தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழுக்குத் தொண்டாற்றும் ஆசிரியர்களுக்‌கு விருது

14 mins read
1d784c22-ff63-4e90-9df0-47d4a73fa6df
தொடக்‌கப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற (இடமிருந்து) திருவாட்டி சாரதா ராமன், திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன், திருவாட்டி வீரராஜு தேவிகா. - படம்: பே.கார்த்திகேயன்
multi-img1 of 4

சிறுவயதிலிருந்தே மாணவர்களின் மனத்தில் அழகு தமிழ்மொழியை ஆழமாக விதைக்‌கும் ஆசிரியர்களை ஆண்டுதோறும் கொண்டாடும் ‘நல்லாசிரியர் விருது’ நிகழ்ச்சியில் இவ்வாண்டு ஒன்பது ஆசிரியர்கள் சிறப்பிக்‌கப்பட்டனர். விருது பெற்ற ஆசிரியர்கள் தமிழை வாழும் மொழியாக நிலைநாட்ட தாங்கள் ஆற்றிவரும் பங்கு குறித்து தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­துபெற்ற  முனைவர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன், 68.
வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­துபெற்ற முனைவர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன், 68. - படம்: பே.கார்த்திகேயன்

சிங்கப்பூரின் தமிழ்மொழி கல்வித் துறையில் தமது 44 ஆண்டுகால சேவையின்வழி ஆசிரியர் பணிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் முனைவர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன், 68.

சிங்­கப்­பூ­ரில் முன்­மா­தி­ரி­யா­கத் திக­ழும் மூத்த தமி­ழா­சி­ரி­யர்­க­ளைச் சிறப்பிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் வழங்­கப்­படும் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­து இவ்வாண்டு முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியனுக்கு வழங்கப்பட்டது.

தற்போது தேசியக் கல்விக் கழகத்தில் தமிழ்மொழியையும் நற்குணம், குடியியல் கல்வியையும் குழந்தைகளுக்கான இலக்கியத்தையும் கற்பிக்‌கும் பகுதி நேர விரிவுரையாளராகவும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளி பிரிவுக்கான வளவாளராகவும் (resource person) பணிபுரிந்துவரும் திரு ஜெயராஜதாஸ், தமிழ்மொழி பாடத்திட்டங்கள், கற்பித்தல் வளங்கள், ஆசிரியர்களுக்‌குப் பயிற்சி அளிப்பதற்கான முன்முயற்சிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

தம் தந்தையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆசிரியர் துறையில் சேர்ந்த திரு ஜெயராஜதாஸ், இளவயதிலிருந்தே தமிழ்ப் பாடல்களை மிகுந்த விருப்பத்துடன் பாடி, அவற்றின் பொருளை ஆராயத் தொடங்கியதாகச் சொன்னார். தமிழ்மொழி கற்பித்தலில் இசையைப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக திகழ்ந்த திரு ஜெயராஜதாஸ், சிங்கப்பூர்த் தமிழ் மாணவர்களுக்காக ஏராளமான கல்விப் பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார்.

“கல்வி அமைச்சின் ஆதரவுடன் பாட நூல்களிலிருக்கும் சிறுவர் பாடல்களுக்கு நவீன இசையமைத்து, அவற்றைப் பள்ளிகளுக்குக்‌ கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இம்முயற்சி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது,” என்று நினைவுகூர்ந்தார் திரு ஜெயராஜதாஸ்.

அந்த ஊக்கத்துடன், மாணவர்களுக்கு நன்னெறியைப் புகட்டும் நோக்கத்துடன் சிங்கப்பூரை மையமாக கொண்ட பாடல்களை அவரே சொந்தமாக எழுதவும் ஆரம்பித்தார்.

