சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும் தமிழாசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தொடங்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்திற்கு இது பவள விழா ஆண்டு.
அறுபது உறுப்பினர்களுடன் 1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோற்றம் கண்ட இச்சங்கம், 75 ஆண்டுகளாகத் தமிழ்மொழியையும் அதனைத் தாங்கிப் பிடிக்கும் ஆசிரியர்களையும் ஒருசேரக் காத்து வருகிறது.
தமிழாசிரியர்களின் நலனையும் திறன்மேம்பாட்டையும் ஒரு கண்ணாகவும் கல்விக் கொள்கைகள்வழி தமிழ்மொழிக் கல்வியை மேம்படுத்துவதை மற்றொரு கண்ணாகவும் கருதிச் செயல்படும் சங்கம், தனது நெடிய வரலாற்றில் சாதித்தவை பல, எதிர்கொண்ட சவால்கள் பல.
சங்கத்தின் முதல் தலைவர் எம்.ஜேசுதாசன் முதல் தற்போதைய தலைவர் தனபால் குமார் வரையில் பலரும் சங்கத்தின் இலக்கை எட்ட ஆசிரியர் பெருமக்களுடன் கைகோத்து உழைத்துள்ளனர்.
சம உரிமைகளுக்கான போராட்டம்
சங்கம் சாதித்தவற்றில் முதன்மையானது தமிழாசிரியர்களின் உரிமை.
1956ஆம் ஆண்டில் ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தைத் தமிழாசிரியர்களுக்கும் பெற்றுத் தரப் போராடிய சங்கத்தின் உரிமைக்குரல் அங்கீகரிக்கப்பட்டது.
கல்வி அமைச்சில் தேர்வு அதிகாரி, கண்காணிப்பாளர் போன்ற பொறுப்புகளில் தமிழ் தெரிந்த ஆங்கில ஆசிரியர்களே நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழாசிரியர்களே கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையைக் கல்வி அமைச்சு 1976ல் நிறைவேற்றியது.
2002 முதல் 2020 வரை சங்கத்தின் தலைவராகச் செயலாற்றிய திரு சி. சாமிக்கண்ணுவின் தலைமையில், கல்வி அமைச்சில் தமிழாசிரியர்கள் முக்கியப் பொறுப்புகள் வகிக்க வேண்டும் என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் விளைவாக, 2014ல் கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவிற்கு முதன்முதலில் திருவாட்டி சாந்தி செல்லப்பன் துணை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
உள்ளூரில் தமிழ்ப் பட்டக்கல்வி
மலாயாப் பல்கலைக்கழகம் மலேசியாவிற்குச் சென்ற பிறகு, ஆசிரியர்கள் தமிழில் பட்டக்கல்வி பெற இந்தியாவிற்குச் செல்லவேண்டிய சூழல் நிலவியது.
இதுகுறித்து அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த தற்போதைய அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் சங்கம் தொடர்ந்து பரிந்துரைத்த பிறகு, 2006ஆம் ஆண்டில் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பட்டக்கல்வி தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மற்ற மொழிகளைப் போலவே தமிழாசிரியர்களுக்கும் பட்டக்கல்வியோடு கூடிய ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைச் சங்கம் முன்வைத்தது.
2014ஆம் ஆண்டில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசியக் கல்விக் கழகத்தில் பட்டக்கல்வியோடு கூடிய தமிழாசிரியர் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் பேராசிரியர் பற்றாக்குறை இருந்தபோது, இந்தியாவிலிருந்து பகுதிநேர பேராசிரியர்களை வரவழைத்தும், உள்ளூர் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டன.
உலகத் தமிழாசிரியர் மாநாடு
உலகளவில் தமிழ் கற்பித்தலை மேம்படுத்த விழைந்து, 1992ஆம் ஆண்டு உலகத் தமிழாசிரியர் மாநாட்டிற்குச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்தது.
இதன்மூலம், ‘உலகத் தமிழாசிரியர் பேரவை’ என்னும் அமைப்புக்கு அடித்தளமிட்டு, அதன் தலைமையகத்தைச் சிங்கப்பூரில் நிறுவவும் சங்கம் வழிகோலியது.
“சிங்கப்பூரின் கற்றல் - கற்பித்தல் முறைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்பதால், உலக நாடுகள் சிங்கப்பூரின் பங்களிப்பை எப்போதும் பெரிதும் எதிர்பார்க்கின்றன,” என்கிறார் உலகத் தமிழாசிரியர் பேரவையின் தலைவராக அன்றுமுதல் இன்றுவரை நீடித்துவரும் திரு சாமிக்கண்ணு.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை அம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் 16வது உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது.
சங்கத்திற்கெனத் தனி முகவரி
சொந்தமாக இடங்களை வாங்கியது சங்கத்தின் நிதிப் பாதுகாப்பிற்கு வலுசேர்த்தது.
தற்போது சென்ட்ரியம் ஸ்குவேரில், முன்பு இருந்த சிராங்கூன் பிளாசாவில் சங்கத்தின் முதல் பணிமனை 1986ல் திறக்கப்பட்டது.
பின்னர், ரேஸ் கோர்ஸ் சாலையில் $1.2 மில்லியன் மதிப்பில் மூன்று மாடிக் கட்டடம் வாங்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு ‘தமிழாசிரியர் மாளிகை’ என்ற பெயரில் திறப்புவிழா கண்டது.
அதன் மாதாந்தரப் பராமரிப்புச் செலவு சுமையாக இருந்ததால், உறுப்பினர்களின் ஒப்புதலோடு அக்கட்டடம் 4.2 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டு லாபம் ஈட்டப்பட்டது.
அதில் கிடைத்த நிதியோடு, தற்போது சங்கம் இயங்கிவரும் சிம் லிம் டவர் வணிகக் கட்டடத்தில் ஓர் இடமும், வருமானம் ஈட்டும் நோக்கில் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் எதிரே ஒரு கடைவீடும் வாங்கப்பட்டன.
ஆசிரியர்களுக்கான அங்கீகாரம்
2002ஆம் ஆண்டுமுதல் கல்வி அமைச்சின் ஆதரவுடனும் தமிழ் முரசு நாளிதழுடனும் இணைந்து ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், 2012ஆம் ஆண்டுமுதல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் வாழ்நாள் நல்லாசிரியர் விருதுகளையும் சங்கம் வழங்குகிறது.
தமிழாசிரியர்களின் நலன் காக்கவும் தமிழ்மொழி கற்பித்தலை மேம்படுத்தவும் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட சங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.
“எதிர்காலத்திலும் சிங்கப்பூரில் தமிழை ஒரு வாழும் மொழியாக நிலைத்திருக்கச் செய்வதில் சங்கத்தின் பணி தொடரும்,” என்று திரு சாமிக்கண்ணு உறுதியாகக் கூறினார்.

