இருபது ஆண்டுகளுக்கு மேலாக, சிங்கப்பூர் மாணவர்களுக்குக் கல்வி நிதி ஆதரவு வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழர் பேரவை நிதி உதவி வழங்கி வருகிறது.
நிதி நெருக்கடிகள் ஒருபோதும் கற்றலுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, 2027ஆம் ஆண்டிற்கான சமூக கல்வி நிதி உதவிக்கான விண்ணப்பங்களைப் பேரவை அதிகாரபூர்வமாக வரவேற்கிறது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைப்பதே இந்த நிதி உதவியின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் மாணவர்கள் நிதி நெருக்கடிகளைக் காரணம் காட்டி தங்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் ஊக்கத்துடன் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் $300 முதல் $500 வரை நிதி உதவி வழங்கப்படும்.
அந்தத் தொகையானது, பள்ளிக் கட்டணம், பாடப்புத்தகங்கள், இணைப்பாட நடவடிக்கைகள் போன்ற கல்விச் செலவுகளைச் சமாளிக்க பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவும் வகையில் வழங்கப்படுகிறது.
வரும் ஜனவரி மாதத் தொடக்கத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.
2027ஆம் ஆண்டுக்கான சமூக கல்வி நிதி உதவி திட்டம் தொடக்க நிலை மாணவர்களுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 2027ஆம் கல்வியாண்டில் சிங்கப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது நிரந்தர வாசியாகவோ இருக்க வேண்டும்.
குடும்பத்தின் தனிநபர் மாத வருமானம் $1,600க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை பெற்றோர்கள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கான காலக்கெடு முடிவதற்குள் இணையம்வழி விண்ணப்பிக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பங்களை நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ கியூஆர் குறியீட்டை வருடலாம் அல்லது BIT.LY/TRCBURSARY2027 என்ற இணைப்பு மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். பரிசீலனைக்குப் பிறகு, கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் தமிழர் பேரவை விண்ணப்பதாரர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும்.
விண்ணப்ப செயல்முறை தொடர்பான எந்தவொரு உதவிக்கும், info@trc.org.sg என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையுடன் அண்மையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பலதுறை தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று தமிழர் பேரவையின் தலைவர் வெ.பாண்டியன் கூறினார்.
