தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் முரசின் இருமொழிப் பார்வை

4 mins read
567e8801-d306-49bb-8fd5-62b31f17f8dc
தமிழ் முரசு நாளிதழையும் தப்லா வார இதழையும் படித்துக்கொண்டிருக்கும் தமிழ் முரசு செய்தியாளர் கி.ஜனார்த்தனன் (இடமிருந்து), தமிழ் முரசு நிர்வாக மின்னிலக்க உதவி ஆசிரியர் முஹம்மது ஃபைரோஸ், தமிழ் முரசு செய்தி ஆசிரியர் இர்‌‌‌ஷாத் முஹம்மது, தப்லா செய்தியாளர் சக்தி சிங்காரவேலு. - படம்: யோகிதா அன்புச்செழியன்

தொடக்க காலத்திலிருந்தே மொழியை வெறும் தொடர்பாடலுக்கு மட்டுமல்ல, மக்களை மேம்படுத்தவும் இணைக்கவும் உதவும் கருவியாகவும் தமிழ் முரசு முன்னிறுத்தி வருகிறது.

செய்தியறையில் பணியாற்றும் அனைவரும் ஒரு மொழியில் எழுதுவதைத் தாண்டி, தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் சிந்தித்து, தகவல்களைத் திரட்டி, துல்லியமாக மொழிபெயர்த்து, ஒவ்வொரு செய்தியிலும் தங்கள் மொழித் திறனையும் பத்திரிகைத் திறனையும் மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரும்பாலான செய்தி வெளியீடுகளும் அதிகாபூர்வ அறிக்கைகளும் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டாலும், அவற்றைத் தெளிவான, இயல்பான தமிழில் மொழிபெயர்ப்பது இவர்களின் அன்றாடப் பணிகளில் ஒன்றாகும். இந்தத் தொடர்ச்சியான பயிற்சி காலப்போக்கில் இருமொழிகளிலும் அவர்களின் வலிமையை வலுப்படுத்துகிறது.

“தமிழ் முரசில் இருமொழித் திறன் என்பது தேர்வுக்குரியது அல்ல. மாறாக, அது அவசியமானதாகியுள்ளது,” என்றார் தமிழ் முரசு செய்தியாளர் கி.ஜனார்த்தனன், 35. “சீரான தமிழில் எழுதுவதற்கான அடித்தளமாக இருப்பது, ஆங்கில மூலச் செய்தியை நாம் எவ்வளவு தெளிவாகப் புரிந்துகொள்கிறோம் என்பதில்தான்.”

“மொழிபெயர்ப்பின் போது, ஆங்கிலத்தைச் சொல்லுக்குச் சொல் தமிழில் மொழியாக்கம் செய்ய முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.

“செய்தியின் சாரத்தையும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டு, அதன் தொனியைத் தக்கவாறு மாற்றி, தமிழ் வாசகர்களுக்குப் பொருந்தும் வகையில் மொழியையும் நடைமுறையையும் சீரமைத்துத் தருகிறோம்.

“சில நேரங்களில், தமிழில் தயாரிக்கப்பட்ட செய்திகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து, வாசகர்களை அடைகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த இருமொழிப் பார்வை, வரலாற்றின் வேர்களைக் கொண்டது.

1940 ஜூன் 4 முதல் நவம்பர் 30 வரை, தமிழ் முரசு இதழ் 8வது பக்கத்தில் ஆங்கிலச் செய்திகளை வெளியிட்டது.

அதே ஆண்டில் டிசம்பர் 2ஆம் தேதி ‘தி இந்தியன் டெய்லி மெயில்’ என்ற ஆங்கில நாளிதழைத் தமிழ் முரசு நிறுவனர் கோ. சாரங்கபாணி தொடங்கினார். போர்க்காலத் தடைகளால் 1941ல் நிறுத்தப்பட்ட இந்த இதழ், 1946ல் மீண்டும் தொடங்கி 1956 வரை நீடித்தது.

