் காண்பதா என்பது வெறும் தொழில்நுட்பத் தெரிவு மட்டுமன்று. அது ஒரு வாழ்வியல் ரசனை.

இறுதியில், பார்வையாளர்களுக்குத் தேவைப்படுவது வெறும் கதைகள் மட்டுமல்ல, அந்தக் கதைகளோடு அவர்கள் தங்களை உணர்வுபூர்வமாக இணைத்துக்கொள்ளும் ஒரு களம்.

அந்தக் களம் தனிமைக்கான வசதியா அல்லது பலரோடு இணைந்து கொண்டாடும் அனுபவமா? இந்தக் கேள்விக்கான விடையைத் தேடித்தான் சிங்கப்பூரின் திரையரங்குகள் இன்று தங்களை முற்றிலுமாக உருமாற்றிக் கொண்டுள்ளன.

தற்போதைய இந்த ‘அனுபவப் புரட்சி’, காலம் எழுப்பியுள்ள அந்தக் கேள்விக்கான ஒரு புதிய தேடல் மட்டுமே!

குறிப்புச் சொற்கள்