சிறப்பு எழுத்தாளர், திட்ட இயக்குநர், மூத்த பாடத்திட்டச் சிறப்பாய்வாளர், துணைத் தலைமை ஆசிரியர், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மேற்பார்வையாளர், தலைமை முதன்மை ஆசிரியர் போன்ற பல்வேறு தலைமைத்துவ பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

1996 முதல் 2000 வரை மூத்த பாடத்திட்ட வல்லுநராகச் செயலாற்றி குடிமையியல், ஒழுக்கநெறி கல்விக்‌கான பாடத்திட்ட உருவாக்கத்தை வழிநடத்தினார். அதன்பின் கிரீன்ரிட்ஜ் தொடக்கப் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியராகச் செயல்பட்ட இவர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழிப் பாடத்திட்ட மறுஆய்வு வழிகாட்டல் குழுவின் உறுப்பினராக 2005 முதல் 2022 வரை செயல்பட்டு சிங்கப்பூரில் பாலர் பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரை தமிழ் கற்றலை மேம்படுத்துவதில் பங்களித்தார்.

அதுமட்டுமின்றி, தமிழாசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்ததோடு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் முதன்மைக் கற்பித்தல் கூடத்தையும் மாணவர் ஒலிபரப்புக் கூடத்தையும் அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

வாழ்நாள் கற்றலில் முழு நம்பிக்‌கை கொண்டுள்ள திரு ஜெயராஜதாசுக்கு வயது ஒரு தடையில்லை. 50 வயதில் பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலில் முதுகலைப் பட்டமும் பின்னர் 60 வயதில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

மற்ற ஆசிரியர்களுக்‌கும் பயனளிக்கும் என்ற நோக்‌கத்துடன், உயர்தமிழ் மாணவர்களிடையே தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்க பிரபலமான தமிழ் பாடல்களைப் பயன்படுத்தி, புதுமையான கற்பித்தல் முறைகளைப் பற்றி தமது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

“ஆறு வயதில் நான் பாடத் தொடங்கியது அறுபது வயதில் முனைவர் பட்டம் பெற வழிவகுத்தது,” என்றார் திரு ஜெயராஜதாஸ்.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதனை முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் எனக் கூறும் அவர், அதில் வெற்றியடைய அதன் ஆழத்தை அறிந்து அதில் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

“கற்றல் என்பது எங்கும் எப்போதும் நிகழக்கூடியது. மாணவர்களுக்குக்‌ கற்றுக் கொடுக்கும்போது, பாடக் குறிப்புகளை மட்டும் சொல்வது போதாது. இன்றைய காலகட்டத்தில், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக்‌ கற்பிப்பதோடு, நாமும் தொடர்ந்து புதியனவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார் திரு ஜெயராஜதாஸ்.

தேசியக் கல்விக் கழகத்தில் 1980ல் பட்டப்படிப்பை முடித்தபோது சிறந்த கற்பித்தல் திறனுக்கான விருதையும் இருமொழித் திறன் விருதையும் பெற்ற திரு பாண்டியன், ‘பிஎஸ்21 ஸ்டார் சர்வீஸ் எக்சலன்ஸ் விருது’, சிறந்த கருத்தாக்க விருது (Best Ideater Award), 2012 தேசிய தின விருதுகளில் பாராட்டுப் பதக்கம் (Commendation Medal), கல்வி அமைச்சு தமிழ்மொழி ஆசிரியர்களுக்கிடையில் முதன்முறையாக வழங்கிய ‘மறைமுக நாயகன்’ ஆகிய விருதுகளையும் பெற்ற சிறப்பிற்குரியவர்.

“வாழ்நாள் சாதனையாளர் விருதை ஒரு தனிமனிதனாகச் செயல்பட்டு பெற்றிருக்க முடியாது. பலரின் ஆதரவும், ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் இருந்ததால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது,” என்று நன்றிப்பெருக்குடனும் நெகிழ்ச்சியுடனும் சொன்னார் முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன்.

நல்லாசிரியர் விருது (தொடக்கப் பள்ளி)

தொடக்‌கப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி வீரராஜு தேவிகா, 62.
தொடக்‌கப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி வீரராஜு தேவிகா, 62. - படம்: பே.கார்த்திகேயன்

ஒவ்வொரு குழந்தையாலும் கற்றுக்கொள்ள முடியும், அவர்களுக்‌குக்‌ கற்றுக்கொள்வதில் விருப்பமும் உண்டு என்பதை உறுதியாக நம்புகிறார், தொடக்‌கப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி வீரராஜூ தேவிகா, 62. அதற்கேற்ப மாணவர்களின் சமூக, உடல், உணர்ச்சி, அறிவாற்றல் அம்சங்கள் உட்பட அவர்களின் முழுமையான வளர்ச்சியில் இவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

41 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருக்கும் திருவாட்டி தேவிகா, தற்போது சி.எச்.ஐ.ஜே தோ பாயோ தொடக்கப்பள்ளியில் வழிகாட்டு தமிழ் ஆசிரியராகப் (Lead teacher for Tamil Language) பணிபுரிகிறார். இளைய ஆசிரியர்களுக்கு வழிகாட்டி, கூடிக்‌கற்றல் குறித்த தொடக்க ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான பயிலரங்குகளையும் இவர் நடத்தி வருகிறார்.

