மருத்துவத்துறையில் ‘ஏஐ’ வழிகாட்டியாக மட்டுமே இருக்க வேண்டும்: டாக்டர் பிரெமிக்கா

மருத்துவத்துறையில் ‘ஏஐ’ வழிகாட்டியாக மட்டுமே இருக்க வேண்டும்: டாக்டர் பிரெமிக்கா

முடிவெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடாது என்கிறார் பொதுச் சுகாதார மருத்துவர் மா.பிரெமிக்கா
படம்: த.கவி

12 Nov 2026 - 5:30 am

4 mins read

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவத் துறையில் நோய்ப் பராமரிப்பு, தேசிய அளவிலான சுகாதாரத் திட்டங்கள் என இரு நிலைகளில் அது பயன்படுத்தப்படுவதாகச் சொன்னார் பொதுச் சுகாதார மருத்துவர் மா.பிரெமிக்கா

மருத்துவத்துறையில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் பங்களிப்பு, அதன் பயன்பாடுகள், சாத்தியக்கூறுகள், சவால்கள் குறித்துத் தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ வலையொளித் தொடருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

அன்றாட மருத்துவச் சேவையில் ‘ஏஐ’யின் பங்கு

மருத்துவத் துறையில் இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறிய டாக்டர் பிரெமிக்கா, “புதிய மருத்துவப் பரிந்துரைகள், மருந்துகள் அல்லது சிகிச்சை முறைகள் குறித்து விரைவாகத் தெரிந்துகொள்ளவும், அவற்றைச் சுருக்கி விளக்கவும் ‘ஏஐ’ உதவுகிறது,” என்றார்.

மேலும், “நோயாளிகளுக்கான கையேடுகளைத் தயாரிக்கும்போது, தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்படும் தகவல்களைச் சீன, மலாய் மொழிகளுக்கு மொழிபெயர்க்க 'ஏஐ’ பெரிதும் உதவுகிறது. இதனால் நோயாளிகளுக்குத் தேவையான தகவல்களைச் சீக்கிரமாக வழங்க முடிகிறது,” என்றார் அவர்.

எனினும், நோயாளிகள் இணையத்திலும் ‘ஏஐ’ உதவியுடனும் அறிகுறிகளைத் தேடிப் பார்த்துவிட்டுத் தங்களுக்குப் புற்றுநோய் அல்லது மோசமான தொற்றுநோய் இருப்பதாகத் தவறாகக் கருதி அஞ்சும் சூழலும் நிலவுகிறது; இத்தகைய சூழலில், மருத்துவர்கள் அவர்களின் பயத்தைப் போக்கி தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உருவாகிறது என்பதைச் சுட்டினார்.

பட ஆய்வும் துல்லியக் கணிப்பும்

“ஊடுகதிர் (எக்ஸ்‌ரே), சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ படங்களை ஆய்வு செய்வதில் ‘ஏஐ’ திறம்படச் செயல்படுகிறது. மனிதர்களுக்கு 50 படங்களைப் பார்த்தவுடன் சோர்வு ஏற்படலாம்; ஆனால் ‘ஏஐ’ ஆயிரக்கணக்கான படங்களைப் பார்த்தாலும் சோர்வடையாது. இதனால் மனிதத் தவறுகள் குறைகின்றன,” என்று டாக்டர் பிரெமிக்கா கூறினார்.

நுரையீரல், மார்பகப் புற்றுநோய்க் கட்டிகளை அடையாளம் காண ‘ஏஐ’ உதவி செய்தாலும், அது இறுதியான நோய் முடிவை அறிவிப்பதில்லை; மாறாக, மருத்துவர்கள் கவனம் செலுத்த வேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவியாகவே உள்ளது என்பதை அவர் விளக்கினார்.

‘ஏஐ’ கருவிகளுக்குப் பெரும்பாலும் மேலைநாடுகளின் தரவுகளைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறிய அவர், சிங்கப்பூரின் நான்கு இன மக்கள் உட்பட தென்கிழக்கு ஆசிய மக்களின் உடலமைப்பு, தரவுகளைக் கொண்டு அவற்றுக்குப் பயிற்சி அளிப்பது அவசியமென வலியுறுத்தினார்.

