தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆதரவற்ற பூனைகளுக்கு அன்பும் ஆதரவும்

6 mins read
சிங்கப்பூரில் ஏறத்தாழ 50,000 வீடற்ற பூனைகள் வீதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புத் தளங்களிலும் வாழ்கின்றன. அக்கம்பக்கங்களில் உலாவும் இப்பூனைகளின் நலனை பல காலமாகப் பேணி வருகின்றனர் பூனைப் பராமரிப்பாளர்கள். இந்தச் சமூகப் பூனைகளுக்கு வேளாவேளைக்கு உணவும் தண்ணீரும் வழங்குவதுடன் அவற்றின்மீது அளவுகடந்த பரிவையும் பொழிகின்றனர் இந்தப் பூனை நலன் விரும்பிகள்.
bf1a874d-daa4-40ca-b827-254a60709479
பூனை நலச் சங்கம், சமூகப் பூனைகளைக் கையாள்வது எப்படி, அவற்றுக்கும் அவற்றை பராமரிப்போருக்கும் எப்படி உதவலாம் முதலியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்று அச்சங்கத்தின் தலைவர் தெனுகா விஜேகுமார் குறிப்பிட்டார்.  - படம். த.கவி
சாலை விபத்தில் சிக்கிய 55 வயது திருவாட்டி தாராவுக்கு இரு முட்டிகளிலும் காயங்கள். கால்வலியைப் பொருட்படுத்தாமல், தினமும் பூனைகளைத் தேடி கிட்டத்தட்ட 30 அடுக்குமாடிக் குடியிருப்புகளை நடந்தே கடக்கிறார். 
சாலை விபத்தில் சிக்கிய 55 வயது திருவாட்டி தாராவுக்கு இரு முட்டிகளிலும் காயங்கள். கால்வலியைப் பொருட்படுத்தாமல், தினமும் பூனைகளைத் தேடி கிட்டத்தட்ட 30 அடுக்குமாடிக் குடியிருப்புகளை நடந்தே கடக்கிறார்.  - படம். த.கவி

சிங்கப்பூரின் கிழக்குப்பகுதியில் உள்ள அக்கம்பக்கப் பேட்டை ஒன்றில் 20 பூனைகளுக்கு நாள்தவறாது சேவையாற்றுகிறார் திருவாட்டி தாரா ஜெயராமன்.

அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் அந்தப் பூனைகளுக்கு உணவும் நீரும் வைக்க கிளம்பிவிடுவார். கடந்த 21 ஆண்டுகளாக திருவாட்டி தாராவின் சாவிக்கொத்து ஓசை கேட்டு விரையப் பழகிவிட்டன அப்பகுதியின் சமூகப் பூனைகள். 

மாதந்தோறும் $300 வரை பூனைகளுக்கு தரமான உணவு வாங்குவதற்குச் செலவிடுகிறார், விளையாட்டுத் துறையில் பணிபுரியும் அவர். உணவளிப்பதுடன், பூனைகளைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது, கருத்தடை செய்ய கூட்டிச்செல்வது போன்ற பணிகளையும் செய்து வருகிறார். 

செல்லப்பிராணிகள் வளர்த்திராத திருவாட்டி தாரா, 2003ஆம் ஆண்டு அந்த வட்டாரத்துக்கு குடிவந்த சமயத்தில் மூதாட்டி ஒருவர் மிதிவண்டியில் சிரமப்பட்டு நாள்தோறும் பூனைகளுக்கு உணவு வைப்பதைக் கண்டு வியந்தார். அந்த மூதாட்டியின் மறைவுக்குப் பின்னர், பூனைகள் உணவின்றித் தவிப்பதை கண்டு அவர் வேதனைப்பட்டார். அன்று தொடங்கி, இன்றுவரையில் பூனை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் அர்ப்பணிப்புடன் அவர் ஈடுபட்டு வருகிறார். 

