சமயச் சீண்டல்கள் சிங்கப்பூருக்கு அறவே ஆகாதவை.
உள்துறை அமைச்சர் கா. சண்முகம் எச்சரித்துள்ளதைப்போல அவை நெருப்புடன் விளையாடும் செயல்.
சிராங்கூன் நார்த் வட்டாரத்தில் உள்ள அல் இஸ்திகாமா பள்ளிவாசலுக்கும் இன்னும் சில பள்ளிவாசல்களுக்கும் அனுப்பப்பட்ட சந்தேகத்துக்குரிய பொட்டலங்களில் இறைச்சி இருந்தது என்பதைக் கேட்டதுமே இந்த நாட்டின் மூத்த தலைமுறையினருக்கு வயிற்றில் அமிலம் சுரந்திருக்கும். சிறு தீக்குச்சியின் உரசல் பெருந்தீயை உண்டாக்கியதை அனுபவித்தவர்கள் அவர்கள்.
1950ஆம் ஆண்டில், மலாய்-முஸ்லிம் மாதுவால் தத்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட டச்சுப் பெண் மரியா ஹெர்டோகை, பெற்ற தாயிடமா அல்லது வளர்ப்புத் தாயிடமா ஒப்படைப்பது என்ற தீர்ப்பு வழங்கப்படும்வரை அவரைக் கத்தோலிக்க கான்வென்ட்டில் காவலில் வைக்கப் பிரிட்டிஷ் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பலநாள்கள் நீடித்த வன்முறை அழியா வடுவாக நாட்டின் வரலாற்றில் பதிந்துள்ளது.
1964ஆம் ஆண்டில், முஹம்மது நபியின் பிறந்தநாள் கொண்டாட்ட ஊர்வலம் சீன குண்டர் கும்பலால் தாக்கப்பட்டது. இதனால் பல நாள்களுக்குக் கலவரம், தீவைப்பு, வன்முறை எனப் பதற்றநிலை நீடித்தது.
1969 மே 13 மலேசிய தேர்தலுக்குப் பின் மலேசியாவில் தொடங்கி, சிங்கப்பூருக்குப் பரவிய இனக் கலவரத்தையும் மறக்க முடியாது.
அந்த மகிழ்ச்சியற்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, கடுமையாக உழைக்கச் சிங்கப்பூரர்களை அவை ஊக்குவித்துள்ளன.
அத்தகைய சூழ்நிலைகளைச் சிங்கப்பூர் எதிர்கொள்ளவேகூடாது என்பதில் நாடும் மக்களும் மிக உறுதியோடு உள்ளனர். முக்காடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நாட்டு மக்கள் புரிந்துணர்வோடும் இணக்கத்தோடும் பொறுப்புடனும் நடந்துகொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இருந்தபோதும், அவ்வப்போது, தீவிரவாதப் போக்கு, பள்ளிவாசலுக்குப் பொட்டலம் அனுப்புவது, தேவாலயத்தில் சமயகுரு தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
சமயம் தொடர்பான சம்பவங்களைக் கையாள்வதில் மற்ற நாடுகளைவிடச் சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ளது. என்றபோதிலும், சிங்கப்பூரின் சமூக கட்டமைப்பும் சமய நல்லிணக்கமும் இன்னமும் பலவீனமாகவே உள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளதைக் கவனத்தில் கொள்வது முக்கியம்.
சமயம் என்பது மக்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் அமைதியை வளர்க்கலாம்; மோதலுக்கும் போருக்கும் அது ஒரு காரணமாகவும் இருக்கலாம். சமயம், அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தற்போதைய பல உலகச் சூழ்நிலைகள் வேதனை தருபவை. ஆனால், அவை நம் நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதித்துவிடக்கூடாது.
சிங்கப்பூர் சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், உலகின் பல சமயங்களையும் பின்பற்றும் நாடுகளில் ஒன்று. சிங்கப்பூரில் பத்து முக்கிய சமயங்களாக இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், தாவோயிஸம், சீக்கியம், யூத சமயம், சோராஸ்ட்ரியம், ஜைனம், பாஹாய் ஆகியவையும் கருதப்படுகின்றன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினரால் இச்சமயங்கள் பின்பற்றப்படுகின்றன.
சிறிய நிலப்பரப்பைக்கொண்ட சிங்கப்பூரில், பல்வேறு சமய வழிபாட்டுத் தலங்கள் ஒரே தெருவில், சில இடங்களில் அருகருகே அமைந்திருக்கின்றன. கூடுதல் புரிந்துணர்வுடனும் இணக்கத்துடனும் அவை செயல்படுவது இந்நாட்டின் தனிச்சிறப்பு.
இந்த நல்லிணக்கைத்தை அரும்பாடுபட்டு வளர்த்துள்ளோம் என்பதை எப்போதும் நாம் நினைவில் நிறுத்தவேண்டும்.
சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் தற்செயலாக ஏற்பட்டதல்ல. கொள்கைகள், சட்டங்கள், சமூக அமைப்புகள் மூலமாக மெல்ல மெல்ல, வலுவாகக் கட்டியெழுப்பப்பட்டது. சமய நல்லிணக்கத்திற்கு அரசாங்கமும் பள்ளிகளும் பணிவிடங்களும் மதிப்பளிக்கின்றன.
சிங்கப்பூர் சமயச்சார்பற்ற நாடு. அரசு சமயத்தை ஊக்குவிப்பதில்லை. அதேநேரத்தில், சமய நம்பிக்கைகளுக்கு விரோதமான நாடுமல்ல. இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் சமயச் சுதந்திரத்திற்கும், சமயத்தைப் பின்பற்றுவதற்கான உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
சமய நல்லிணக்கச் சட்டம், சமய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் விஷயங்களில் கடுமையாக உள்ளது. சமய நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்துல் ஏற்படுத்தும் போதகர்களுக்கு எதிராகக் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் அரசாங்கத்திற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இங்கு காணப்படும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும், வெறுப்புணர்வையும் தாக்குதல் பேச்சுகளையும் அறவே சகித்துக்கொள்ளாத இந்நாட்டின் போக்கே காரணம்.
பள்ளிவாசலில் நடந்த அண்மைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காரணமும் நோக்கவும் எதுவாக இருந்தாலும் அறவே ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனாலும், சட்டரீதியான விசாரணை, நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படுவதற்கு முன் ஊகச்செய்திகளைப் பரப்புவது வெறுப்புணர்வைத் தூண்டுவதாக அமையும். சமூக ஊடகங்களின்வழி தங்களுக்குத் தோன்றியதை தெரிந்தோருக்கெல்லாம் அனுப்பிவைத்து அத்தீயினை விசிறிவிடுவது தகாது.
இனம், சமயம் தொடர்பான பிரச்சினைகளை, கண்மூடித்தனமான அணுகுமுறைகள்மூலம் சமாளிக்க முடியாது. அமைச்சர் சண்முகம் கூறியதைப் போல, வழிபாட்டு இடங்களைக் கோட்டைகள்போல மாற்ற இயலாது. வழிபாட்டிற்கு வருவோரை பல அடுக்குப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது உகந்ததல்ல.
கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூரின் மிக அருமையான சாதனைகளில் ஒன்று சமய, இன நல்லிணக்கம். பல நாட்டுத் தலைவர்களும் மக்களும் பார்த்து ஆச்சரியப்படும் இச்சாதனையைப் பாதுகாக்க ஒவ்வொரு குடிமக்களும் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.