ஆரோக்கியத்தில் தொடங்கி அறப்பணியில் தொடரும் ஓட்டம்

ஆரோக்கியத்தில் தொடங்கி அறப்பணியில் தொடரும் ஓட்டம்

3 mins read
ஓட்டத்தின் மூலம் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு
dec01279-6e7b-41ac-82ee-971d65ff0422
நெடுந்தொலைவோட்டங்களின்வழி அர்த்தமுள்ள காரணங்களுக்காக 36 வயது பிரமித் ஜெயின் நிதி திரட்டி வருகிறார். - படம்: பிரமித் ஜெயின்
multi-img1 of 2

இந்தியாவில் பள்ளிப் பருவத்தின்போது தேசிய மாணவர் படையில் இருந்த பிரமித் ஜெயின், ஓடுவதைத் தவிர்ப்பதற்காக மயக்கம் வருவது போல்கூட நடிப்பார்.

ஆனால் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 36 வயதான அவரது வாழ்க்கையில் இன்று ஓட்டமே முக்கிய உந்துசக்தியாகவும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் முறையாகவும் மாறிவிட்டது.

2017ஆம் ஆண்டில் உடல்நிலை மோசமடைந்து எடை கணிசமாக அதிகரித்ததை உணர்ந்தபோது, இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓட முயற்சி செய்ய வேண்டும் என அவர் முடிவெடுத்தார். அந்தச் சிறிய முயற்சிதான் அவரது வாழ்க்கைமுறையில் மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கமாக அமைந்தது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அவர் பத்து கிலோகிராமுக்கும் மேல் எடையைக் குறைத்தார். உடற்பயிற்சிக் கூடங்களைவிட இயற்கையோடு இணைந்து திறந்தவெளியில் ஓடுவது மன அமைதி தருவதை அவர் உணர்ந்தார். “ஓட்டம் என்பது எனக்கு தியான முறையாக மாறிவிட்டது,” என்றார் திரு பிரமித்.

2022ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் முழு நெடுந்தொலைவோட்டத்தை வெற்றிகரமாக அவர் முடித்தார். இவரது ஓட்டப் பயணத்தின் உண்மையான திருப்புமுனை, இந்தோனீசியாவில் உள்ள நீர்வாழ் உயிரினக் காட்சியகமொன்றில் ஏற்பட்டது.

ஒரு சந்திப்பு ஏற்படுத்திய மாற்றம்

மேபேங்க் வங்கியின் 2025 அனைத்துலக நெடுந்தொலைவோட்டத்தின் மூலம் ‘மேக்-ஏ-விஷ்’ (Make-A-Wish) அறக்கட்டளைக்காக ஏறக்குறைய 3,000 அமெரிக்க டாலரை அவர் திரட்டினார். அந்தப் போட்டியில் தனிநபர் ஒருவரால் திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகை அது.

மேபேங்க் வங்கியின் 2025 அனைத்துலக நெடுந்தொலைவோட்டத்தில் திரு பிரமித் ஓடி நிதி திரட்டினார்.
மேபேங்க் வங்கியின் 2025 அனைத்துலக நெடுந்தொலைவோட்டத்தில் திரு பிரமித் ஓடி நிதி திரட்டினார். - படம்: பிரமித் ஜெயின்

இந்த நற்செயலால், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்சா என்ற ஆறு வயதுச் சிறுமியுடன் ஒரு நாள் முழுவதும் இருக்கும் வாய்ப்பு திரு பிரமித்துக்குக் கிடைத்தது. நேரில் டால்ஃபின்களைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டிருந்தார் கன்சா.

இருவரும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். ஆயினும் அவர்களுக்குள் மிக விரைவிலேயே ஆழமானதொரு பிணைப்பு உருவானது.

