சிங்கப்பூரில் இன்று எங்குப் பார்த்தாலும் கியூஆர் குறியீடுகளைக் காண முடிகிறது.
உணவகங்கள், நிகழ்ச்சிகள், விளம்பரச் சுவரொட்டிகள், பணம் செலுத்தும் இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் அவை இடம்பெற்றுள்ளன.
நமது திறன்பேசியைக் கொண்டு ஒரு கியூஆர் குறியீட்டை மின்வருடல் (ஸ்கேன்) செய்தால், சில நொடிகளிலேயே உணவுப் பட்டியல், பதிவுப் படிவம், பணம் செலுத்தும் பக்கம் அல்லது இணையத்தளத்திற்குச் சென்றுவிடலாம்.
இந்த வசதியால் கியூஆர் குறியீடுகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன.
ஆனால், நாம் அடிக்கடி மறந்துவிடும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.
ஒரு கியூஆர் குறியீட்டைப் பார்த்தவுடன், அது நம்மை எந்த இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை அறிந்துகொள்ள முடியாது.
கியூஆர் குறியீடு என்பது ஒரு குறுக்குவழி
கியூஆர் குறியீட்டை மின்னிலக்கத் தகவல்களுக்கான குறுக்குவழியாகக் கருதலாம்.
அது நம்மை ஓர் உண்மையான இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லலாம். அதேபோல், போலியான அல்லது ஆபத்தான இணையத்தளத்திற்கும் அது அழைத்துச் செல்லக்கூடும்.
எடுத்துக்காட்டாக, மோசடிக்காரர் ஒருவர் உண்மையான கியூஆர் குறியீட்டின்மீது போலியான குறியீட்டை ஒட்டிவைக்கலாம். அல்லது, போலியான பணம் செலுத்தும் பக்கம் அல்லது உள்நுழைவுப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் கியூஆர் குறியீடு கொண்ட படத்தை இணையத்தில் பரப்பலாம்.
இருப்பினும், பிரச்சினை கியூஆர் தொழில்நுட்பத்தில் இல்லை. அந்தக் குறியீடு உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதிலும் அதை ஸ்கேன் செய்த பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதிலும்தான் ஆபத்து உள்ளது.
தொடர்வதற்குமுன் சரிபாருங்கள்
ஒரு கியூஆர் குறியீட்டை மின்வருடல் செய்தவுடன், உங்கள் தொலைபேசித் திரையில் தோன்றும் இணையப்பக்கத்தில் உடனடியாக அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளாதீர்கள்.
முதலில், உங்கள் தொலைபேசியில் காட்டப்படும் இணைய முகவரியைக் கவனமாகப் பாருங்கள்.
அந்த இணையத்தளத்தின் முகவரி சரியாக உள்ளதா?
அதில் வழக்கத்திற்கு மாறான எழுத்துகள், கூடுதல் சொற்கள் அல்லது சந்தேகத்திற்குரிய குறியீடுகள் இடம்பெற்றுள்ளனவா?
ஒரு வங்கி, அரசாங்க அமைப்பு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று கூறப்படும் கியூஆர் குறியீடு, எதிர்பாராத இணையத்தளத்திற்கு உங்களை அழைத்துச் சென்றால், அடுத்த கட்டத்திற்குச் செல்லாதீர்கள்.
குறிப்பாக, அந்த இணையத்தளம் உங்கள் கடவுச்சொல், வங்கி உள்நுழைவுத் தகவல்கள், வங்கி அட்டை விவரங்கள் அல்லது சிங்பாஸ் தகவல்களைக் கேட்டால் மிகவும் கவனமாக இருங்கள்.
சந்தேகம் ஏற்பட்டால், அந்த இணையப்பக்கத்தை மூடிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரபூர்வச் செயலி அல்லது இணையத்தளத்தை நீங்களே நேரடியாகத் திறந்து பயன்படுத்துங்கள்.
பொது இடங்களில் உள்ள கியூஆர் குறியீடுகளிலும் கவனம் தேவை
கியூஆர் குறியீடு ஒட்டப்பட்டிருக்கும் இடத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
அச்சிடப்பட்ட கியூஆர் குறியீடு ஒன்றின்மீது மற்றொரு குறியீடு ஒட்டப்பட்டிருப்பதுபோலத் தோன்றினாலோ அது மாற்றப்பட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டாலோ பொருத்தமற்ற இடத்தில் அது காணப்பட்டாலோ அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதைத் தவிருங்கள்.
அந்த இடத்திற்குப் பொறுப்பான நிறுவனத்திடமும் இதுகுறித்துத் தெரிவியுங்கள்.
சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திச் செயலிகள், மின்னஞ்சல்கள் வழியாகப் பெறப்படும் கியூஆர் குறியீடுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.
ஒரு விளம்பரச் சுவரொட்டி அழகாகவும் தொழில்முறையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக மட்டும், அதில் இடம்பெற்றுள்ள கியூஆர் குறியீட்டை நம்பிவிடக் கூடாது.
வசதிக்காக விழிப்புணர்வை விட்டுக்கொடுக்காதீர்கள்
இணைய முகவரிகளை நாமே தட்டச்சு செய்ய வேண்டிய அவசியத்தைக் குறைப்பதால், கியூஆர் குறியீடுகள் நமது நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.
ஆனால், அந்த வசதியின் காரணமாகவே சில நேரங்களில் இணைய இணைப்புகள் எங்கு அழைத்துச் செல்கின்றன என்பதைச் சரிபார்க்காமல் அவற்றைப் பயன்படுத்திவிடுகிறோம்.
அடுத்த முறை கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது, தொடர்ந்து செயல்படுவதற்கு முன்பு சில நொடிகள் ஒதுக்கிச் சரிபாருங்கள்.
இந்த வார மின்னிலக்கப் பாதுகாப்புக் குறிப்பு
கியூஆர் குறியீட்டை மின்வருடல் செய்த பிறகு, தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதற்கோ பணம் செலுத்துவதற்கோ முன்பு, அது அழைத்துச் செல்லும் இணையத்தளத்தைச் சரிபாருங்கள்.
ஸ்கேன் செய்யுங்கள். கவனியுங்கள். சரிபாருங்கள். அதன் பிறகு தொடருங்கள்.
கட்டுரையாளர்: எஸ். வெங்கடேஷ்வர்லு நாயுடு, உதவி இயக்குநர், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புச் செயலாக்கத் துறை, தேசியக் கல்விக் கழகம்.
