செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது மாயாஜாலப் பெட்டியன்று; பேரளவிலான தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் ஒரு கருவி என்று தெளிவுபடுத்துகிறார் நிதித் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திகேயன் பழனிசாமி.
விசா நிறுவனத்தின் மின்னிலக்கத் தீர்வுப் பிரிவின் தலைவரான அவர், தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ வலையொளித் தொடருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், பணப்பரிவர்த்தனைகளில் 'ஏஐ’யின் பங்களிப்பு, பாதுகாப்பு வழிமுறைகள், வருங்கால வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசினார்.
நொடிப் பொழுதில் இயங்கும் பரிவர்த்தனைப் பின்னணி
நாம் அன்றாடம் பேரங்காடி அல்லது கடைகளில் கடன் அட்டை அல்லது கைப்பேசி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் சில நொடிகளுக்குள், பின்னணியில் மிகப்பெரிய தரவுப் பகுப்பாய்வு நடக்கிறது என்றார் அவர்.
“இயந்திரத்தில் ஒருவர் அட்டையைத் தட்டும்போது, அந்தப் பரிவர்த்தனை வணிகர் வங்கிக்குச் சென்று, விசா அல்லது மாஸ்டர்கார்டு கட்டமைப்பு வழியாகக் குறிப்பிட்ட வாடிக்கையாளர் வங்கிக்கு அனுப்பப்படுகிறது. இந்தச் செயல்முறையில் 'ஏஐ இன்ஜின்’ முக்கியப் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒருவர் சிங்கப்பூரில் இரவு 8 மணிக்கு 50 டாலருக்குப் பொருள் வாங்கிவிட்டு, அடுத்த நாள் காலை சான் பிரான்சிஸ்கோவில் 500 டாலருக்கு அதே அட்டையைப் பயன்படுத்தினால், விமானப் பயண நேரத்தைக் கணக்கிடும் ஏஐ, இது சாத்தியமற்றது என்பதை உணர்ந்து மோசடிப் பரிவர்த்தனையாகக் கருதி உடனடியாகத் தடுத்து நிறுத்தும்,” என்று திரு கார்த்தி விளக்கினார்.
இந்த 'ஏஐ’ தொழில்நுட்பம் புதியதன்று; கடந்த 20, 30 ஆண்டுகலாகவே ‘நியூரல் நெட்வொர்க்’, அல்காரிதங்களின் வழியே இது பயன்பாட்டில் இருந்து வருகிறது என்றார் அவர்.
பாதுகாப்புக் கட்டமைப்பும் தனிநபர் தரவுப் பாதுகாப்பும்
‘ஏஐ’ பயன்பாட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு, ஆபத்துகள் இருந்தாலும் அதைத் தடுப்பதற்கான பலத்த ‘பாதுகாப்பு அரண்கள்’ கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறியாக்க முறை (Encryption), தரவுப் பாதுகாப்பு, இட அமைவு, தொகை போன்றவற்றைக் கொண்டு மோசடிகள் உடனுக்குடன் தடுக்கப்படுகின்றன என்று திரு கார்த்தி கூறினார்.
சிங்கப்பூரின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்துப் பேசுகையில், “தனிநபரின் பெயர் அல்லது அடையாள அட்டையை நேரடியாகப் பகிராமல், இத்தனை வயதுக்குட்பட்டவர்கள் அல்லது குறிப்பிட்ட வருமானப் பிரிவினர் எனத் தகவல்களை அடையாளம் நீக்கம் செய்துதான் பகுப்பாய்வுக்குப் பயன்படுத்த முடியும். இந்தச் சட்ட விதிகளும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.
‘எக்ஸ்பிளைனபிள் ஏஐ’ தரும் புதிய அனுபவம்
பொதுவாக ஒரு பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் ‘டிக்லைண்ட்’ என்று மட்டுமே வரும். ஆனால், வளர்ந்து வரும் ‘எக்ஸ்பிளைனபிள் ஏஐ’ மூலம் பரிவர்த்தனை எதனால் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தை வாடிக்கையாளருக்கு விளக்க முடியும். போதுமான நிதி இல்லையா, சந்தேகத்திற்குரிய இடத்திலிருந்து பரிவர்த்தனை நடக்கிறதா என்பன போன்ற விவரங்கள் நேரடியாகத் தெரிவிக்கப்படும். கடன் அல்லது கடன் அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் போதும் இந்த முறை வாடிக்கையாளர்களுக்குத் தெளிவை வழங்கும் என்று அவர் விளக்கினார்.
அதேபோன்று, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பணப் பரிமாற்றம் செய்யும்போது, அரசாங்கங்களும் கட்டுப்பாட்டு அமைப்புகளும் விதிக்கும் புதிய விதிமுறைகளை நிகழ்நேரத் தானியங்கி முறையில் நடைமுறைப்படுத்தவும் 'ஏஐ’ உதவுவதாகச் சொன்னார்.
அடுத்தக்கட்ட வணிகப் புரட்சி
முன்பெல்லாம் வங்கி அறிக்கைகளைத் தொகுக்க நீளமான நிரல்களை எழுத வேண்டியிருந்தது. தற்போது ‘கிளவுட்’, ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ தொழில்நுட்பங்கள் மூலம் சில வினாடிகளிலேயே வங்கிக் கணக்குகளை இணைத்துத் தரவுகளைப் பெற முடிகிறது என்பதைத் திரு கார்த்தி சுட்டினார்.
வணிகத்துறையின் அடுத்த பரிணாமமாக ‘ஏஜென்டிக் காமர்ஸ்’ உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “எதிர்காலத்தில் ஒரு பரிசுப் பொருளைத் தேடி நாமே அலையத் தேவையில்லை. குறிப்பிட்ட விலை, பொருள்கள், விநியோகத் தேதியை 'ஏஐ’ உதவியாளரிடம் (Consumer Agent) தெரிவித்தால் போதும்; அதுவே வணிகர் அமைப்புகளுடன் (Merchant Agents) பேசி, சிறந்த பொருள்களைத் தேர்வு செய்து நமக்காகப் பரிவர்த்தனையை முடிக்கும். சுற்றுலாத் திட்டமிடலுக்கும் இந்த முறை உதவும். எனினும், போலியான வணிக நிறுவனங்கள் (Shell companies) உருவாவதைத் தடுக்கப் பாதுகாப்பு நடைமுறைகள் அவசியம்,” என்றார்.
வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு
‘ஏஐ’ யால் வேலைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்திற்குப் பதிலளித்த திரு கார்த்தி, மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாகச் செய்யப்படும் வழக்கமான வேலைகள் தானியக்கமாக்கப்படலாம் என்றார். ஐந்து பேர் பல நாள்கள் செய்யும் நிரலாக்கம், தரவுப் பணிகளை இன்று ஒருவரே சில மணிநேரங்களில் செய்ய முடிகிறது என்றார் அவர்.
மேலும், “இளையர்கள் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் (Problem Solving), தர்க்கரீதியான சிந்தனை (Logical Reasoning) போன்ற தொழில்நுட்பங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ‘ஏஐ’ வேலைகளைப் பறிக்காது; மாறாக, வேலை செய்யும் புதிய வழிகளையும் புதிய வாய்ப்புகளையுமே அது உருவாக்கும்,” என்று வலியுறுத்தினார்.
