சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கி வரும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

வரலாற்றைப் பாதுகாக்க அணிதிரண்ட சமூகம்

6 mins read
7ea2f398-adab-465c-ab77-71efd54fcfbb
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியும், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சிய தொகுப்பின் ஆசிரியருமான திரு அருண் மகிழ்நன். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

உலகின் ஆகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றாக, 90 ஆண்டுகளை எட்டும் சிங்கப்பூரின் தமிழ் முரசு தொடங்கக் காரணமானவர்களில் ஒருவர், இந்நாட்டில் சீர்திருத்தச் சிந்தனை வேரூன்றப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர், சிங்கப்பூர் பெரியார் என்று கொண்டாடப்படுபவர்;

தமிழரல்லாதோருக்கும் தமிழ்ப் பண்பாட்டையும் இலக்கியத்தையும் உணர்த்த விழைந்த ‘தமிழ் உணர்த்தும் கழகம்’;

சிங்கப்பூரின் முதல் இந்திய/ஆசியத் தலைமை அஞ்சலக அதிகாரியாக பணியாற்றிய தமிழர்;

சிங்கப்பூரில் கள்ளுக்கடைகள்;

நாட்டையே உலுக்கிய சீட்டு நிறுவனங்கள்; இந்நாட்டுத் தமிழ் மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் ஆவணப்படுத்தும் இத்தகைய பலதரப்பட்ட தகவல்களை விரல் அசைவில் விரைவில் பெறப்போகிறோம்.

சாதனை படைத்து சரித்திரமான ஆளுமைகள் தொடங்கி, அரசியல், மொழி, உணவு, பரவலாகக் காணப்பட்டு பிறகு அருகிப் போன தமிழ் மக்களின் வாழ்க்கைத் தொழில்கள் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும், சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூக ஆவணமாக உருவாகிறது ‘சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்’.

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளுக்கான பரிசாக உருவெடுத்து வரும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம், சிங்கப்பூரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாகும் முதல் கலைக்களஞ்சியம் எனும் சிறப்பைப் பெறுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியீடு காணவுள்ள கலைக்களஞ்சியத்தில் இடம்பெறும் அமைப்புகள், ஆளுமைகள் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் தொகுப்பின் ஆசிரியரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியுமான திரு அருண் மகிழ்நன்.

பாலினம், சமயம், இனம் சார்ந்த உட்பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளில் கவனமாகச் சிந்தித்துப் பதிவுகளைத் தேடிச் சேர்த்துள்ளதாகக் கூறிய திரு அருண், இது வாழும் கலைக்களஞ்சியம் என்பதால் தொடர்ந்து பதிவுகளைச் சேர்த்துக்கொண்டே போகலாம் என்றும் தெரிவித்தார்.

“90வது ஆண்டு நிறைவைக் காணும் தமிழ் முரசைக் குறித்த பதிவும் உண்டு, 90 நாள்களிலேயே மறைந்த இதழ்களின் பதிவுகளும் இத்தொகுப்பில் உண்டு.

“சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் அனைத்து அனுபவங்களையும் எடுத்துரைக்கும் பதிவுகளை நாம் ஒருபோதும் எழுதிமுடித்துவிட இயலாது. ஆனால் அத்தொடர் பயணத்தின் முதல் சில அடிகளை எடுத்துவைத்துள்ளோம்,” என்று தெரிவித்தார் திரு மகிழ்நன்.

“இன்றைய தலைமுறையினரும் எதிர்காலத் தலைமுறையினரும் அறிந்து வியக்கவும் கற்றுக்கொள்ளவும் பல தகவல்கள் கலைக்களஞ்சியத்தில் கொட்டிக்கிடக்கின்றன,” என்றார் அவர்.

அதிபர் முதல் பொதுசனம் வரை

சமூகத்தில் அனைவராலும் அறியப்பட்ட அதிபர்கள் முதல் கிளி ஜோதிடம் பார்த்தல், கச்சாங் பூத்தே விற்றல் போன்ற அருகி மறைந்துவரும் தொழில்களைச் செய்யும் தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இக்கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தின் பெருமைகளுடன், அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளை, விட்டுப்போன வரலாறுகளைத் தேடும் முயற்சியில் இறங்கியபோது சுவையான தகவல்களும் கிடைத்ததாகக் கூறினார் தொகுப்பின் உதவி ஆசிரியர் திரு சிவானந்தம் நீலகண்டன்.

புதிய செய்திகளும், பரவலாக அறியப்படாத தகவல்களும் கலைக்களஞ்சியத்தில் உள்ளதாகக் கூறிய அவர், சில எடுத்துக்காட்டுகளையும் விவரித்தார்.

“சமூக முன்னோடி அ.சி. சுப்பய்யா குறித்த ஆய்வுகள், கணிசமான கடும் முயற்சிகளுக்குப் பிறகு கிடைத்தன; ‘தமிழ் உணர்த்தும் கழகம்’ என்ற பண்பாட்டுப் பரிமாற்றங்களுக்குரிய தமிழ் அமைப்பு, சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது’.