பூனைகள் குறித்த சில புள்ளிவிவரங்கள்.
பூனைகள் குறித்த சில புள்ளிவிவரங்கள். - கருத்து விளக்கப்படம்: ஆ. விஷ்ணு வர்தினி

திருவாட்டி தாரா குடியிருக்கும் ஐந்தறை வீடு, 17 பூனைகளுக்குப் புகலிடமாக உள்ளது. தத்தெடுத்த பூனைகளுடன், கைவிடப்பட்ட பூனைகளை வளர்க்க உதவி அவற்றுக்கு இல்லம் தேடிக்கொடுக்கிறார் அவர். பூனைகளுக்கு ஏற்றவாறே தன் வீட்டையும் அவர் மாற்றி அமைத்துள்ளார்.

சாலையில் கைவிடப்பட்ட பூனைகள், உரிமையாளர்களின் அலட்சியத்தால் மேல் மாடிகளிலிருந்து விழுந்த பூனைகள் என்று பூனை வதைச் சம்பவங்கள் பற்றிப் பேசியபோது திருவாட்டி தாராவின் கண்கள் கலங்கின. சிறு வயதிலிருந்தே தாம் உணவு ஊட்டிய சில பூனைகள் இறந்துபோகும்போது அவற்றை அடக்கம் செய்ய அனுப்பும் வேதனையை பலமுறை அனுபவித்தவர் அவர்.

“சமூகப் பூனைகளைப் பராமரிப்பது எளிதான பணி அல்ல. சில வழிப்போக்கர்கள் உணவு வைக்கும்போது எங்களைக் கண்டிப்பர். பணம் செலவிடுவதைவிட இதற்காக நேரத்தை செலவிடுவதே கடினம். இப்படி பல தடைகளைக் கடந்து இப்பணியை இடைவிடாது தொடரவேண்டும்,” என்றார் அவர். 

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இவ்வாண்டு முதல் வீட்டுக்கு இரு பூனைகள் வளர்க்க அனுமதித்துள்ளதை திருவாட்டி தாரா வரவேற்கிறார். ஆனால், இன்னும் கருத்தடை செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்காதது ஒரு பெரிய பின்னடைவு என்றார் அவர்.

பூனை உரிமையாளர்கள் பூனைக்குட்டிகளை தெருவில் விடுவதைக் குறைக்கவும், வீடற்ற பூனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், கருத்தடை செய்வதே நிரந்தரமான தீர்வாகும் என்பது அவரின் கருத்து.

உடல்நிலை காரணமாக ஐந்தாண்டு காலத்தில் இப்பணியிலிருந்து ஓய்வெடுக்க வேண்டி இருக்கும் என்ற திருவாட்டி தாரா, தமக்குப் பிறகு இப்பூனைகளைப் பராமரிக்க இளம் தன்னார்வலர்களை உருவாக்கி வருகிறார். அவர்களைத் தம் சேவையில் இணைத்து அவற்றைப் பராமரிக்கச் சொல்லித் தருகிறார். சமூகப் பூனைகளுக்கு சமூக அளவிலான அன்பும் பரிவும் கூடவேண்டும் என்பது அவரின் வேண்டுகோள்.

மெத்தனப்போக்கு நீங்கவேண்டும் 

செல்லப்பிராணியாக வளர்த்த தமது முதல் பூனைக்காக அவர் வாங்கிய உணவு வீணாகும் தருணங்களில் கீழ்த்தளத்தில் இருந்த பூனைகளுக்கு உணவளிக்க தொடங்கினார் திரு பன்னீர்செல்வம். நாளடைவில் அவரின் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பூனைகள் எல்லாமே அவருக்குப் பழக்கமாகிவிட்டன.
செல்லப்பிராணியாக வளர்த்த தமது முதல் பூனைக்காக அவர் வாங்கிய உணவு வீணாகும் தருணங்களில் கீழ்த்தளத்தில் இருந்த பூனைகளுக்கு உணவளிக்க தொடங்கினார் திரு பன்னீர்செல்வம். நாளடைவில் அவரின் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பூனைகள் எல்லாமே அவருக்குப் பழக்கமாகிவிட்டன. - படம். த.கவி

வாடகை வீடுகள் அதிகம் உள்ள குடியிருப்பில் வசிக்கும் 46 வயது திரு பன்னீர்செல்வத்தின் கவலை உரிமையாளர்களின் மெத்தனப்போக்கு. அவரின் அக்கம்பக்க வட்டாரங்களில் வசிக்கும் பூனைகளைக் கடந்த 24 ஆண்டுகளாக பிள்ளைகள்போலவே அரவணைத்து வருகிறார். தாயாருடனும், இரு பூனைகளுடனும் வசித்து வரும் அவர் இரவுகள்தோறும் பூனைகளுக்கு உணவளிக்க குறிப்பிட்ட தொகையைச் செலவிடுகிறார்.

