பிள்ளைகளுக்குப் புதிய தொழில்களை அறிமுகம் செய்த குடும்ப விழா

பிள்ளைகளுக்குப் புதிய தொழில்களை அறிமுகம் செய்த குடும்ப விழா

3 mins read
a66b257e-0fd3-419c-ad53-861374512922
நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பாளர்களுடன் சிறப்பு விருந்தினர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

பணிச்சுமை, பள்ளி என அன்றாட வேலைச் சுழற்சியிலிருந்து விடுபட்டு குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் நேரம் செலவிட ஏதுவாகக் குடும்பம், குழந்தைகள் அனுபவ விழாவுக்கு (Family Little Explorers Day) ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசியக் குடும்ப விழா 2026இன் ஓர் அங்கமாக மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியும் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியும் இணைந்து இந்தக் குடும்ப விழாவை நடத்தின.

விஸ்மா கேலாங் சிராய் வளாகத்தில் ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற விழாவில் ஏறத்தாழ 1,500 பேர் பங்கேற்று மகிழ்ந்தனர்.

குடும்பத்துடன் குதூகலிக்கும் வகையில் நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கான பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன.

பிரேடல் ஹைட்ஸ், கேலாங் சிராய், கெம்பாங்கான், மரீன் பரேட், மெக்பர்சன், மவுண்ட்பேட்டன் ஆகிய வட்டாரங்கள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.

உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் துணை அமைச்சர் கோ பெய் மிங்கும் மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும், நாடாளுமன்ற நாயகருமான சியா கியன் பெங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா பாங், மவுன்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸு கீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்குமார் ராஜேந்திரன் (இடமிருந்து இரண்டாவது), அர்ச்சனா சதீ‌ஷ்குமார் (இடமிருந்து நான்காவது).
குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்குமார் ராஜேந்திரன் (இடமிருந்து இரண்டாவது), அர்ச்சனா சதீ‌ஷ்குமார் (இடமிருந்து நான்காவது). - படம்: லாவண்யா வீரராகவன்

விழாவின் நிகழ்ச்சிகளும் அங்கங்களும் பங்கேற்கும் ஒவ்வோர் குடும்பத்துக்கும் அழகான நினைவுகளைப் பரிசளிக்கும் என நம்புவதாகத் திரு கோ குறிப்பிட்டார்.

பல்வேறு வல்லுநர்கள், ஊழியர்கள் மேற்கொள்ளும் பணிகளையும், அவர்களது தோற்றங்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் ‘அவர்களைப் போல பாவனை செய்தல்’ (Career Role-Play) அடிப்படையில் நிகழ்ச்சியின் பல அங்கங்கள் அமைந்திருந்தன.

‘ஒரு திடல்தட வீரராகக் கனவு காணுங்கள்’ (Dream to be an Athlete) எனும் கருப்பொருளில் கூடைப்பந்து, காற்பந்து, ‘மினி கோல்ஃப்ந போன்ற விளையாட்டுப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் பங்கேற்ற பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன.

மேலும், குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளை ஊக்குவிக்கும் வகையில் நான்கு முக்கியத் தொழிற்பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிள்ளைகள் அந்தப் பிரிவுகளில் அந்தத் தொழில்கள் குறித்துத் தெரிந்துகொண்டனர்.

தீயணைப்பு மீட்பு மண்டலம், மருந்தகம், கட்டுமான, பொறியாளர் மண்டலம், காவல்துறை, துப்பறிவாளர் மண்டலம் ஆகிய நான்கிலும் பிள்ளைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற அங்கங்களைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர் துணை அமைச்சர் கோ பெய் மிங்.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற அங்கங்களைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர் துணை அமைச்சர் கோ பெய் மிங். - படம்: மக்கள் கழகம்

அத்துடன், செயற்கை நுண்ணறிவு நிழற்படக்கூடத்தில் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான தீயணைப்பு வீரர், விமானி, விஞ்ஞானி போன்ற பல தோற்றங்களை ஏற்றுப் படமெடுத்துக்கொண்டனர்.

அறிவியல் தொடர்பான சோதனைகள், ‘நின்டெண்டோ ஸ்விட்ச்’ (மரியோ கார்ட்), ‘பிளேஸ்டேஷன்’ (எஃப்1) போன்ற நவீன கணினி விளையாட்டுகள் பல வயதினரையும் கவர்ந்தன.

“குடும்பத்தினர், நண்பர்களுடன் வந்துள்ளோம். என் மகள் தேவன்யா நடனமாடுவது முதன்முறை. உற்சாகத்துடன் பங்கேற்றோம். பணிச்சுமையின் காரணமாகத் தொடர்ந்து ஓடும் நிலையில் சற்றே ஓய்வாக, பலருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி,” என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநர் சரத்குமார் ராஜேந்திரன், 36.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற விளையாட்டுகளையும் தின்பண்டங்களையும் குழந்தைகள் விரும்பியதாகவும் சரத்குமார் ராஜேந்திரன் சொன்னார்.

“இந்நிகழ்ச்சியில் எங்கள் மகள் சாய்திரு‌ஷ்யா நடனமாடினார். அதைக் கண்டதிலும் குடும்பத்தினர், நண்பர்களோடு வந்து பங்கேற்றதிலும் மகிழ்ச்சி,” என்று தெரிவித்தனர் மெக்பர்சன் குடியிருப்பாளர்களான அர்ச்சனா - சதீ‌ஷ்குமார் இணையர்.

குறிப்புச் சொற்கள்
மக்கள் கழகம்குடும்பப் பிணைப்புசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகுடும்பம்பிள்ளை