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை குறித்துப் பேசுகையில், “அறுவை சிகிச்சை அரங்கில் இயந்திர மனிதன் மட்டுமே தனியாக நின்று சிகிச்சை செய்வதில்லை. மருத்துவரின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே கருவிகள் இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குமுன் ஸ்கேன்களை ஆய்வு செய்து ‘ஏஐ’ சில பரிந்துரைகளைச் செய்யும். ஆனால் இறுதி முடிவை மருத்துவரே எடுப்பார். அறுவை சிகிச்சையின்போது குறிப்பிட்ட பகுதிகளைத் தெளிவாக, பெரிதுபடுத்திக் காட்ட ‘ஏஐ’ உதவுவதால், ரத்தப்போக்கு குறைந்து நோயாளி விரைவாகக் குணமடைய முடியும்,” என்று டாக்டர் பிரெமிக்கா குறிப்பிட்டார்.

நோயாளி உண்மையிலேயே வலியில் இருக்கிறாரா என்பதைக் குரல், முகபாவனைகள் மூலம் கணிக்கும் ‘எமோஷன் ஏஐ’ தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. கலாசாரத்திற்கு ஏற்ப மக்கள் தங்கள் வலியை வெளிப்படுத்தும் முறை மாறுபடும் என்பதால், சிங்கப்பூர்ச் சூழலுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன என்றார் அவர்.

பெருந்தொற்று, தடுப்பூசி நிர்வாகம்

கொவிட்-19 போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் வேகமும் நேரமும் மிகவும் முக்கியம். வருங்காலத்தில் புதிய கிருமிகள் தாக்கினால், அவற்றின் மரபணுக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளவும் தடுப்பூசியின் இலக்கை நிர்ணயிக்கவும் ‘ஏஐ’ உதவும் என்று டாக்டர் பிரெமிக்கா கூறினார்.

மேலும், நாட்டின் சுகாதாரத் தரவுகளைக் கொண்டு, யாருக்கு முதலில் தடுப்பூசி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும், தடுப்பூசிக்குப் பிந்தைய பக்கவிளைவுகளைக் கண்காணித்து யாருக்குப் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதைக் கணிக்கும் திசைகாட்டியாகவும் ‘ஏஐ’ பயன்படும் என்றார்.

‘ஹெல்தியர் எஸ்ஜி’, மூத்தோர் பராமரிப்பு

சிங்கப்பூரின் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் நோய் வருமுன் காக்கும் நோக்கில், ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, தூக்கத்தின் தரம் போன்றவற்றைக் கண்காணிக்கின்றன. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்சினைகளை இவை முன்கூட்டியே எச்சரிப்பதால் பக்கவாதம், மாரடைப்பைத் தடுக்க முடிகிறது என்பதை டாக்டர் பிரெமிக்கா சுட்டினார்.

நாட்டின் எந்தெந்த வட்டாரத்தில் நீரழிவு நோய் அல்லது மறதி நோயால் பாதிக்கப்பட்ட மூத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற தரவுகளின் அடிப்படையில், அங்குள்ள துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்கள் மூலம் அவர்களுக்கான நினைவாற்றல் விளையாட்டுகளையும் உணவுப் பழக்க வழக்க வழிகாட்டல்களையும் திட்டமிட்டு வழங்க ‘ஏஐ’ உதவுகிறது என்றார் அவர்.

தனியாக வாழும் மூத்தோர்க்கு மருந்து நினைவூட்டல், அவசர எச்சரிக்கை, உறவினர்களுடன் வீடியோ அழைப்பு ஏற்படுத்த ‘கம்பேனியன் ரோபோக்கள்’ உதவியாக இருந்தாலும், மனிதர்களின் அன்பு, ஆதரவு, மனிதநேயத்திற்கு எந்தவோர் இயந்திரமும் மாற்றாக முடியாது என்பதை டாக்டர் பிரெமிக்கா வலியுறுத்தினார்.

வருங்கால மருத்துவ மாணவர்களுக்கான அறிவுரை

மருத்துவ மாணவர்கள் ‘ஏஐ’ உதவியுடன் பெரிய புத்தகங்களைச் சுருக்கிப் படிக்க இயலும் என்றாலும், இறுதித் தேர்வுகள், நேரடி நோயாளிப் பராமரிப்பில் ‘ஏஐ’ பதிலளிக்க முடியாது. சுய சிந்தனையும் நேரடிப் பரிசோதனைத் திறனும் முதன்மையானவை என்றார் அவர்.

மேலும், “தனித்துவமிக்க, நவீன ‘ஏஐ’ தொழில்நுட்பங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமானவையாக மாறிவிடக் கூடாது. அவற்றின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்

குறிப்புச் சொற்கள்