“சிலர் குட்டிகளாக பூனைகளை செல்லமாக வளர்த்துவிட்டு பெரிதானதும் தெருவில் விட்டுவிடுகின்றனர். சிலர் சன்னல்களில், கதவுகளில் தடுப்புகள் வைப்பதில்லை. பல நாள்கள் பூனை காணாமல் போனாலும் வீட்டுக்கு வந்துவிடும் என இருந்து விடுகின்றனர். நோயுற்ற பூனைகளின் மருத்துவச் செலவு கருதியும் அநாதையாக விட்டுவிடுவது வருத்தமளிக்கிறது,” என்றார் திரு பன்னீர்செல்வம். பூனை உரிமையாளர்கள் சன்னல்களில் தடுப்பு வைத்து வீட்டை பூனைகளுக்கு பாதுகாப்பாக வைப்பது சட்டபடிப் கட்டாயமாக்கப்பட வேண்டும் என திரு பன்னீர்செல்வம் எதிர்பார்க்கிறார்.

இடுப்புப் பகுதியில் ஊனமுற்றிருந்த ஒரு பூனைக்கு உணவளித்து வந்ததை நினைவுகூர்ந்தார் திரு பன்னீர்செல்வம். கிருமித்தொற்று காரணமாக, தோல் அழுகத் தொடங்கிய அப்பூனைக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டதை அச்சமயம் அவர் உணரவில்லை. அப்பூனையைக் கடைசி நேரத்தில் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது அவர்கள் கைவிரித்துவிட்டதில் ஏற்பட்ட குற்றவுணர்ச்சி இன்றும் அவரை வாட்டுகிறது. இதனால் உணவளிப்பதோடு, மருத்துவ பரிசோதனைகளுக்கு பூனைகளைக் கூட்டி செல்வதும் அவரின் வழக்கமானது.

கால்நடை மருத்துவரிடம் ஒருமுறை சென்றாலே $100இலிருந்து $300 வரை செலவாகலாம். அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் இத்தொகை பன்மடங்காகலாம். அவ்வாறு சிறுநீரகத்தில் கற்கள் இருந்த ஒரு பூனைக்கு சிகிச்சைத் தொகையை அளித்த அவர், அதனை தத்தெடுத்து வளர்க்கிறார். தனியார் கால்நடை மருத்துவச் செலவு கடந்தாண்டுகளில் உயர்ந்திருந்தாலும், நிதிக் கவலைகளைத் தாண்டிய இணக்கமான உறவை இப்பூனைகளோடு கொண்டுள்ளதாக உணர்கிறார் திரு பன்னீர்செல்வம்.

தெருப் பூனைகளுக்கு உணவு வைப்பது சிங்கப்பூரில் சட்டவிரோதமானதல்ல. ஆனால், வைத்த உணவையும் நீரையும் இரண்டு மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்திவிட வேண்டும். பொறுப்புணர்வின்றி உணவு வைப்போருக்கு அபராதங்கள் விதிக்கப்படக்கூடும். இதனை அறிந்து, இரவு 10 மணியிலிருந்து 11 மணி வரை அங்குள்ள ஏறக்குறைய 20 பூனைகளுக்கு உணவு வைத்த பின்னர் துப்புரவு செய்யவும் நேரம் ஒதுக்குகிறார் திரு பன்னீர்செல்வம். 