இன்று வெகுவாக மக்கள் பேசிவரும் பண்பாட்டுப் பரிமாற்றம் (inter-culturalism) குறித்துத் தமிழ்ச் சமூகம் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்துள்ளது வியப்புக்குரியது,” என்று கூறினார் திரு சிவா.

தமிழ்ச் சமூகத்தின் பெருமைகள், பங்களிப்புகள் ஆகியவற்றுடன், வரலாற்றுக் கண்கொண்டு உணர்ச்சிவசப்படாமல் வாழ்வியல் சூழல் சார்ந்த பதிவுகளையும் கலைக்களஞ்சியத்தில் சேர்த்துள்ளதாக ஆசிரியர் குழு தெரிவித்தது.

சவால்கள்

இத்தொகுப்பிற்கான பொருளடக்கத்தைத் தெரிவு செய்து பதிவு செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

சமூக அனுபவங்களாக, அச்சுப் பிரதிகளாக ஆங்காங்கே சிதறிக்கிடந்த தகவல்களை சரிபார்த்து, தொகுப்பதில் குழு சந்தித்த சவால்கள் குறித்து விளக்கினார் திரு சிவா.

“ஆளுமைகள் குறித்த தகவலைத் திரட்டும்போது, அவை பழைய ஆய்வு என்பதால், அச்சில் மட்டுமே இருந்தது. தொடர் முயற்சிக்குப் பிறகு ஆய்வாளர்கள் தங்களிடமிருந்த பிரதியை மனமுவந்து வழங்கி உதவினர்.

அ.சி.சுப்பய்யா 
அ.சி.சுப்பய்யா  - படம்: ஆசிரியர் குழு - சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்.

பழைய தமிழிதழ்களைப் பற்றிய ஆய்வுகளில், அவை குறித்த அட்டைப் படங்களைத் தேடிப்பிடிக்க இத்தொகுப்பின் பங்காளியான தேசிய நூலக வாரியம் உதவியதாக திரு சிவா குறிப்பிட்டார்.

தகவல் துல்லியம்

கலைக்களஞ்சியம் உருவாக்கம் சார்ந்த பணிப் பளுவைச் சுமக்க தனிமனிதர்கள், நிறுவனங்கள், தொழில்நுட்பம் என பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டதாகக் குறிப்பிட்ட திரு சிவா, கலைக்களஞ்சியத்தின் நம்பகத்தன்மை, அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களின் துல்லியம் ஆகியவற்றின் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் தெரிவித்தார்.

“தகவல் பிழைகளைச் சரிபார்ப்பது மிகவும் சவால்மிக்கது. நேரத்தையும் உழைப்பையும் கோரும் செயல். எனினும் தொகுப்பின் நம்பகத்தன்மைக்கும் பயன்பாட்டுக்கும் அது முக்கியம் என்பதால் முடிந்த அளவுக்குச் சீராகச் செய்துள்ளோம்.

“எடுத்துக்காட்டாக ‘பொதுஜன மித்திரன்’ எனும் இதழ் சிங்கப்பூரில் 1923இல் வெளிவரத் தொடங்கியது. அதை வெளியிட்டோர் முகவரி ஒரே காலகட்டத்தில் இருவேறு இடங்களில் வெவ்வேறாகப் பதிவாகி இருந்தது.

“நூறாண்டு கடந்தபிறகு ஒரு தகவலைச் சரிபார்ப்பது எளிதான காரியமல்லை. இருப்பினும் எந்த ஆதாரத்தை நம்பவேண்டும் என்பதை உறுதிசெய்ய, அவ்விதழின் 26ஆம் வெளியீட்டில் வந்திருந்த ஒரு விளம்பரத்தை வைத்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். இதுபோன்ற பல சிரமங்கள் இருந்தன,” என்றார் திரு சிவா.

சில பதிவுகளில் சமூகத்தின் உதவியைக் கோரியதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு பழமையான ஆலயம் குறித்து நம்பகமான ஆதாரங்கள் எதுவும் கிட்டவில்லை என்றும், ஆயினும் அதை விட்டுவிடாமல், உறுதிப்படுத்தமுடிந்த சில தகவல்களை மட்டும் குறிப்பிட்டுவிட்டு அப்பதிவை வெளியிடவுள்ளதாகக் கூறினார்.

ஒலி, ஒளி இணைப்புகள்

மின்தளத்தில் நிறுவப்படவுள்ளதால் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள செய்திகளில் சேர்க்க வேண்டியது, மாற்ற வேண்டியது இருந்தால் அதை அமைப்பாளர்களிடம் தெரிவித்து அவற்றைத் திருத்திவிடலாம்.

“கலைக்களஞ்சியப் பதிவுகள் பொதுவாகச் சுருக்கமானவை. அவரவர் வசதிக்கேற்ப ஆங்கிலத்திலோ, தமிழிலோ வாசிக்கலாம். சாமானியர் மொழியில், ஒரே சீரான நடையில் தொகுக்கப்பட்டவை,” என்றும் ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.

