தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோழியின் மகளுக்காக எடை குறைந்து உறுப்பு தானம் வழங்கிய ரபியா

4 mins read
6957fade-d7ef-4d01-92f8-fc54d93763b4
கடும் நோயால் அவதியுற்ற தம் தோழியின் மகளுக்குத் தமது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கியுள்ளார் ரபியா. - படம்: அனுஷா செல்வமணி

தாயுள்ளம் படைத்த 53 வயது ரபியா ஹுசைன், தமது உடல் எடையைக் குறைத்து, கடும் நோயால் அவதியுற்ற தம் தோழியின் மகளுக்குத் தமது சிறுநீரகத்தைத் தானமாக அளித்துள்ளார்.

ஒரு நாள் எதேச்சையாக ஃபேஸ்புக் தளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நோயாளி ஒருவருக்கு அவசரமாகச் சிறுநீரகம் தேவைப்படுவதாகப் பதிவு ஒன்றைக் கண்டார் ரபியா.

அப்போதே தாம் ஏன் அந்தக் கொடையாளராக இருக்கக்கூடாது என்ற எண்ணம் ரபியாவுக்கு வந்தது.

அதற்குப் பிறகுதான் நோயாளி தம் தோழியின் மகள் என்பது ரபியாவுக்குத் தெரியவந்தது.

“நான் என் சிறுநீரகத்தைத் தானம் செய்ய விரும்புகிறேன் என என் தோழியிடம் சொன்னபோது அவர் முதலில் என்னை யோசித்துப் பார்க்கச் சொன்னார். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்,” என்று ரபியா சொன்னார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ரபியாவின் அண்ணன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

“நான் என் அண்ணனோடு மிக நெருக்கமாக இருந்தேன். திடீரென அவர் விபத்துக்குள்ளானபோது என் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை என் அண்ணனுக்கு யாராவது உதவி செய்திருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பாரோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும். அதனால்தான் என் தோழியின் மகளுக்கு இத்தகைய துயரம் ஏற்பட்டபோது நான் உதவ நினைத்தேன்,” என்றார் ரபியா.

தொடக்கத்தில் ரபியாவின் முடிவை ஆதரிக்க அவரின் குடும்பத்தினர் தயங்கினர். ஆனால், ரபியா மிகவும் உறுதியாக இருந்ததை அடுத்து அவர்களும் ரபியாவுக்குப் பக்கபலமாக இருக்கத் தொடங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும்போது உயிரிழப்பதற்கு ஒரு விழுக்காட்டு சாத்தியம் இருப்பதுடன் அதிகப்படியான ரத்தப்போக்கும் ரத்த உறைவும் ஏற்படலாம்.

இருந்தாலும், தமக்கு என்ன நேர்ந்தாலும் தோழியின் மகள் குணமடைய வேண்டும் என்பதுதான் ரபியாவின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

ரபியாவின் தோழியின் மகள் சீதா (உண்மை பெயரன்று) 30 வயதுகளில் இருக்கும் ஓர் இளம் தாயார். ஏற்கெனவே இரு பிள்ளைகளுக்குத் தாயான அவர், மூன்றாவது குழந்தையுடன் கருவுற்றபோது சிக்கல் ஏற்பட்டு அவரது பனிக்குடப்பை (amniotic sac) உடைந்தது.

இதனால், அவரது மூன்றாவது குழந்தை இறந்து பிறந்தது. பிள்ளையை இழந்த துயரம் ஒருபுறம் இருக்க, சீதாவுக்கு நுண்ணுயிர் தொற்று காரணமாக கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகியவை செயலிழக்கத் தொடங்கின.

“ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மேற்கொண்டு வந்த அவருக்கு இப்படி ஓர் இடி காத்திருக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவரின் இளம் பிள்ளைகளையும் கணவரையும் பார்க்கும்போது சீதா வாழ வேண்டும் என்ற துடிப்பு என்னுள் ஏற்பட்டது,” என கூறிய ரபியாவின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

அக்டோபர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை சீதா ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அமர்வுகளுக்குச் சென்றார். அந்நேரத்தில் அவரது உடல்நிலை மிக பலவீனமாக இருந்ததால் அவரால் தம் இரு பிள்ளைகளுடன் சரியாக நேரமும் செலவிட முடியவில்லை.

ரபியாவுக்கு நாள்பட்ட நோயோ நீரிழிவு நோயோ இல்லாததால் அவரால் தமது சிறுநீரகத்தைத் தானம் செய்ய முடிந்தது. சிறுநீரகத் தானத்திற்குத் தயாராகிய ரபியாவுக்கு எதிர்பாராத வகையில் ஓர் இடையூறு வந்தது.

ஒருவர் உறுப்பு தானம் செய்வதற்கு முன் பல மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ரபியாவின் ‘பிஎம்ஐ’ குறியீடு அதிகமாக இருந்ததால் அவர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னார்.

“எனக்கு மூன்று மாதங்கள் மட்டும்தான் அவகாசம் வழங்கப்பட்டது. நீண்ட நாள் எடுத்துக்கொண்டால் சீதா சிறுநீரகத்திற்குக் காத்திருக்கும் நேரமும் அதிகமாகும். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு என் உடல் எடையைக் குறைப்பதில் தீவிரமாக இறங்கினேன்,” என்றார் ரபியா.

மூன்று மாதங்களில் ரபியாவின் உடல் எடை 92 கிலோகிராமிலிருந்து, 79 கிலோகிராமுக்குக் குறைந்தது. 13 கிலோ குறைய ரபியா தமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்துகொண்டார்.

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் ரபியா.

“என் தோழியின் மகள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. நான் என் உடல்நலத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை,” என்று ரபியா கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் ரபியாவுக்கும் சீதாவுக்கும் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது இருவரும் நன்றாகத் தேறி வருகிறார்கள்.

சிறுநீரகத்தைத் தானம் செய்து தேறி வரும் ரபியா.
சிறுநீரகத்தைத் தானம் செய்து தேறி வரும் ரபியா. - படம்: ரபியா ஹூசைன்

சிகிச்சைக்குப் பிறகு இருவருக்கும் இடையிலான உறவு இன்னும் வலுவடைந்ததாக ரபியா கூறினார். அண்மையில் இதுகுறித்து தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த ரபியா, அதைப் பார்த்து பலரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் எனத் தாம் விரும்புவதாகக் கூறினார்.

பலரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என விரும்புகிறார் ரபியா.
பலரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என விரும்புகிறார் ரபியா. - படம்: ரபியா ஹூசைன்

“நம்மில் பலர் உறுப்பு தானம் என்றாலே தயங்குகிறோம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நான் என் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டிருந்தேன். உறுப்பு தானம் என்றால் பயப்படத் தேவையில்லை. சீதாவைப் போல மேலும் பலர் இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வரலாம். உதவி தேவைப்படுவோருக்கு உதவுங்கள்,” என ரபியா கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்