மறைந்த பழம்பெரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜே.எம்.சாலியின் படைப்புகளை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் ‘கதைக்களம்’ நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த 143வது ‘கதைக்களம்’ நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு, தேசிய நூலகக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள ‘விபிஆர்’ அறையில் நடைபெறும்.
இவ்வாண்டு மே 15ஆம் தேதி மறைந்த திரு ஜே.எம்.சாலி குறித்த நினைவலைகள் இந்நிகழ்ச்சியில் பகிரப்படவுள்ளன. அவரது படைப்புலகம் குறித்த தமது பார்வையைத் திரு. பிரம்மகுமார் பாலகிருஷ்ணன் வழங்குவார்.
‘இதயத்தில் நின்றவை’ என்ற அங்கத்தில், வாசகர்கள் தங்கள் மனத்தில் நிலைத்திருக்கும் புனைவுகள் குறித்து உரையாற்றுவர். மேலும், கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறும்; வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
கழகத்தின் இளையர் பிரிவுத் தலைவர் சௌமியா திருமேனி நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்படுவார்
நூல் அறிமுகப் போட்டிக்குச் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூல் அறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு (200-300 சொற்களுக்குள்): பெருவிரைவு ரயிலின் வேகத்தைவிட, கடந்த கால நினைவுகளின் வேகம் அதிகமாக இருந்தது
இளையர் பிரிவு (300-400 சொற்களுக்குள்): ‘இது என்னுடைய பெட்டி இல்லையே...!’ விமான நிலையத்தில் பதற்றத்துடன் பார்வையை அங்குமிங்கும் அலையவிட்டேன்.
தொடர்புடைய செய்திகள்
பொதுப்பிரிவு (400-500 சொற்களுக்குள்): “ஒரே ஒரு நிமிடத் தாமதத்தால் நான் இழந்ததை மறக்க முடியுமா?” ஆற்றாமையுடன் பேசினார்.
படைப்புகளைக் கணினியில் தட்டச்சு செய்து, https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 26.06.2026 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16
தொடர்புக்கு: திருவாட்டி மணிமாலா மதியழகன் - 8725 8701 / திருவாட்டி பிரேமா மகாலிங்கம் - 9169 6996.