இதற்குமுன் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர், தாய்மொழிப் பாடத்துறைத் தலைவர், கற்பித்தலியல் துறைத் தலைவர் (HOD for Pedagogy), பள்ளிப் பணியாளர் மேம்பாட்டாளர் உள்ளிட்ட பல்வேறு தலைமைப் பதவிகளையும் வகித்துள்ளார்.

ஆசிரியராக வேண்டும் என்று அறிவுறுத்தி தம்மைப் படிக்‌க வைத்த தம் தாயாருக்கு நன்றி தெரிவித்த திருவாட்டி தேவிகா, கற்பித்தல் தமக்கு மிகவும் பிடித்தமான பணி என்றார். எடுத்துக்காட்டாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது தாமும் பல புதிய தகவல்களை அறிந்துகொள்வதாக அவர் கூறினார்.

“கணினி, புதுமை, நாகரிகம் என்று தொழில்நுட்பத்தை நாம் கையாண்டாலும் நம்முடைய இந்திய மரபையும் பழக்க வழக்கங்களையும் என்றும் மறக்கக்கூடாது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்,” என்றார் இவர்.

வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் (differentiated learning) முறைகளிலும் இணையவழிக் கல்வியியலிலும் சிறந்து விளங்கும் இவர், ஒவ்வொரு குழந்தையின் தேவைக்‌கு ஏற்ப தமது கற்பித்தல் அணுகுமுறையைத் மாற்றியமைப்பதாகக்‌ கூறினார். மாணவர்கள் தொழில்நுட்பத்தைத் தமிழில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, மின்னிலக்கத் திறன்கள் பலவற்றையும் அறிமுகப்படுத்தி வருகிறார். மேலும், மாணவர்கள் தங்கள் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட சொல்லகராதிகளை உருவாக்க ஊக்குவித்து, வாசிப்பு மேல் அவர்களது ஆர்வத்தை வளர்த்து வருகிறார்.

“இந்த விருது பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. இவ்விருதை என் மாணவர்களுக்கும் பள்ளிக்கும் தாயாருக்கும் சமர்ப்பிக்கிறேன். அதே சமயத்தில், கற்பித்தல் என்பதை நான் ஒரு விருதாகப் பார்க்கவில்லை. அது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒன்று என நான் நம்புகிறேன்,” என்றார் திருவாட்டி தேவிகா.

தொடக்‌கப் பள்ளி பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன், 48.
தொடக்‌கப் பள்ளி பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன், 48. - படம்: பே.கார்த்திகேயன்

காலப்போக்கில் மொழி கற்றலில் ஏற்படும் மாற்றங்களுக்‌கு ஏற்ப தம்மை மாற்றியமைத்துக் கொள்வதோடு, தம் மாணவர்களைக்‌ கற்றலில் ஈடுபடுத்துவதற்கான ஆக்கபூர்வமான வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறார் தொடக்‌கப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன், 48.

தம்முடைய மாணவர்கள் தமிழ்மொழியைச் சுதந்திரமாக ஆராயவும் பயன்படுத்தவும் ஊக்குவிக்‌கும் இவர், கடந்த 18 ஆண்டுகளாக கல்வியாளராகவும் தற்போது செங்காங் தொடக்கப் பள்ளியில் மலாய்/தமிழ் மொழிப் பாடத்துறைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

தம்முடைய தமிழாசிரியர்கள் தமிழ் பாடத்தைக் களிநயமாகக் கற்றுக்கொடுத்ததை இளவயதிலிருந்து கண்டு வியந்ததாகவும் அதனால் எதிர்காலத்தில் தானும் தமிழாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் பிறந்ததாகவும் சொன்னார்.

