சிங்கப்பூர் இலக்கியப் பரிசு – வெளிப்படைத்தன்மை தேவை

வாசகர் குரல்

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு – வெளிப்படைத்தன்மை தேவை

படம்: சிங்கப்பூர் புத்தக மன்றம்

01 Nov 2026 - 6:39 am

3 mins read

இவ்வாண்டிற்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் குறும்பட்டியல் கடந்த 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழில் கவிதைப் பிரிவிலும்/புனைவு, புனைவற்ற படைப்பாக்கப் (Fiction and Non-Fiction) பிரிவிலும் குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புனைவு, புனைவற்ற படைப்பாக்கப் (இதை அவர்கள் அபுனைவு என்கிறார்கள்) பிரிவுக்கு அனுப்பப்பட்ட அனைத்துப் படைப்புகளும் மூன்று நடுவர்களுக்கும் அனுப்பப்பட்டதா என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது.

பரிசுத் தேர்வுக்கு வந்த அனைத்துப் படைப்புகளும் அந்தந்த நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதா அல்லது தேர்வு செய்யப்பட்ட ஒருசில படைப்புகள் மட்டுமே நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. அவர் அனுப்பிய பதிலின் ஒரு பகுதி:

“சி.பு.ம. மதிப்பீட்டு நடைமுறையின் நேர்மையை மிகத் தீவிரமாகக் கருதி, மதிப்பீட்டு நடைமுறை கடுமையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிறது. அனுப்பப்பட்ட அனைத்துப் படைப்புகளும் சமமாகக் கருதப்பட்டு, வெளியிடப்பட்ட நிபந்தனைகளின் (அவை என்ன நிபந்தனைகள் என்பது தெரியவில்லை) அடிப்படையில் தகுதியானவைதானா என்று மதிப்பீடு செய்யப்படுகிறது.” (“SBC takes the integrity of the judging process seriously and ensures that the judging process is conducted rigorously and fairly. All submissions are treated equally and assessed for eligibility against the published terms and conditions.”)

“மதிப்பீட்டு நடைமுறை நேர்மையாகவும் நியாயமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதனால் நடுவர்களின் கலந்தாய்வுகள் பற்றியோ அல்லது எந்தத் தனிப்பட்ட படைப்பு பற்றியோ எந்தத் தகவலையும் நாங்கள் பகிர்ந்துகொள்ள இயலாது.” (“As the judging process is kept confidential to ensure its integrity and fairness, we are not able to share any information on the judges’ deliberations or on any individual work.”)

நடுவர்களின் கலந்தாய்வு பற்றியோ, அவர்களின் முடிவு பற்றியோ நான் எந்தத் தகவலும் கேட்கவில்லை. நான் அனுப்பிய படைப்பு, நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதா? அவர்கள் அதை ஆய்வு செய்தார்களா? என்பதே என்னுடைய கேள்வி.

சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு அனுப்பப்படும் அனைத்துப் படைப்புகளையும் வேறொரு குழு ஆய்வு செய்து, தகுதியானவை என்று அவர்கள் நினைக்கும் படைப்புகள் மட்டுமே நடுவர்களுக்கு அனுப்பப்படுகிறது என்றால், அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார்? அவர்களின் தகுதி என்ன? போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

மூன்று நடுவர்களின் பெயர்கள், படங்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை சிங்கப்பூர் புத்தக மன்றம் வெளியிட்டுள்ளது. அதேபோல் முதலில் படைப்புகளைத் தேர்வுசெய்யும் குழுவினரின் பெயர்களையும், விவரங்களையும் வெளியிடலாம் இல்லையா? அல்லது அந்த விவரங்களைப் பங்கேற்பாளர்களிடம் மட்டுமாவது தெரிவிக்கலாம் இல்லையா?

ஒரே பிரிவில் இருவேறு துறைகள்

மேலும், கற்பனையால் உருவாகும் கதைகளையும் கற்பனையற்ற கட்டுரைகளையும் ஒரே பிரிவில் சேர்த்து மதிப்பிடுவது சரியல்ல. இரண்டும் வேவ்வேறு துறைகள். அவ்வாறாயின் அவற்றை ஒரே பிரிவில் சேர்த்து மதிப்பிடச் சொல்வது என்ன நியாயம்? தனித்தனியாகத்தான் அவற்றை மதிப்பிட்டுத் தேர்வு செய்திருக்க வேண்டும்.

நா. ஆண்டியப்பன்

எழுத்தாளர், வாமனத் தீவு நூல்

'வாசகர் குரல்' பகுதிக்கு உங்களது கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tmforum@sph.com.sg
குறிப்புச் சொற்கள்