1990களின் பிற்பகுதியில், தமிழ் முரசு வாரம் ஒருமுறை ஆங்கிலச் செய்திகளை உருவாக்கி இருமொழிச் செய்திகளை மீண்டும் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி, தமிழ் முரசு நாளிதழின் துணைப் பத்திரிகையாக தப்லா என்ற இலவச ஆங்கில வார இதழ் தொடங்கப்பட்டது. இது மொழி எல்லைகளைத் தாண்டி, சிங்கப்பூரில் வாழும் பலதரப்பட்ட இந்திய வாசகர்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சில சமயங்களில், தமிழ் முரசில் வெளியான செய்திகள் தப்லா பத்திரிகைக்காக மொழிபெயர்க்கப்படும்போது, அவற்றை தமிழில் எழுதிய அதே செய்தியாளர்தான் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வார். இது அவரது இருமொழி எழுத்துத் திறனை மேலும் விருத்தி செய்யும் வாய்ப்பாக அமைகிறது.

2013ஆம் ஆண்டு தற்காலிக நிருபராக பணியைத் தொடங்கி, இப்போது நிர்வாக மின்னிலக்க உதவி ஆசிரியராக செயல்படும் முஹம்மது ஃபைரோஸ், 35, மிகப் பரவலாக வாசிக்கப்பட்ட தனது கதை ஒன்றை எழுத வந்த வழி இதுவே.

இனங்களுக்கிடையேயான திருமணத்தில் இணைந்த ஒரு சீன-தமிழ் தம்பதியர் 12 குழந்தைகளை வளர்த்த வாழ்க்கை கதையைப் பற்றி அவர் தமிழ் முரசுக்காக எழுதியதையடுத்து, அதைத் தப்லாவுக்காக ஆங்கிலத்திலும் திரு ஃபைரோஸ் மொழிபெயர்த்தார். இந்த ஆங்கிலக் கட்டுரை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிலும் வெளியானது. குறிப்பிடத்தக்கவிதமாக, முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் அந்தக் கதையைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.

“அந்தக் கதை அவ்வளவு பரவலாக வாசிக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்ற திரு ஃபைரோஸ், அதன் வெற்றி தனக்கு தனது திறன்களில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்ததாக சொன்னார்.

மேலும், “சிங்கப்பூர் போன்ற பல்லின சமூகத்தில் இருமொழி ஊடகவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் முரசில் அதைச் சரியாகக் கையாள்வதற்கு உரிய சூழலும் ஆதரவும் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

அண்மையில், வாசகர்கள் செய்திகளை மேலும் எளிதாக அணுகும் வகையில், தமிழ் முரசு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கட்டுரைகளின் தலைப்புகளையும் சுருக்கங்களையும் ஆங்கிலத்தில் தானாக மொழிபெயர்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், தமிழில் புழக்கமில்லாதவர்கள் உட்பட, அனைவரும் செய்திகளைப் புரிந்து படிக்க முடிகிறது.

இதே அணுகுமுறையும் தமிழ் முரசின் இளையர்களுக்கான புதிய மின்னிலக்க தளமான ‘இளைய தலைமுறை’யிலும் வெளிப்படுகிறது. சமூக ஊடகங்களில் செயலில் உள்ள இந்தத் தளத்தில், தமிழும் ஆங்கிலமும் கலந்த பதிவுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு, அடுத்த தலைமுறையைச் சென்றடைய இருமொழிக் கருத்து புதிய வடிவத்தில் உருவெடுக்கிறது.

காலத்தோடும் சமூகப் பயன்பாடுகளுடனும் இசைவாக, தமிழ் முரசு தனது இருமொழிப் பார்வையை இடைவிடாது மேம்படுத்தி வருகிறது.

மொழி ஒரு தடையாக இல்லாமல், மக்களுக்கிடையேயான பாலமாக இருக்க வேண்டும் என்பதையே வழிகாட்டுநெறியாகக் கொண்டு, செய்திகளைச் சிறப்பாகவும் தெளிவாகவும் வழங்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்