கவிதை எழுதுதல், நாடகம், பொம்மலாட்டம், விவாதப் போட்டிகள் போன்று பல்வேறு நடவடிக்‌கைகள் உள்ளிட்ட அவரது பாடங்கள், மாணவர்களின் தமிழ்ப் புழக்கத்தையும் சரளத்தையும் மேம்படுத்துகின்றன.

“ஒரு கதையைப் பொம்மலாட்டத்தின்வழி, தொடக்கநிலை ஒன்று மாணவர்களைக்‌ கைப்பாவைகளைப் பயன்படுத்தி நடிக்க வைக்கும் பொழுது அவர்கள் சற்று சிரமப்பட்டாலும் அந்த நடவடிக்கையில் கொண்டுள்ள ஆர்வத்தால் ஓரிரு புதிய தமிழ்ச் சொற்களை‌யேனும் கற்றுக்கொள்கிறார்கள்,” என்றார் திருவாட்டி ஜெயசுதா.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் மாநாடு, உன்னத விழாவில் ‘பொம்மலாட்டம்வழி கதைகள் கற்பித்தல்’ என்ற தலைப்பில் விளக்கக்காட்சி ஒன்றையும் திருவாட்டி ஜெயசுதா படைத்தார். 2024ஆம் ஆண்டுக்கான தொடக்‌கப்பள்ளி தமிழ்மொழிப் பாடத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவுப் பணிக்குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

விளையாட்டுவழி மாணவர்களுக்குக்‌ கற்றுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், செங்காங் பள்ளியில் மாணவர்களின் சொற்களஞ்சியத்தை மேம்படுத்த ‘அடி அடி’ ஸ்னாப் அட்டை விளையாட்டை தமிழில் உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

வகுப்பறைக்கு அப்பாலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் தொடர்பான நடவடிக்‌கைகளை அவர் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோருக்கும் ஏற்பாடு செய்துள்ளார். 2023ல் அவரது முயற்சிகளுக்காக உன்னத சேவை (பிளாட்டினம்) விருது வழங்கி கல்வி அமைச்சு அவரைச் சிறப்பித்தது.

“நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது, இத்தனை காலமாக மாணவர்களின் தமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்த நான் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்தது,” என்றார் திருவாட்டி ஜெயசுதா. தம்முடைய முன்னாள் மாணவர்கள் பலரும் தமிழாசிரியராக பணிபுரிவதாகத் தெரிவித்த அவர், அதில் மிகவும் பெருமைகொள்வதாக கூறினார்.

தொடக்‌கப்பள்ளி பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி சாரதா ராமன், 54.
தொடக்‌கப்பள்ளி பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி சாரதா ராமன், 54. - படம்: பே.கார்த்திகேயன்

ஆசிரியர் மாணவர்களுடன் கொண்டுள்ள வலுவான உறவையும் அவர்களது தன்னம்பிக்கையையும் வளர்க்கும் ஒரு சூழலை உருவாக்கினால் அது அவர்களைத் தமிழ்மொழியை விருப்பத்துடன் கற்க ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறார் தொடக்‌கப்பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற உட்குரோவ் தொடக்கப்பள்ளி தமிழாசிரியர் திருவாட்டி சாரதா ராமன், 54.

25 ஆண்டுகளாகக் கல்வியாளராகப் பணிபுரியும் இவர், தமது மாணவர்களைத் தமிழ்மொழி கற்றலில் ஈடுபடுத்தவும் மரபு, பண்பாடுமீதான அவர்களின் பற்றை வளர்க்கவும், எழுதுவதற்கான ‘பீல்’ (PEEL - புள்ளி, ஆதாரம், விளக்கம், இணைப்பு) உத்தி, கதைசொல்லல், பாத்திரமேற்று நடித்தல் போன்ற புதுமையான கற்பித்தல் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்.

தமிழாசிரியராக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தமது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தமக்கு ஊட்டியதாகச் சொன்ன திருவாட்டி சாரதா, தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கும்போது தமது தமிழ்மொழிப் புழக்கம் மேன்மேலும் வளர்ந்ததைப் போல, தாமும் ஆசிரியராகி அதே பற்றைத் தம்முடைய மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டதாகச் சொன்னார்.