தமிழில் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள சொற்களுக்கு ‘டூல் டிப்’ என்னும் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி அச்சொல்லைத் தொட்டால் ஆங்கிலத்தில் தெரியும் வசதியையும் செய்துள்ளனர். படம், ஒலி, காணொளித் துணுக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பதிவு குறித்து மேலும் தகவல் அறிய ஆர்வமுள்ளோர் நாடவேண்டிய இணையத்தளங்கள், நூல்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

ஒரு பதிவிலிருந்து அதனுடன் தொடர்புடைய மற்றொரு பதிவிற்கு ஒரே சொடுக்கில் செல்லலாம்.

பொதக்குடிவாசிகள்

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தில் இடம்பிடித்துள்ள கணக்கற்ற அமைப்புகளில் சிங்கப்பூர் பொதக்குடி சங்கமும் ஒன்று.

இத்தொகுப்பில் இடம்பெறுவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார் சங்கத்தின் துணைத் தலைவர் என்.அப்துல் மாலிக்.

நாகையிலிருந்து கப்பலில் சிங்கப்பூருக்கு வந்த முன்னோர்கள் பெரும்பாலும் ‘மாமா கடை’ அழைக்கப்படும் சில்லறைக் கடைகள் முதல் மொத்த வியாபாரக் கடைகள் வரை வாழ்க்கைத் தொழில்களை அமைத்தனர் என்றார் திரு மாலிக்.

சிங்கப்பூர் மக்களுக்கு நன்கு அறிமுகமாக ‘மாமா கடை‘ முதலாளிகளான பொதக்குடிவாசிகள்.
சிங்கப்பூர் மக்களுக்கு நன்கு அறிமுகமாக ‘மாமா கடை‘ முதலாளிகளான பொதக்குடிவாசிகள். - படம்: அப்துல் மாலிக்

அக்காலத்தில் சிங்கப்பூரில் இயங்கிவந்த ஹாஜி ஓ.ஏ.முகம்மது இஸ்மாயில் நிறுவனம், நார்த் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்திருந்த ‘ஏகேஎம் ஸக்கரியா பிரதர்ஸ்’ கடை ஆகியவை பொதக்குடிவாசிகளுடையது.

1950ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இடம்: நார்த் பிரிட்ஜ் ரோடு, ‘ஏகேஎம் ஸக்கரியா பிரதர்ஸ்’ கடை
1950ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இடம்: நார்த் பிரிட்ஜ் ரோடு, ‘ஏகேஎம் ஸக்கரியா பிரதர்ஸ்’ கடை - படம்: அப்துல் மாலிக்

அந்த முன்னோரின் பயணம் சிங்கப்பூரின் தமிழர் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறுவது சிறப்புவாய்ந்தது என்றார் திரு மாலிக்.

“அக்காலத்தில் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வின் பல பகுதிகளை நாம் ஆவணப்படுத்தத் தவறிவிட்டோம். எனினும் வருங்கால தலைமுறையினருக்கு நம் வாழ்க்கை கதைகளைப் படமாக, பதிவாக, ஒலியாக, ஆவணமாகக் கொண்டு சேர்க்கும் இம்முயற்சி பாராட்டிற்குரியது, காலத்தின் தேவை,” என்று கூறினார் திரு மாலிக்.

“ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக வாழாதே” என்ற முழக்கத்துடன் சிங்கப்பூரில் வெளியான கையெழுத்து மாத இதழ் ‘எழுச்சி‘.
“ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக வாழாதே” என்ற முழக்கத்துடன் சிங்கப்பூரில் வெளியான கையெழுத்து மாத இதழ் ‘எழுச்சி‘. - படம்: தேசிய நூலக வாரியம்

“ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக வாழாதே” என்ற முழக்கத்துடன் வெளியான கையெழுத்து மாத இதழ் எழுச்சி. இது குறித்த தகவலும் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறவுள்ளது. சிங்கப்பூரில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயன்ற ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு.) கட்சியின் கொள்கைப் பரப்பு ஏடான ‘எழுச்சி‘யின் முதல் இதழ் பிப்ரவரி 1971இல், நான்கு பக்க அளவில், 42 ஏ கிராஸ் ஸ்ட்ரீட் சிங்கப்பூர் 1 முகவரியிலிருந்து வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரில் செயல்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான கலைமகள் தமிழ்ப் பாடசாலை, ஆறுமுகம் என்பவரால் இயோ சூ காங்கில் தொடங்கப்பட்டது.
சிங்கப்பூரில் செயல்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான கலைமகள் தமிழ்ப் பாடசாலை, ஆறுமுகம் என்பவரால் இயோ சூ காங்கில் தொடங்கப்பட்டது. - படம்: சிவனாண்டி தேவர் குடும்பம்
குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தமிழர்கலைக்களஞ்சியம்