‘ஏஐ’ துணையுடன் தீர்வுகாண உதவும் புதிய கற்றல் நிலையம்

‘ஏஐ’ துணையுடன் தீர்வுகாண உதவும் புதிய கற்றல் நிலையம்

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

29 Oct 2026 - 8:13 pm

2 mins read

ரவி சிங்காரம்

செயற்கை நுண்ணறிவுமூலம் மெய்யுலக வாழ்க்கைச் சவால்களுக்குத் தீர்வுகாண விரும்புவோர்க்குச் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) தொடங்கியுள்ள ‘எஸ்யுடிடி கோலேப்’ எனும் புதிய கற்றல் நிலையம் கைகொடுக்கவுள்ளது.

வாழ்நாள் கற்றல் கழகத்தில் அமைந்துள்ள அப்புதிய நிலையத்தில் நடைபெறும் பயிலரங்குகள், நிறுவனங்கள், சமூகக் குழுக்கள், தொழில்துறையினர் எனப் பலதரப்பட்டோரையும் சென்றடையும்.

நிறுவனங்களும் தனிமனிதர்களும் ‘கற்றல், உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல்’ என்ற அடிப்படையில் இந்நிலையம் நடத்தும் மூன்று நாள் பயிலரங்குகளில் பங்கேற்று, தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் தீர்வுகளைக் கண்டறியக் கற்றுக்கொள்ளலாம். 

பின்பு, சிறந்த தீர்வுகளை நிறுவனங்களிலோ சமூகத்திலோ செயல்படுத்த, எஸ்யுடிடியும் ‘ஏவ்பாயின்ட்’ (AvePoint), ‘மெய்வன்பாயின்ட்’ (MaivenPoint) ஆகிய நிறுவனப் பங்காளிகளும் இணைந்து ஆதரவு வழங்கும். 

பரவலான ‘ஏஐ’ மட்டும் இலக்கன்று

அக்டோபர் 26ஆம் தேதியன்று நடந்த திறப்பு விழாவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், நிறுவனங்களின் ஏஐ பயன்பாடு 2024ல் 14.7 விழுக்காட்டிலிருந்து 2025ல் 23.5 விழுக்காட்டுக்கு உயர்ந்ததைச் சுட்டிக்காட்டினார்.

எஸ்யுடிடி ஆய்வாளர்களின் புத்தாக்க முயற்சியான சக்கர நாற்காலியைத் தள்ளும் இயந்திர மனிதரைச் சோதித்துப் பார்த்தார் மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ்.
எஸ்யுடிடி ஆய்வாளர்களின் புத்தாக்க முயற்சியான சக்கர நாற்காலியைத் தள்ளும் இயந்திர மனிதரைச் சோதித்துப் பார்த்தார் மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ். -  படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

“ஆனால், வெற்றியின் உண்மையான அளவுகோல் நாம் எத்தனை கருவிகளைப் பயன்படுத்துகிறோம் என்பதன்று. நாம் எவ்வளவு பயன்பெறுகிறோம் என்பதே. சிங்கப்பூரர்கள் ‘ஏஐ’யைப் பரவலாகப் பயன்படுத்துவது மட்டும் இலக்கன்று; அதன்மூலம் மக்களின் வாழ்வுக்கு அர்த்தமுள்ள மாற்றங்களைப் பாதுகாப்பான, நம்பகமான முறையில் ஏற்படுத்துவதே ஆகும்,” என்றார் திரு டான். 

$50 மில்லியன் நிதி முதலீட்டுடன் உலகின் முதல் ‘வடிவமைப்பு ஏஐ’ பல்கலைக்கழகமாக அடியெடுத்துவைப்பதாக எஸ்யுடிடி 2025 ஜனவரியில் அறிவித்ததையொட்டி, ‘மனிதன்-ஏஐ-மனிதன்’ என்ற புதிய கற்றல்முறையை உருவாக்கியதாக அதன் தலைவர் பேராசிரியர் பூன் கோக் குவாங் கூறினார்.

“பலருக்கும் நல்ல தீர்வுகள் மனத்தில் தோன்றினாலும் அவற்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த அவர்களுக்குத் தெரிவதில்லை. ‘எஸ்யுடிடி கோலேப்’ மூலம் எழும் நல்ல தீர்வுகளுக்கு அதன் ஆய்வுக்கூட வசதிகளும் வல்லமையும் கைகொடுக்கும்,” என்றார் பேராசிரியர் பூன்.

‘எஸ்யுடிடி கோலேப்’பை திறந்துவைத்த மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் (நடுவில்). அவருடன் எஸ்யுடிடி தலைவர் பேராசிரியர் பூன் கோக் குவாங் (இடது), ‘ஏவ்பாயின்ட்’ தலைமை நிர்வாகி முனைவர் தியஞ்சி ஜியாங்.
‘எஸ்யுடிடி கோலேப்’பை திறந்துவைத்த மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் (நடுவில்). அவருடன் எஸ்யுடிடி தலைவர் பேராசிரியர் பூன் கோக் குவாங் (இடது), ‘ஏவ்பாயின்ட்’ தலைமை நிர்வாகி முனைவர் தியஞ்சி ஜியாங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

‘எஸ்யுடிடி’ நடத்தியுள்ள நிர்வாக ‘டிசைன் ஏஐ’ திட்டங்கள்வழி 2,800க்கும் மேற்பட்ட மூத்த வர்த்தகத் தலைவர்கள் பயன்பெற்றுள்ளனர். 

எடுத்துக்காட்டாக, எஸ்யுடிடி நடத்திய மூன்று நாள் பயிலரங்குக்குச் சென்றபின், ‘செர்ட்டிஸ்’ நிறுவனத்தினர் கட்டட வசதிகளை மேற்பார்வையிடுவது, சட்டத்துக்குப் புறம்பான முறையில் கார் நிறுத்துவோரை ஏஐமூலம் கண்டறிவது உள்ளிட்ட ஆறு தீர்வுகளை உருவாக்கினர். 

மெண்டாக்கியைச் சார்ந்த இளையர்கள் ‘எஸ்யுடிடி அகாடமி’யின் ‘டைவ் ஃபர்தர்’ பயிலரங்குக்குச் சென்றதும் உருவாக்கிய ‘மைகம்போங்’ எனும் தளம், அண்டைவீட்டாரிடம் உதவி கேட்பதை எளிமைப்படுத்துகிறது.

தொடக்கவிழாவையொட்டி நிகழ்ந்த கண்காட்சியில், உரையாடல்வழி முப்பரிமாண முறையில் அச்சிட உதவும் ‘டாக்2பிரின்ட்’ (Talk2Print) கருவி, சக்கர நாற்காலியை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தள்ளும் இயந்திர மனிதர், கொசுக்களைச் சிக்கவைக்கும் ‘டிராகன்ஃபிளை’ இயந்திர மனிதர் போன்ற புத்தாக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

அதே நாள், எஸ்யுடிடி கோலேப், ‘எஸ்ஜி இனேபல்’ உடன் இணைந்து நடத்திய பயிலரங்கில், உடற்குறையுள்ளோரும் சிறப்புத் தேவையுடையோரும் ஏஐ உதவியுடன் வேலைக்கான விண்ணப்பங்களை உருவாக்கக் கற்றுக்கொண்டனர்.

மேல்விவரங்களுக்கு https://www.sutd.edu.sg/admissions/academy/sutd-colab-lli/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்