“கன்சா இதற்கு முன்பு அறிமுகமில்லாத ஒருவருடன் இவ்வளவு நேரம் இருந்ததில்லை என்று அவரது தந்தை என்னிடம் கூறினார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் என் கையை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தார்,” என்று திரு பிரமித் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்சா என்ற ஆறு வயதுச் சிறுமியுடன் திரு பிரமித்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்சா என்ற ஆறு வயதுச் சிறுமியுடன் திரு பிரமித். - படம்: பிரமித் ஜெயின்

“டால்ஃபினைப் பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான் அந்தச் சிறுமியின் ஆசையாக இருந்தது. அந்த அனுபவத்திற்குப் பிறகு, தேவையிலிருக்கும் மக்களுக்கு உதவுவதே அர்த்தமுள்ள சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தச் சந்திப்பு ஏற்படுத்திய தாக்கத்தால், 12 மாதங்களில் 12 நாடுகளில் 12 நெடுந்தொலைவோட்டங்களில் பங்கேற்று, தொண்டு நிறுவனங்களுக்காகவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும் அவர் நிதி திரட்டத் தொடங்கினார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்சா என்ற ஆறு வயதுச் சிறுமியுடன் திரு பிரமித்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்சா என்ற ஆறு வயதுச் சிறுமியுடன் திரு பிரமித். - படம்: பிரமித் ஜெயின்

சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் திரு பிரமித்தின் சுற்றுச்சூழல் மீதான இந்த அக்கறை, அவர் வளர்ந்த சூழலில் இருந்தே தொடங்கியது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ரங்கியா என்ற சிறிய கிராமத்தில், 13 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் பிரமித் வளர்ந்தார்.

அங்கு வளங்களைப் பாதுகாப்பதும் உணவை வீணாக்காமல் இருப்பதும் அவர்களின் அன்றாட வாழ்க்கைமுறையாகவே இருந்தன. அந்த ஆரம்பக்கால அனுபவங்களே நீடித்த நிலைத்தன்மை குறித்த அவரது தற்போதைய கழிவுகளற்ற வாழ்க்கைமுறைக்கான அணுகுமுறையை வடிவமைத்துள்ளன.

மின்சாரம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காகக் குளிர்ந்த நீரில் மட்டுமே குளிக்கும் அவர், தமது பழைய உடைகளைத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி, துணிக் கழிவுகளையும் குறைத்து வருகிறார்.

ஓட்டத்தில் நாட்டம் வரக் காரணம்

சுற்றுச்சூழல் மீதான அக்கறையால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ‘இன்கம் ஈக்கோ ரன்’ (Income Eco Run) நெடுந்தொலைவோட்டத்தில் 21.1 கிலோமீட்டர் அரை மாரத்தான் பிரிவில் அவர் பங்கேற்கவுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறும் ‘இன்கம் ஈக்கோ ரன்’ (Income Eco Run) நெடுந்தொலைவோட்டத்தில் திரு பிரமித் பங்கேற்கவுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறும் ‘இன்கம் ஈக்கோ ரன்’ (Income Eco Run) நெடுந்தொலைவோட்டத்தில் திரு பிரமித் பங்கேற்கவுள்ளார். - படம்: பிரமித் ஜெயின்

பருவநிலை மாற்றத்தைத் தடுக்கப் பெரிய தியாகங்கள் தேவையில்லை என்றும் தொடர்ச்சியான சிறுசிறு அன்றாடச் செயல்களே போதுமானது என்றும் அவர் உறுதியாக நம்புகிறார்.

இவ்வாண்டில் அவர் ஓடும் ஒவ்வொரு பந்தயமும் ஏதோவொரு தொண்டு நிறுவனத்திற்குப் பயன்படும் வகையில் அமையும்.

வரவிருக்கும் இந்த ‘இன்கம் ஈக்கோ ரன்’ நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், https://www.income.com.sg/ecorun/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கான பதிவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 40 வெள்ளியிலிருந்தும் சிறுவர்களுக்கு 16 வெள்ளியிலிருந்தும் தொடங்குகிறது. மேலும் செல்லப்பிராணிகளுக்கான பிரிவில் கலந்துகொள்ள 20 அல்லது 35 வெள்ளி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்