சிங்கப்பூர் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பை ஒட்டுமொத்த உலகின் பார்வைக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று ஆர்வம் கொண்டார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி அருண் மகிழ்நன். அதன் பயனாக இன்னும் சில நாள்களில், அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி சனிக்கிழமை வெளியீடு காணவிருக்கிறது சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்.
2022 ஏப்ரல் மாதத்திலிருந்து அயராது நடைபெற்றுவரும் இம்முயற்சியில், பண்பாட்டு மையத்துடன் இணைந்து கலைக்களஞ்சிய வடிவமைப்பின் நாடித்துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது தேசிய நூலக வாரியம்.
திட்டத்தை இவர்கள் முன்வைக்க, அத்திட்டங்களுக்கு உயிர்கொடுக்க முன்வந்தனர் திரளான தன்னார்வலர்கள்.
உள்ளடக்கதிற்குள் ஒளிந்திருக்கும் அர்ப்பணிப்பு
தேசம் அதன் 60வது பிறந்தநாளை கொண்டாட அனைத்தும் கைகூடிவரும் வேளையில், அதன் சாதனையில் மற்றுமொரு நட்சத்திரமாக மின்னிலக்கத் தளத்தில் மிளிரவுள்ள தமிழர் கலைக்களஞ்சியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு பின்னும் சத்தம் இல்லாமல் சேவையாற்றிய நாயகர்களின் நற்பணி மறைந்திருக்கிறது.
அவ்வகையில், இத்தொகுப்பிற்காகப் பல்வேறு தலைப்புகளை முன்மொழிந்தார் திரு நித்திஷ் செந்தூர், 33.
தமிழ் சார்ந்த வரலாறு, தமிழ்மொழியின்மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், புதைந்து கிடக்கும் அரிய தகவல்களை வெளிக்கொணர இலக்கு கொண்டார்.
“அஞ்சல்தலையில் தமிழ்ப் பண்பாடு, தமிழ் மரபைப் பேசும் சிற்பங்கள், தமிழ்ப் பெயர் தாங்கிய சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை முன்மொழிந்தேன். கலைக்களஞ்சியத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை அளித்திடுவது என் நோக்கம்,” என்றார் முன்னாள் செய்தியாளரான திரு நித்திஷ்.
விரிவான தேடல்மூலம், வெவ்வேறு தலைப்புகள் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து, சமூக முன்னோடிகளின் பங்களிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர இவர் உதவினார்.
தலைப்புகளும் அவை சார்ந்த தகவல்குறிப்புகளும் கிடைத்துவிட்டாலும், இணையவெளியில் உலா வரும்போது அவை பிழையின்றியும் குறையின்றியும் இருக்க வேண்டும்.
அவ்வகையில், அச்சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் முனைவர் கல்பனா பாலா, 59.
“கிடைத்த மொழிபெயர்ப்புகளை அப்படியே தமிழுக்கு மாற்றினால் பெரும்பாலான நேரங்களில் அவற்றின் பொருளும்கூட மாறிவிடலாம். பொருள் பொதிந்த சொற்றொடர்களை அமைத்தும், கிடைத்த தகவல்களின் கருத்து மாறாமல், எதிர்காலத் தலைமுறையினருக்கு அவற்றைச் செவ்வனே கொண்டுசேர்க்கும் குறிக்கோளுடனும் செயல்பட்டேன்,” என்று தெரிவித்தார் முனைவர் கல்பனா.
சரித்திரத்தை மின்தளத்தில் செதுக்கிய தொழில்நுட்பம்
சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியமே தேசிய நூலக வாரியம் நிறுவவுள்ள முதல் இருமொழி கலைக்களஞ்சியம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், இந்த மின்னூலுக்கான உருவாக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் முக்கிய இடம்பிடித்தன.
