‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ எனப் பலரும் வாழ்த்துவதுண்டு.
அத்தகைய பதினாறு செல்வங்களுள் தலையாயது மக்கட்செல்வம்.
அதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும் தம் திருக்குறளில் ‘மக்கட்பேறு’ எனத் தனி அதிகாரம் படைத்து, பிள்ளைகளே பெற்றோரின் செல்வம் என்பதை வலியுறுத்தும்படியாக ‘தம்பொருள் என்பதம் மக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே’ என்று தமது புறநானூற்றுச் செய்யுளிலும் பாண்டியன் அறிவுடைநம்பி மக்கட்செல்வத்தின் பெருமையை எடுத்தியம்பியுள்ளார்.
ஒரு நாடு இயற்கை வளமிக்க நாடாகத் திகழ்ந்தாலும் அவற்றையெல்லாம்விட முதன்மையானது மக்கள்வளமே.
ஒரு நாட்டை மாற்றமுறச் செய்வதும் ஏற்றமுறச் செய்வதும் அந்நாட்டு மக்கள் கைகளில்தான் உள்ளது. அதுபோல, மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.
அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து, உலக அரங்கில் வெற்றிகரமான நாடாகச் சிங்கப்பூர் விளங்குவதற்குக் காரணம் சிங்கப்பூர்வாசிகளும் அரசாங்கமும்தான் என்பது எவ்வொருவரும் மறுக்கவியலா உண்மை.
இப்படியிருக்க, இப்போது சிங்கப்பூரின் கருவள விகிதம், அதாவது குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த ஈராண்டுகளாக ஒன்றுக்கும் குறைவாக, 0.97 என்ற விகிதத்தில் நீடிப்பது கவலை தருவதாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மாறாக, மக்கள்தொகை மூப்படைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்படி ஒரே நேரத்தில், ஒன்றுக்கொன்று முரணான இரு சவால்களைச் சிங்கப்பூர் எதிர்கொண்டு வருகிறது.
மக்கள்தொகை மூப்படையும்போது, அதனை ஈடுகட்டும் வகையில் குழந்தைப் பிறப்பு இருந்தால்தான் மக்கட்செல்வத்திற்கும் மனிதவளத்திற்கும் குறைவிருக்காது.
சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகில் பல நாடுகளும் கருவள விகிதச் சரிவை எதிர்கொண்டுவருவதால், பிறப்பு விகிதத்தை உயர்த்த அவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஒரு குழந்தைக்குமேல் பெறுவதற்குத் தடை விதித்திருந்த, உலகின் இரண்டாவது பெரும்பொருளியலாகத் திகழும் சீனாவும் அத்தடையைத் தளர்த்தி, இப்போது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவித்து வருவது கவனிக்கத்தக்கது.
இத்தகைய சூழலில், மனிதவளத்தையே மூலதனமாகக் கொண்டுள்ள சிங்கப்பூர் அதுகுறித்து மிகுந்த அக்கறைகொண்டிருப்பதில் வியப்பில்லை.
2014-2018 காலகட்டத்தில் சிங்கப்பூர்வாசிகளிடையே சராசரியாக ஆண்டுக்கு 24,000 திருமணங்கள் நடைபெற்றன. அடுத்த ஐந்தாண்டுகளில், அதாவது 2019-2023 காலகட்டத்தில் அந்தச் சராசரி 22,800ஆகக் குறைந்தது.
அதே நேரத்தில், மணமுடிக்கும் வயது அதிகரித்துள்ளது.
மேலும், 2014-2018 காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 33,000 குழந்தைகள் பிறந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 31,100ஆகச் சரிவுகண்டது.
முந்திய 2023ஆம் ஆண்டில் 30,500 குழந்தைகள் பிறந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 30,800 எனச் சற்றே உயர்ந்துள்ளது. ஆயினும், நாட்டின் கருவள விகிதத்தில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இப்படியே போனால், நமது மூத்த குடிமக்களைப் பேண போதிய எண்ணிக்கையில் இளையர்கள் இருக்க மாட்டார்கள் என்ற அரசாங்கத்தின் கவலையை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் இந்திராணி ராஜா.
அது பொருளியல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அது ஒருபுறம் இருந்தாலும், விலைவாசி உயர்ந்துவரும் நிலையில் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் அவர்களை வளர்க்கச் சிரமப்படலாம் எனச் சிங்கப்பூர்வாசிகளில் பலரும் கருதுகின்றனர்.
தங்களது எதிர்காலம், ஓய்வுக்காலம், சேமிப்பு குறித்துக் கவலைகொள்ளும் இளம் இணையர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான எதிர்காலம் நிதி, சமூகம், சுற்றுச்சூழல் எனப் பலவழிகளிலும் இன்னும் சவால்மிக்கதாக இருக்கலாம் எனக் கருதி, குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.
தங்களால் நல்ல பெற்றோராக இருக்க முடியுமா என்ற அச்சமும் திருமணத்தையும் மகப்பேற்றையும் இளம் இணையர்கள் தள்ளிப்போடுவதற்கு ஒரு காரணம்.
இந்நிலையில், அவர்களின் கவலைகளை உணர்ந்து, அவற்றைப் போக்க உதவி, கைகொடுக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு ஆதரவுத் திட்டங்களை அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இரு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொள்வோருக்கும் பெரிய குடும்பங்களுக்கும் இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின்மூலம் பல்வேறு வழிகளில் ஆதரவு கிடைக்கவுள்ளது.
பிள்ளை மேம்பாட்டுக் கணக்கு தொடக்க மானியம், பெரிய குடும்பங்களுக்கு மெடிசேவ் மானியம், லைஃப்எஸ்ஜி சிறப்புத்தொகை, குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் கட்டணக் குறைப்பு போன்றவை அவற்றுள் சில.
அத்துடன், இவ்வாண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு பத்துப் பொருள்கள் அடங்கிய எஸ்ஜி60 அன்பளிப்புத் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது.
விலைவாசியைச் சமாளிக்கவும் பல்வேறு ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்படி எத்தனை ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்படினும், மணவாழ்க்கை, மகப்பேறு குறித்த இளந்தலைமுறையினரின் மனப்போக்கிலும் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம்.
குழந்தைச் செல்வமே மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி, மனநிறைவு அளித்து, முழுமைபெறச் செய்யும். மக்கட்பேறே கிடைத்தற்கரிய பெரும்பேறு.
அரசாங்கம் அதற்குத் தன்னாலான உதவிகள் அனைத்தையும் வழங்கத் தயாராகவுள்ள நிலையில், சிங்கப்பூர்வாசிகள் அதனைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூருக்கு மனிதவளமே புனிதவளம் என்பதால் மக்கட்செல்வத்தோடு நிறைவாழ்வு வாழ்வோம்.