சிங்கப்பூரில் இளையர்களும் பொதுமக்களுக்கும் பொதுவெளியில் தமிழை அதிகம் புழுங்குவதற்கு கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ்மொழி விழா ஆற்றி வரும் பங்கு குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டு ஒரு சிறிய விதையாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி வேரூன்றி இப்போது அதன் 20வது ஆண்டில் ஒரு பெருமரமாக வளர்ந்து நிற்கிறது.
இரு வார நிகழ்ச்சியாகத் தொடங்கி, தற்போது ஒரு மாதகால விழாவாக விரிவடைந்துள்ள தமிழ்மொழி விழா கொண்டாட்டமாக மட்டுமன்றி, தமிழர்களின் அடையாளத்தைத் தக்கவைக்கும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் 28 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறும் தமிழ்மொழி விழாவின் கருப்பொருள் ‘ஈடுபாடு’.
“தமிழ் என் மூச்சு,” என்று சொல்வதோடு நின்றுவிடாமல், அந்த மூச்சை அன்றாட வாழ்வில் பேச்சாகவும், எழுத்தாகவும், கலையாகவும் வெளிப்படுத்துவதே உண்மையான ஈடுபாடு.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி குறிப்பிட்டதுபோல, தமிழ் என்பது ஒரு தேரோட்டம் போன்றது. அந்தத் தேர் முன்னேறிச் செல்ல சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒரே திசையில் நின்று வடம் பிடித்து இழுக்க வேண்டியது அவசியம்.
இம்முறை 44 பங்காளித்துவ அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் 43 நிகழ்ச்சிகளும் இந்த ஒருமித்த முயற்சியின் சான்றுகளாகும்.
இளையர்களே வருங்காலத் தூண்கள்
மொழியின் எதிர்காலம் பாடப்புத்தகங்களில் இல்லை, அது இளையர்களின் நாவில்தான் இருக்கிறது. இன்றைய மின்னிலக்க யுகத்தில், செயற்கை நுண்ணறிவையும் நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தித் தமிழை இளையர்களிடம் கொண்டுசேர்ப்பது காலத்தின் கட்டாயம்.
தொடர்புடைய செய்திகள்
‘எடுவில்’ அமைப்பின் மின்னிலக்க விளையாட்டுகள் முதல், அகம் நாடகக் குழுவின் நவீன நாடக மேடைகள் வரை அனைத்தும் இளையர்களைத் தமிழோடு ‘ஈடுபாடு’ கொள்ளச் செய்யும் நல்ல முயற்சிகள்.
தமிழ் முரசு ஏற்பாட்டில் நடக்கும் ‘முரசு 360’ போன்ற புதிய முயற்சிகள் மாணவர்களைச் செய்தியாளர்களாக உருவாக்கி, களப்பணிகள் மூலம் மொழியின் ஆளுமையை உணரச் செய்கின்றன.
20 ஆண்டுகாலப் பயணத்தில் வளர்தமிழ் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தொடக்க காலத்தில் மாணவர்களாகப் பங்கேற்றவர்கள் தற்போது விழாவின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயலாற்றுவது, இந்த விழா வெற்றிகரமான தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியதற்குச் சான்றாகும்.
தமிழ்மொழி விழா 2026 தொடக்க நிகழ்ச்சியை அதிபர் தர்மன் சண்முகரத்தினம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைப்பார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) இரவு 7 முதல் 8.30 மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சி வசந்தம் ஒளிவழியில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
தமிழ்மொழி விழா 2026ன் முன்னோட்டமாக மார்ச் 14ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி சமூகத்தில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய தமிழும் சிங்கப்பூர் ஈடுபாடும்
தமிழ் என்பது 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான செம்மொழி என்னும் பெருமையுடன், இன்றும் உலகெங்கும் துடிப்புடன் இயங்கும் ஒரு ‘வாழும் மொழி’ எனும் பேற்றையும் பெற்றது.
எடுத்துக்காட்டாக, தமிழர்கள் கிட்டத்தட்ட 240,000 பேர் வாழும் கனடாவில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ் மரபுடைமை மாதமாகக் கொண்டாடப்படுவது உலகத் தமிழர்களுக்குப் பெருமிதம் தருவதாகும்.
டொரான்டோ முதல் தோ பாயோ வரை தமிழ் ஒலிக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இத்தகைய தொடர் முயற்சிகள் உள்ளன.
பிழைகளுக்கு அஞ்சித் தயங்கி நிற்காமல் தமிழைப் பேசுவதே மொழியின் வளர்ச்சிக்கான முதல் படி.
அடுத்த பல்லாண்டுகளுக்கு நம் மொழியும் பாரம்பரியமும் செழிக்க வேண்டுமானால், ஒவ்வோர் இல்லத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும்.
இந்த ஏப்ரல் மாதத்தில் நாம் அனைவரும் ஒருமித்த ‘ஈடுபாட்டுடன்’ தமிழ்மொழி விழாவில் பங்கேற்போம்.