“என்றும் வாழும் மொழியாக தமிழ்மொழி விளங்க தமிழில் விடாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்,” என்கிறார் இவர்.

உட்குரோவ் தொடக்கப் பள்ளி தமிழ்மொழித் துறையின் ‘டாக்‌ மூவ்ஸ்’ கற்பித்தல் அணுகுமுறையை வழிநடத்தி, மாணவர்களுக்குப் பல கற்றல் வழிகளை அறிமுகப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றி வருகிறார். மேலும், தொழில்முறை வளர்ச்சிக்கான பயிலரங்குகளில் பங்கேற்பது, புதிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வழிகாட்டுவது, புலம்பெயர் தமிழ்க் கல்வி மாநாடு 2023ல் (Diaspora Tamil Education Conference 2023) விளக்கக் காட்சி படைத்தது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) கற்பித்தல் திட்டத்திற்கான தொடர்பு அதிகாரியாகவும் செயல்படும் திருவாட்டி சாரதா கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்குக்‌ கல்வி ஆதரவு வழங்கி வருகிறார்.

விருதைச் சற்றும் எதிர்பார்க்காத திருவாட்டி சாரதா, அதனை ஒரு பெரிய அங்கீகாரமாக கருதுகிறார். “என்னுடைய பள்ளியில் பணிபுரிகின்ற மற்ற ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை இவ்விருது காட்டுகிறது,” என்றார் அவர்.

நல்லாசிரியர் விருது (உயர்நிலைப் பள்ளி)

உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திரு சேதுராமன் ரமேஷ் ராஜா, 44.
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திரு சேதுராமன் ரமேஷ் ராஜா, 44. - படம்: பே.கார்த்திகேயன்

மாறிவரும் காலத்திற்கு ஏற்றவாறு தமிழ்மொழி கற்பித்தலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று நம்புகிறார் உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திரு சேதுராமன் ரமேஷ் ராஜா, 44.

பூன் லே உயர்நிலைப்பள்ளியில் தற்போது தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் இவர், இந்தியாவில் ஏழு ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்ததைத் தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக சிங்கப்பூர்க் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்.

தம் மாணவர்களின் தன்னியக்கக் கற்றலை (self-directed learning) வளர்ப்பதற்கும் அவர்களின் வெவ்வேறு கற்றல் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தொழில்நுட்பத்தையும் ‘கேமிஃபிகேஷன்’ என்று அழைக்‌கப்படும் விளையாட்டுவழி கற்றல்முறையையும் வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளையும் இவர் கையாண்டு வருகிறார்.

“மாணவர்களுக்குப் பொதுவாகவே விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதனைக் கருத்தில்கொண்டு கபடி, தாயம், பல்லாங்குழி போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்த நினைத்தேன்,” என்றார் திரு ரமேஷ். இதன்வழி தமிழ் மரபோடு புதிய தமிழ் சொற்களையும் அவர்கள் கற்றுக்கொள்ள முடிகிறது என்று அவர் விளக்கினார்.

கடந்த 2023 டிசம்பரில் மொரீஷியசில் நடந்த 14ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் பாடத் தேர்ச்சி, கல்வியியல் முறைகள் பற்றியும், வடக்கு குழுமப் பட்டறையில் (North Cluster workshop) தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றியும் தமது நுண்ணறிவை திரு ரமேஷ் பகிர்ந்துகொண்டார்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்த் திருவிழாவில் ஏறக்குறைய 400 மாணவர்களுக்கு இந்திய பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த பயிற்சிப் பட்டறைகளைத் திரு ரமேஷ் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும், பல்வேறு போட்டிகளுக்கு ஏற்ற பயிற்சியையும் அவர் தம்முடைய மாணவர்களுக்கு அளித்து ஊக்குவித்து வருகிறார்.

“இவ்விருது கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இது ஓர் ஆசிரியராக என்னுடைய மாணவர்களின் கற்றலைத் தொடர்ந்து மேம்படுத்தவும் பணியில் மேலும் சிறப்பாகச் செயல்படவும் ஊக்கமளிப்பதாக உள்ளது,” என்றார் திரு ரமே‌ஷ்.