எழுத்தாளராகவும் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகவும் திறன்பெற்ற திரு சண்முக சுந்தரம், 45, இந்தக் கலைக்களஞ்சியத்திற்கான முதற்கட்ட வரைவுகளை எழுதியவர். “இப்படியொரு கலைக்களஞ்சியம் வரவுள்ளது என்ற செய்தியை அறிந்ததுமே அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. ஏற்கெனவே கோவில்கள்மீது நாட்டம் இருந்ததால், சிங்கப்பூர் கோவில்கள் குறித்து எழுத வாய்ப்பு கிட்டியது,” என்று விவரித்தார் திரு சுந்தரம்.
இப்படி ஏறத்தாழ 25 ஆலயங்களுக்கான வரைவுகளை வரைந்த திரு சுந்தரம், அதற்கிடையே ஏற்கெனவே ஒப்புதல் பெற்ற சில குறிப்புகளில் சொற்கள் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளதையும் கண்டறிந்தார்.
எனவே, அவற்றைத் தானாகக் கண்டறிந்து சரிசெய்யும் ‘பைத்தான்’ நிரலாக்கத்தையும் இவரே உருவாக்கினார்.
கதைசொல்லும் புகைப்படங்கள்
கலைக்களஞ்சியத்திற்கான தலைப்புகளும் தகவல்களும் ஒருபுறம் வந்துசேர்ந்துகொண்டிருக்க, அதில் இடம்பெற்ற கதைகளுக்கு மேலும் வண்ணம் சேர்த்து மெருகூட்டினார் தொண்டூழியர் திமத்தி டேவிட், 36.
முன்னாள் புகைப்படச் செய்தியாளரான இவர், இந்தக் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக்குப் புகைப்படம் வாயிலாக மெய்நிகர் உலகில் உயிர்கொடுத்துள்ளார்.
“பெரும்பாலார் ‘வாட்ஸ்அப்’ செயலி வழியாக படங்களைப் பகிர்ந்ததால், மின்னிலக்கத் தளத்தில் தரத்துடன் அவற்றை இடம்பெறச் செய்வதற்கு நேரம் தேவைப்பட்டது. ஒரு சில தலைப்புகளுக்குப் படங்கள் ஏதும் இல்லாததால், தேசிய ஆவணக் காப்பகம், தகவல் தளத்தில் பல வாரங்கள் செலவிட்டுள்ளேன்,” என்று நினைவுகூர்ந்தார் திரு திமத்தி.
பண்பாடு பேணும் சொற்கள்
கலைக்களஞ்சியத்திற்கான உள்ளடக்கங்களைத் தொகுக்கும்போது அவற்றின் இதயத்துடிப்பாகத் திகழ்பவை அதில் இடம்பிடிக்கும் படலங்கள் (Chapters).
அனைத்து உள்ளடக்கங்களுக்கான தகவல்களும் தமிழ்மொழியிலேயே கிடைத்துவிடவில்லை. அவ்வகையில், கிடைத்த தகவல்களை மொழிபெயர்த்து, பண்பாட்டை ஆவணப்படுத்தக் கைகொடுத்தார் தொண்டூழியர் சுப்பிரமணியம் நடராஜன், 81.
இயன்றவரை அயற்சொற்களின் பயன்பாட்டைத் தவிர்த்து முடிந்தவரை கலைக்களஞ்சியத்திற்கான பங்களிப்பை அளித்தது குறித்து கருத்துரைத்தார் திரு சுப்பிரமணியம்.
“ஆங்கிலச் சொற்களுக்கு நாங்களே புதிதாகச் சொற்களை அமைக்க வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, ‘Palliative Care’ எனும் சொல். இதை அந்திமகால அவதித் தணிப்பு எனக்கூறலாமென முடிவு செய்தோம். மொழிபெயர்க்கும்போது அது இயல்பான தமிழ் நடையில், எளிதில் புரியும்படி இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதிருந்தது,” என்றார் அவர்.
கலை, அரசியல், சமூகம், பொருளியல், தலைமைத்துவம் எனப் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றைத் தாங்கிவரும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்திற்கான வடிவமைப்பில் தொண்டூழியம் வழியாக உதவியது பெரும்பேறு என்கின்றனர் இந்தத் தொண்டூழிய நல்லுள்ளங்கள்.