பூனைகளும் நம்மில் ஒருவரே

அவர் பராமரிக்கும் பூனைகள் தம்மை நம்பி இருக்கின்றன என எண்ணும்போது வாழ்வில் அர்த்தம் கண்டதுபோல உணர்கிறார்  திருவாட்டி ஶ்ரீரதி சந்திரபோஸ்.
அவர் பராமரிக்கும் பூனைகள் தம்மை நம்பி இருக்கின்றன என எண்ணும்போது வாழ்வில் அர்த்தம் கண்டதுபோல உணர்கிறார் திருவாட்டி ஶ்ரீரதி சந்திரபோஸ். - படம். த.கவி

வாழ்வில் விழுந்த இடிகளிலிருந்து தம்மை மீட்டது பூனைப் பாராமரிப்பு என்பது 42 வயது திருவாட்டி ஶ்ரீரதியின் நம்பிக்கை. 12 ஆண்டுகளாக அதீத மனசோர்வு, நீரிழிவு நோய் ஆகியவற்றைச் சமாளித்து வரும் அவருக்கு 10 அக்கம்பக்கப் பூனைகளோடு அன்றாடம் உறவாடுவது மனதுக்கு மருந்தாக விளங்குகிறது. வாடகை வீட்டில் தனியாக வசிக்கும் அவர், குடும்ப எதிர்ப்புகளைத் தாண்டி மாத வருமானமான $1,300இல் $300 வரை இப்பூனைகளுக்காக அர்ப்பணிக்கிறார். 

“பூனைகள் நல்ல சகுனமல்ல, அவற்றிடம் நெருங்கக்கூடாது என்றெல்லாம் சிலர் கூறுவர். இப்பூனைகளும் உயிரினங்களே. அவை காட்டும் அன்புக்கு ஈடில்லை,” என்றார் திருவாட்டி ஶ்ரீரதி.

பூனை தன்னார்வலர்களில் பலர் மூத்தோர், அல்லது குறைந்த வருமானமுடையோர் இருக்கும்பட்சத்தில், எதிர்பார்ப்பின்றி இப்பூனைகளின் நலனுக்காக செலவிடும் போக்கை சிங்கப்பூர் நீண்ட நாள் சார்ந்திருப்பது சாத்தியமில்லை என்றார் திருவாட்டி ஶ்ரீரதி.

சமூகப் பூனைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்தோடும் இருக்க கூடுதலான நிலையங்கள், கட்டமைப்புகள் அமைக்கப்படவேண்டும் என்பது அவரின் விருப்பம். கூடுதலான வெற்றிடங்களும் காலித் திடல்களும் கட்டடங்களான பின்னர் இப்பூனைகள் எங்கு போகும் என்ற கவலையையும் அவர் முன்வைத்தார். 

நண்பர் திரு சந்திரமூர்த்தி கிருஷ்ணமூர்த்தியோடு இணைந்து இடுகாட்டுப் பகுதியில் புறக்கணிக்கப்பட்டுத் திரியும் விலங்குகளுக்கு இரவுதோறும் உணவளிக்கிறார்  திருவாட்டி மும்தாஸ்.
நண்பர் திரு சந்திரமூர்த்தி கிருஷ்ணமூர்த்தியோடு இணைந்து இடுகாட்டுப் பகுதியில் புறக்கணிக்கப்பட்டுத் திரியும் விலங்குகளுக்கு இரவுதோறும் உணவளிக்கிறார்  திருவாட்டி மும்தாஸ். - படம். த.கவி

தமது தந்தை மரணமடைந்த சமயத்தில் இடுகாட்டுப் பகுதியில் புறக்கணிக்கப்பட்டுத் திரியும் பூனைகளும் நாய்களும் 47 வயது திருவாட்டி மும்தாஸின் உலகத்தில் முக்கிய அங்கம் ஆயின. சக்கர நாற்காலியிலிருந்த அவரின் அம்மாவோடு வாரந்தோறும் இடுகாட்டுப் பகுதியில் இருந்த பிராணிகளுக்கு உணவு சமைத்தோ வாங்கியோ ஊட்டி வந்தார் அவர். அதே பகுதியில் நாய்களுக்கு உதவி வந்த நண்பர் திரு சந்திரமூர்த்தி கிருஷ்ணமூர்த்தியோடு இணைந்து இரவுதோறும் விலங்குகளுக்கு அவர் உணவளிக்கிறார். 

“இடுகாடு பகுதி என்று நினைப்பதால் இங்குள்ள விலங்குகளுக்காக யாரும் வருவதில்லை. இந்த விலங்குகளும் நம் சமூகத்தின் ஒரு பகுதியே. அவற்றை அரவணைக்க வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும்,” என்றார் திருவாட்டி மும்தாஸ் பேகம். 