உயர்நிலைப் பள்ளி பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஜைனுல் பானு ஷாகுல் ஹமீட், 34.
உயர்நிலைப் பள்ளி பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஜைனுல் பானு ஷாகுல் ஹமீட், 34. - படம்: பே.கார்த்திகேயன்

வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளையும் இணையவழி கல்வியியல் உத்திகளையும் இணைத்து மாணவர் ஈடுபாட்டையும் தன்னியக்க கற்றலையும் வளர்ப்பதற்குப் புதிய வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறார் உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற டெயி உயர்நிலைப்பள்ளி மூத்த ஆசிரியரும் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளருமான திருவாட்டி ஜைனுல் பானு ஷாகுல் ஹமீட், 34.

தமிழ் தொடர்பான நடவடிக்கைகளில் சிறுவயதிலிருந்து அதிக ஆர்வத்துடன் கலந்துகொண்ட திருவாட்டி பானு, தம் தாயாரின் ஊக்குவிப்புடன் கடந்த 11 ஆண்டுகளாகக் கல்வியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கேன்வா, கூகல் வகுப்பறை, கஹூட் போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை வலுவாக்குகிறார்.

வாழ்நாள் கற்றலை உறுதியாக நம்பும் இவர், மேலும் சிறந்த தமிழ் ஆசிரியராக செயல்பட தம்மை தொடர்ந்து மேம்படுத்திக்‌கொண்டு வருகிறார்.

“சமுதாயத்தில் இடம்பெறும் மாற்றங்களை நன்றாகப் புரிந்து, மாணவர்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப கற்பிக்க வேண்டும். இதற்கு, நாமும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்,” என்கிறார் திருவாட்டி பானு.

தொழில்முறை வளர்ச்சியில் திருவாட்டி பானுவின் தலைமைத்துவம் அவரின் பள்ளியைத் தாண்டி, குழுமம், மண்டலம், தேசிய நிலைகளுக்கும் விரிவடைந்துள்ளது.

திருவாட்டி பானு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் மாநாடு, உன்னத விழாவில் தமிழ்மொழி கற்பவர்களின் பேச்சுவழிக்‌ கருத்துப்பரிமாற்ற திறனுக்கான வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளைப் பற்றி விளக்கக்காட்சி படைத்தார்.

“மாணவர்கள் வகுப்புக்கு வரும்போதே அவர்களுடைய நிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் தேவையான அறிவைப் புகட்டுவது முக்கியம்,” என்றார் அவர். தேசியக் கல்விக் கழகத்தால் நடத்தப்பட்ட பலதரப்பட்ட தமிழ்மொழிக் கற்பவர்களுக்‌கான ஆழ்ந்த வாசிப்பு தொடர்பான ஆய்வு ஒன்றிலும் அவர் பங்கேற்றார்.

தமது பள்ளிக்கான தமிழ்மொழிக் குழுமப் பிரதிநிதியாகச் செயல்பட்டுவரும் திருவாட்டி பானு, நல்லாசிரியர் விருதை இவ்வளவு நாள் இந்தத் துறையில் பணியாற்றியதற்கான அங்கீகாரமாக கருதுகிறார். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைக்காமல் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு முயல்வதாகவும் அவர் சொன்னார்.

உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி மலர்விழி பெருமாள், 60.
உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி மலர்விழி பெருமாள், 60. - படம்: பே.கார்த்திகேயன்

பாரம்பரிய கற்பித்தல் முறைகளுடன் நவீன கற்பித்தல் முறைகளையும் இணைத்து தமது மாணவர்களுக்கு தகுந்த கற்றல் சூழலை உருவாக்குகிறார் உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திருவாட்டி மலர்விழி பெருமாள், 60.

கடந்த 36 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஈடுபட்டுவரும் திருவாட்டி மலர்விழி, ஈசூன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். மேல்நிலைப் படிப்பிற்குப்பின் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்தபோது மாணவர்களுடனான தமது உறவு சுமுகமாகவும் மனமகிழ்ச்சி தரும் வகையிலும் அமைந்ததால் ஆசிரியர் தொழிலில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் உருவானதாக அவர் சொன்னார்.

