முதியோரின் நல்வாழ்வு, மேம்பாடு, தோழமை தொடர்பான முக்கிய முன்னெடுப்புகளில் ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ அமைப்பு அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது.
முதியவர்கள் சமூக நிகழ்ச்சிகளில் எளிதாகப் பங்கேற்பதற்கு உதவுவது முக்கிய நோக்கமாகும். இந்த நடவடிக்கையின் மூலம், முதியவர்கள் எவரும் தங்களது பொற்காலத்தில் பின்தங்கிவிடக் கூடாது என்பதையும் இந்த அமைப்பு உறுதிசெய்கிறது.
இதன் ஓர் அம்சமாக புரோஜெக்ட் ஸ்மைல் அமைப்பின் ஏற்பாட்டில் அக்டோபர் 30ஆம் தேதி, ஷங்ரிலா ஹோட்டலில் நிதித் திரட்டு நிகழ்ச்சி இடம்பெற்றது.
முக்கியப் பிரமுகர்கள், பங்காளிகள், பயனாளிகள் என 390க்கும் மேற்பட்டோருடன் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹொங் சுவாங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
செயின்ட் லூக்ஸ் எல்டர்கேர், வீரா சங்கம் (WIRA), ‘எம்பவர்டு ஃபேமிலிஸ்’, ‘பியாண்ட் சோஷியல் சர்வீசஸ்’, ‘பண்டா ஏஏசி சைனாடவுன்’, ‘டிஏடிசி’ குழுமம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 130 முதியவர்கள், பயனாளிகளுடன் மாயா டான்ஸ் தியேட்டரைச் சேர்ந்த முதியவர்களுக்கும் இந்த நிதித்திரட்டு உதவிக்கரம் நீட்டும்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு இசை, நடனப் படைப்புகள் இடம்பெற்றன. மேலும், தொண்டூழியர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் ‘புரோஜெக்ட் ஸ்மைல் லெகசி விருது’, ‘புரோஜெக்ட் ஸ்மைல் சிறப்புச் சேவை விருது’ ஆகியவை வழங்கப்பட்டன.
புரோஜெக்ட் ஸ்மைல் சிறப்புச் சேவை விருதைப் பெற்றவர்களில் ஒருவர், புரோஜெக்ட் ஸ்மைல் முதியோர் திட்டத்தின் துணைத் தலைவரான பார்வதி சங்கரலிங்கம், 51.
இந்தியச் சமூகத்தில் முதியவர்கள் பேரார்வத்துடன் நடவடிக்கைகளில் பங்கேற்பதைக் காண்பது, தமது தொண்டூழியப் பணி மற்றும் சமூகச் சேவையால் கிடைக்கும் ஆழ்ந்த மனநிறைவை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உள்ளூர் இந்தியச் சமூகத்தினரிடையே துடிப்புடன் மூப்படைதலுக்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவ்வமைப்பில் தொண்டூழியராக இணைந்த திருவாட்டி கலா ரகுவரன், சமூகத்தின் எதிர்காலத்திற்கு இத்தகைய நிதித்திரட்டு நிகழ்ச்சிகள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை வலியுறுத்தினார்.
“நமது தேவைகள் எதுவாக இருந்தாலும், அவற்றைத் தனி நபர் அல்லது ஓர் அமைப்பு மட்டும் பூர்த்தி செய்துவிட முடியாது. அது ஒரு கூட்டு முயற்சியாகவே இருக்க வேண்டும்,” என்றார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலா ரகுவரன், 60.
மேலும், “நமது சமூகத்தை இத்தகைய பொது வெளிகளுக்கு வர ஊக்குவிப்பது ஒரு பெரும் சவாலாகும், ஆனால் எதுவுமே சாத்தியமற்றதன்று. இங்கு இருப்பது அவர்களின் உடல், மன வலிமையை வியக்கத்தக்க அளவில் மேம்படுத்துகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
71 வயதான திருவாட்டி பேட்ரிசியாவைப் பொறுத்தவரை புரோஜெக்ட் ஸ்மைல் திட்டங்களில் கலந்துகொண்டது அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது.
2023ஆம் ஆண்டில் புரோஜெக்ட் ஸ்மைல் நடவடிக்கைகளில் இணைந்ததிலிருந்து, அவர் வாராந்தர உடற்பயிற்சிகள், கலை வகுப்புகள், சாதனை படைக்கும் சிங்கப்பூர்க் கொடியை உருவாக்கும் சமூகத் திட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளார். இது அவரது சுறுசுறுப்பான முதுமைப் பயணத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது.
வாரந்தோறும் தனக்குக் கிடைக்கும் அரவணைப்பைச் சுட்டிக்காட்டிய அவர் மற்ற முதியவர்களும் தனிமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.
“முதியவர்கள் வீட்டிலேயே இருந்தால், அவர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது. அதனால், வெளியே சென்று மற்ற மனிதர்களுடன் பழகுவது முக்கியம். புரோஜெக்ட் ஸ்மைல் நடவடிக்கைகள் மூலம் எனக்கும் நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
“எனது வாழ்க்கையை இப்போது நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். மேலும், துடிப்புடன் மூப்படைதலின் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொண்டேன்,” என்றார் திருவாட்டி பேட்ரிசியா.