சமூகப் பூனைகளுக்கு உதவிக்கரம்

மாதந்தோறும் வசதிகுறைந்த பூனை உரிமையாளர்களுக்கு உதவும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் பூனை நலச் சங்கத்தின் தலைவர் தெனுகா விஜேகுமார்.
மாதந்தோறும் வசதிகுறைந்த பூனை உரிமையாளர்களுக்கு உதவும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் பூனை நலச் சங்கத்தின் தலைவர் தெனுகா விஜேகுமார். - படம். த.கவி

பூனைகள் கைவிடப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அடிப்படைச் சமூக சிக்கல்களின் அறிகுறிகள். மாதந்தோறும் வசதிகுறைந்த பூனை உரிமையாளர்களுக்கு உதவும் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது பூனை நலச் சங்கம். 

பூன் லேயில் கடந்த நவம்பரில் சமூகப் பூனைப் பராமரிப்பாளர்களுக்கு உதவும் திட்டம் ஒன்றையும் தொடங்கி, அவர்களுக்கான நிதியுதவி, பொறுப்பாக உணவளித்தல் குறித்த விழிப்புணர்வு முதலியவற்றை அது புகட்டி வருகிறது. 

“மக்களின் அறியாமை ஒரு பெரிய சவால். ஊரடங்கு காலத்தில்தான் அண்டை வட்டாரத்தில் திரியும் பூனைகள் பலரின் கண்களில் தென்பட்டன. அவற்றை கையாள்வது எப்படி, அவற்றுக்கும் அவற்றை பராமரிப்போருக்கும் எப்படி உதவலாம் முதலியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,” என்றார் பூனை நலச் சங்கத்தின் தலைவர் தெனுகா விஜேகுமார், 38. 

கால்நடை மருத்துவச் சேவைகளின் செலவு அதிகரித்திருப்பது தொண்டூழியர்களின் பாரத்தைக் கூட்டி உள்ளது. விலங்கு நல மையத்தின் தலைமை அதிகாரி டாக்டர் ஜீன்-பால் லி இத்துறையில் புதிய மருத்துவர்களின் எண்ணிக்கை, முழுநேர மருத்துவர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது என்றார்.

தங்களைப் போன்ற தனியார் கால்நடை மருத்துவமனைகள் சமூகப் பூனை பராமரிப்பாளர்களைக் கண்டறிந்து சலுகைகள் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 

கொவிட்-19இல் தனிமை காரணமாக பூனைகளைத் தத்தெடுத்த பலர் மீண்டும் பரபரப்பான வாழ்க்கைக்குத் திரும்பியதன் பிறகு அவற்றைக் கைவிடுவதாக வருந்தினார் சிங்கப்பூர் விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தின் (எஸ்பிசிஏ) தலைமை நிர்வாகி ஆர்த்தி சங்கர், 37. கைவிடப்பட்ட பூனைகள் அனைத்திற்கும் தங்குமிடம் தருமளவு சிங்கப்பூரில் போதிய இடவசதி பெற்ற நிலையங்கள் இல்லை. 

இந்தியச் சட்டத்தின்கீழ் விலங்குகள் மனிதர்களுக்கு இணையாக கருதப்படுகின்றன. ஆனால், சிங்கப்பூரில் உடைமைப் பொருள்களுக்கான சட்டமே விலங்குகளுக்கு இருப்பதால் அவற்றின் சட்டபூர்வ உரிமைகள் சற்று குறைவே என்று விளக்கினார் ஆர்த்தி. 

“அதிகாரிகள் எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கல், கைவிடப்பட்ட பூனைகளின் பின்னணியைக் கண்டறிந்து துப்பு துலக்குவதுதான். இத்தகைய புகார்கள் அதிகரித்துக்கொண்டே இருக்க, நம் வளங்கள் ஒருபுறம் குறைவாக இருக்கின்றன. இக்காரணங்களால் பூனைகளைக் கைவிடுவோரைச் சட்டப்படி தண்டிப்பது கடினமாக உள்ளது,” என்றார் அவர். சமூகப் பூனைகளுக்காக இன்னும் பல கைகள் இணையவேண்டும், பல கால்கள் களமிறங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

குறிப்புச் சொற்கள்