மாணவர்களின் புரிதலை வலுப்படுத்த, இலக்கணப் பாடங்களை விளையாட்டுகளாக மாற்றியமைத்ததோடு சிங்கப்பூரின் பன்முகப் பண்பாடு, மரபை ஆராய்ந்து, பாரம்பரிய தமிழ் நடைமுறைகளையும் அவற்றின் உள்ளூர்ப் பரிணாமம் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வை வளர்க்கவும் பல்வேறு கற்பித்தல் முறைகளை இவர் பயன்படுத்துகிறார்.

“மாணவர்களை வற்புறுத்தாமல், அவர்கள் விரும்பும் முறையில் பாடங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இன்றைய மாணவர்கள் கைப்பேசிகளை அடிக்கடி பயன்படுத்துவதால், நகைப்பழிகை (Meme) அவர்களுக்கு நன்கு அறிமுகமானது. அதன் துணையுடன் பாடம் நடத்தும்போது அவர்களே ஆர்வத்துடன் வகுப்பில் கலந்துகொள்கிறார்கள்,” என்றார் திருவாட்டி மலர்விழி.

பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் அனுபவம் வாய்ந்த திருவாட்டி மலர்விழி, மாணவர்களின் தனிப்பட்ட பலங்களை வளர்ப்பதிலும், சவால்களைச் சமாளிக்க வழிகாட்டுவதிலும் மிகுந்த கவனிப்புடன் செயல்படுவதோடும் கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மாணவர்களுடன் நெருங்கிப் பழகி, ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஆதரவையும் வழங்குகிறார்.

சென்ற ஆண்டு மொரீஷியசில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு ‘நகைப்பழிகைகளின்வழி பேச்சுவழி கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல்’ (Enhancing Spoken Interaction Using Memes as a Tool) என்ற தலைப்பில் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி மலர்விழி.

பல்லாண்டு காலம் தாம் ஆற்றிய ஆசிரியர் பணியின் பயனாக இவ்விருது கிடைத்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் திருவாட்டி மலர்விழி.

சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது

சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது பெற்ற செல்வி பாவனா இராஜாராம், 23.
சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது பெற்ற செல்வி பாவனா இராஜாராம், 23. - படம்: பே.கார்த்திகேயன்

மாணவர்களை வகுப்பறைக்கு அப்பால் ஈடுபடுத்துவதன்மூலமும், தமது பாடங்களில் இருவழித்தொடர்புச் செயல்பாடுகளை இணைப்பதன்மூலமும் அவர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்கி வருகிறார் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது மாதங்களாகத் தமிழ் ஆசிரியராக பணியாற்றிவரும் செல்வி பாவனா இராஜாராம், 23. இவருக்கு இவ்வாண்டின் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமது பள்ளி ஆசிரியர்களால் உந்தப்பட்ட செல்வி பாவனா, அவர்களைப் போலவே தாமும் ஓர் ஆசிரியராகப் பணியாற்றி, மாணவர்களுடன் பழகி, அவர்களது கற்றலுக்குப் பங்களித்து வழிகாட்ட வேண்டும் என விரும்பியதாகச் சொன்னார். மேலும், தமிழ்மொழியில் சிறுவயதிலிருந்தே நல்ல புழக்கம் பெற்றிருந்ததால் தமிழாசிரியராக அவர் முடிவுசெய்தார்.

“ஓர் ஆரம்பகால ஆசிரியராக சில சவால்களை நான் சந்தித்தாலும், நான் பள்ளிக்குள் கால் எடுத்து வைத்த நாள் முதல் என் கையைப் பிடித்து உதவுவதற்கு நிறைய அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் இருப்பதால் என்னால் அவற்றை எதிர்கொள்ள முடிந்தது,” என்று பகிர்ந்துகொண்டார் செல்வி பாவனா.

தமிழ்மொழி மற்றும் கல்வியியலில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர், மாணவர்களின் ஈடுபாட்டை வளர்க்கும்வண்ணம் மொழி கற்றலில் தொழில்நுட்பத்தையும் பண்பாட்டையும் இணைத்து தமது பாடங்களை நடத்தி வருகிறார்.

“ஓர் இளம் ஆசிரியராக, மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி எனது பாடங்களை வடிவமைக்கிறேன்,” என்றார் செல்வி பாவனா.

