தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் நெடுநாளைய செய்தி ஊடகங்களின் எதிர்காலப் பயணம்

3 mins read
73431682-517c-4315-b12c-f12e66afb291
தமிழ் முரசு 90வது ஆண்டு விழாவில் அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: தமிழ் முரசு

கடந்த வாரம் எஸ்பிஎச் மீடியாவிற்கு முக்கியமான வாரமாக அமைந்தது. தமிழ் முரசின் தொண்ணூறாவது ஆண்டையும் ஸ்ரெய்ட்ஸ் டைம்சின் நூற்றெண்பதாவது ஆண்டையும் கொண்டாடியது. முறையே அமைச்சர் ஜோசஃபின் டியோவும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இவ்விரு நிகழ்ச்சிகளில் உரையாற்றினர். அதில் அவர்கள் செய்தி ஊடகங்களின் எதிர்காலத்தையும் சிங்கப்பூருக்கு அவையாற்றும் பணியையும் வலியுறுத்தினர்.

தமிழ் முரசின் கொண்டாட்ட விருந்தில் பேசிய அமைச்சர் ஜோசஃபின் டியோ,  தமிழ் முரசிற்கு அரசாங்கத்தின் ஆதரவை உறுதிப்படுத்தியதோடு, வேகமாய் மாறிவரும் ஊடகத்துறையில் தமிழ் முரசும் ஈடுகொடுத்து மாறி வருவதை மெச்சினார்.

அனைவரும், முக்கியமாக இளையர்கள், உள்நாட்டுச் செய்திகளையும் உலக நடப்புகளையும் அறிந்துகொள்ளும் வழிகள் வெகுவாய் மாறியிருப்பதை மனதில்கொண்டு அதற்கேற்ப தமிழ் முரசு செயல்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணமுடிவதைச் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் வோங், செய்தி ஊடகங்கள் பெருகிவிட்ட இத்தருணத்தில் நம்பகமிக்க செய்தித் தளமாய் செய்தித்தாள்கள் எப்படி இயங்கவேண்டும் என்பதை விளக்கினார்.

முதலாவதாக, சிங்கப்பூரர்கள் நம்பும் செய்தி ஊடகமாகத் திகழ்வது, அந்தப் பலத்தை உறுதிப்படுத்திக்கொள்வது. செய்தி படிப்பவர்களின் நோக்கங்களும் பழக்கங்களும் மாறுபட்டு வந்தாலும் அவர்களின் கவனம் சிதறிக் கிடந்தாலும் நடுநிலைமையாக, அனைத்துக் கோணங்களையும் ஆராய்ந்து செய்தி வழங்கும் செய்தி ஊடகமாகத் தொடர்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிய அவர்,  உண்மைச் செய்திகளை அறியச் சிங்கப்பூர் மக்கள் உள்நாட்டுச் செய்தி ஊடகங்களை நாட வேண்டும் என்றார்.

இரண்டாவதாக, தரமான தகவல்களைத் தருவதை முக்கியக் குறிக்கோளாய் கொள்வது. வடிவங்கள் மாறினாலும், செய்தியினைத் தரும் வழிமுறைகள் வேறுபட்டாலும், எழுத்திலும், சிந்தனையிலும் தரம் கட்டிக்காக்கப்பட வேண்டும். வாசகர் எண்ணிக்கையைக் கூட்ட, மொழித் தரத்தையோ, கருத்துகளின் தரத்தையோ குறைப்பதுகூடாது. தரத்தைத் தக்கவைக்க திறன்மிக்கவர்கள் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும். அவர்கள் ஊக்கம் மிக்கவர்களாக, சவால்களை எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

மூன்றாவதாக, சிங்கப்பூரின் கண்ணோட்டத்தில் செய்திகளை உலகிற்குக் கூறுவது. சிங்கப்பூர் மக்கள் உலகில் பல்வேறு செய்தி ஊடகங்களின் வழி தங்களது அன்றாடத் தகவல்களைத் தெரிந்துகொண்டாலும், உலகில் சிங்கப்பூரின் இடத்தை, பங்கை, மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிவர அறிந்துகொள்வது உள்ளூர்ச் செய்தி ஊடகங்களின் பொறுப்பு எனக் கூறினார் திரு வோங்.

இன்று அனைவரும் செய்தியாளர்களாகி விட்டார்கள். அவரவர் தனிப்பட்ட சமூக ஊடகங்களைத் தகவல் தளமாக உருவகப்படுத்தி வருகின்றனர். இணையச் ஊடகங்களில் அனுதினமும் உலாவரும் நாம் காண்பதையோ, கேட்பதையோ, சிந்தித்து உள்வாங்குவதில் நேரம் செலவிடுவதில்லை. ஆதலினால், பொய் மெய்யனும் போர்வை போர்த்தி வருகிறது. நம்மை அறியாமலேயே நாம் அதனை நம்பி மேலும் அச்செய்திகளைப் பரப்பி வருகிறோம்.

இப்பிரச்சனையைக் கையாளும் முறையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறிவிட்டார்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள் 355)

அதாவது, வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துவிடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின் பொருள்.

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ எனும் பழமொழி நாமறிந்ததே. பலரும் பார்த்த மாத்திரத்திலேயே அது உண்மையென எண்ணிவிடுவது இயல்பாகிவிட்டது. ஆனால், இப்பழக்கத்தைத் தொடருவோர், வாழ்க்கையில் சற்றுச் சிரமங்களை எதிர்நோக்குவார்கள்.

இணையத்தில் காண்பதை சரிவர ஆராய்ந்து பார்ப்பதே மேல். கைப்பேசிகளில் வரும் தகவல்கள் யாரால் அனுப்பப்பட்டவை? அதில் மிகைப்படுத்தப் பட்ட தகவல்கள் உள்ளதாகத் தோன்றுகிறதா? இன, மத, மொழி அடிப்படையில் பிரிவினைகளை ஏற்படுத்துபவைகளாக இருக்கின்றனவா? காணொளிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் ஆச்சரியமாக இருக்கின்றனவா? அவைகளைத் தீர அராயாமல் மேலும் பலருக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உண்மையெது, பொய்யெது என்று பகுத்துக்காண்பது கடினமாகி வரும் காலத்தில், அனைவரும் உண்மையை அறியும் உத்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாறிவிட்ட உலகெனினும், தொண்ணூறாண்டைக் கடந்த தமிழ் முரசு, தனது தலையாய நோக்கங்களிலிருந்து மாறாமல் இருக்கிறது. சமூகத்திற்குப் பயன்படும் செய்திகள், சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள், வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டதிட்டங்கள், அரசாங்கக் கொள்கைகள் ஆகிய அனைத்தையும் பொதுமக்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் படைத்து வருகிறது.  செய்திகளில் வதந்திகளைத் தவிர்த்து, உண்மை ஊடுருவி இருக்கச் செயல்படுகிறது. 

சமூகத்தில் பரவும் செய்திகளிலும் தகவல்களிலும் உண்மைத் தன்மை இருப்பது அனைவரின் பொறுப்பாகிவிட்டது. இவ்விலக்கை மனதில் கொண்டு ஒன்றாகச் செயல்படுவோம்.

குறிப்புச் சொற்கள்