அத்துடன், மாணவர்களின் கற்பனைத்திறனை வெளிப்படுத்தவும் மொழி, மரபுடன் தம் மாணவர்களின் தொடர்பை வளர்க்கவும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இவர் ஏற்பாடு செய்துள்ளார். வகுப்பறையில் உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றிய விவாதங்கள்மூலம் அவரது மாணவர்களின் ஆழ்ந்த சிந்தனைத் திறனையும் வளர்க்க இவர் உதவுகிறார்.

இவ்விருதை ஓர் உந்துதலாகப் பார்க்கும் செல்வி பாவனா, ஆசிரியர் என்ற நிலையைத் தாண்டி தம்முடைய மாணவர்களுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்து, பாடத்தைக்‌ கற்பிக்‌க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி தற்போது சிந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது பெற்ற திருவாட்டி ஜெம்பு கிருஷ்ணமூர்த்தி நளினி, 44.
சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது பெற்ற திருவாட்டி ஜெம்பு கிருஷ்ணமூர்த்தி நளினி, 44. - படம்: பே.கார்த்திகேயன்

சிங்கப்பூரில் தமிழ் மொழி கற்றலை வலுப்படுத்த தமது பண்பாட்டு அனுபவங்களுடன் ஆக்கபூர்வமான கற்பித்தல் முறைகளை இணைக்‌கிறார் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதுபெற்ற திருவாட்டி ஜெம்பு கிருஷ்ணமூர்த்தி நளினி, 44.

இந்தியாவில் தமிழாசிரியராக பணிபுரிந்த திருவாட்டி நளினி, 2007ல் சிங்கப்பூருக்குக்‌ குடிபெயர்ந்தார். இங்குத் தகவல் தொழில்நுட்பத் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றியபின், தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப சிங்கப்பூரிலும் தமிழாசிரியராக பணிபுரிவது என 2022இல் முடிவெடுத்தார்.

சிங்கப்பூரின் கல்வித் துறையில் இணையும்போது சில தனிப்பட்ட சவால்களையும் பண்பாட்டு வேறுபாடுகளையும் நளினி எதிர்கொண்டபோதும், தமிழ்மொழியில் முதுகலை கல்விப் பட்டயத்தை (தொடக்கப்பள்ளி) (Post Graduate Diploma in Education (Primary) (Tamil)) வெற்றிகரமாக முடித்து கடந்த ஒன்பது மாதங்களாக ஏங்கர் கிரீன் தொடக்கப் பள்ளியில் தமிழாசிரியராக இவர் பணியாற்றி வருகிறார்.

நற்குணம், குடியியல் கல்வி வகுப்புகளில் மாணவர்களின் விருப்பங்களுக்கேற்ப பாடல்களை உருவாக்குவது திருவாட்டி நளினியின் கற்பித்தல் முறைகளில் ஒன்றாகும்.

“எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பாரம்பரிய பாடல்களைப்பற்றி சிங்கப்பூர் மாணவர்கள் குறைவாகவே அறிந்துள்ளதால் அப்பாடல்களை அவர்கள் ஆர்வத்துடன் கற்க வேறு வழிகளைக்‌ கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார் இவர். அவ்வகையில், பாடல்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, மாணவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களுடன் இணைத்து மாற்றியமைத்து இவர் கற்றுத் தருகிறார்.

மேலும், தாம் தயாரித்த கல்வி வளங்களைச் சக கல்வியாளர்களுடன் திருவாட்டி நளினி அடிக்கடி பகிர்ந்துகொண்டும் வருகிறார்.

தேசியக் கல்விக் கழகத்தின் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுத் துறை, பொங்கோல் நூலகத்தின் குழந்தைகளுக்கான மாதாந்தர நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பங்களித்துள்ள திருவாட்டி நளினி, தமது கதை சொல்லும் திறனைப் பயன்படுத்தி பாடங்களில் படைப்பாற்றலை இணைத்துக் கற்பிக்கிறார்.

இவ்விருது தமது பணியில் மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்கத்தையும் உந்துதலையும் தமக்கு அளித்துள்ளதாகத் திருவாட்டி நளினி கூறினார்.

குறிப்புச் சொற்கள்