வருங்கால வெளிச்சத்தின் திறவுகோல்

3 mins read
54eb538c-c39b-4e42-825b-621a941413b6
உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற மசெக பிரசாரக் கூட்டம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜனநாயக முதிர்ச்சியில் சிங்கப்பூர் மேலோங்கி வருகிறது என்பதற்கு ஓர் அடையாளம் 2025 பொதுத் தேர்தல்.

எல்லா மக்களும் தேர்தலைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் நினைக்கிறார்.

மரின் பரேட்-பிரேடல் ஹைட்சில் போட்டியில்லை என்றதும் வாக்களிக்க முடியாதா என்பதுதான், குறிப்பாக முதல் முறை வாக்களிக்கக் காத்திருந்த அந்தத் தொகுதிவாசிகளின் ஆர்வமும் கவலையும் ஒன்றுகலந்த கேள்வியாக எழுந்தது.

தேர்தல் நடைபெறுவதும் அரசாங்கம் அமைவதும் ஒரு செய்தியாகவே இருந்த காலம் மலையேறிவிட்டது. 2011ல் தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பு, மக்களின் அரசியல் பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இது சிங்கப்பூரின் 60வது சுதந்திர ஆண்டு. அறுபது ஆண்டு நிறைவு என்பது ஒரு சுழற்சியின் நிறைவு. சீன நாள்காட்டி, இந்திய நாள் காட்டிகளின்படி 60 ஆண்டு என்பது முழுமையான வட்டம். ஒரு வட்டத்தை நிறைவு செய்து, புதிய சுழற்சிக்கு ஆயத்தமாகியுள்ள சிங்கப்பூர், பொருளியல் சிக்கலை எதிர்நோக்கி உள்ளது.

கொண்டாட்டங்கள், சிறப்பு நிகழ்வுகள், சலுகைகள், அன்பளிப்புகள் என்று 60வது நிறைவைக் கொண்டாடத் தொடங்கியிருந்தாலும் மக்கள், அரசாங்கம், தொழில்கள் என எல்லாத் தரப்பினரையும் நிலையற்ற பொருளியல் நிலவரமே சூழ்ந்து நிற்கிறது. 

பொருளியல் ஏற்ற இறக்கம் என்பது உலக நடைமுறையில் இயல்பான ஒன்று. ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்படுத்தி இருப்பது செயற்கையானது. உலகினையும் அனைவரின் எதிர்காலத்தையும் வேறு பாதைக்கு இட்டுசெல்லக்கூடியது.

உலகின் முன்னேற்றப்போக்கு மாறியுள்ளது. இது சிங்கப்பூருக்கு எந்த அளவுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏப்ரல் 23ல் தொடங்கிய ஒன்பது நாள் சூறாவளிப் பிரசாரம் பொருளியல் நிலவரத்தினால் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.

நீண்டகாலம் ஆட்சியில் இருப்பதால் பரந்துபட்ட பார்வையைக் கொண்டிருக்கும் மக்கள் செயல் கட்சி, “நமது தலையெழுத்தைச் செதுக்க நம்மால் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள முடியும்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறது. எதிர்காலச் சிந்தனையுடன் செயல்படுவதற்கான அனுபவம் சீரான நிர்வாகத்திற்குக் கைகொடுக்கும் என்று மசெக வழிநடத்தும் அரசாங்கம் உறுதியளிக்கிறது.

அரசாங்க உதவிகள் ஒருபக்கம் இருந்தாலும், கூடிக்கொண்டே செல்லும் வாழ்க்கைச் செலவினத்தைத் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற மக்களது பதற்றத்தை மந்திரக் கோலாக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

உலகின் செலவுமிக்க நகரமாகிவிட்ட சிங்கப்பூரின் நிலையை மாற்ற ஆளும் கட்சி போதுமான அளவு செய்யவில்லை என்று குறை கூறுவதோடு, சிங்கப்பூர் சீராக இருந்தாலும் சீரமைக்க இன்னும் இருக்கிறது என்கின்றன அந்தக் கட்சிகள்.

எதிர்கால இலக்கில் புதிய சிந்தனையுடன் ஆளும் மக்கள் செயல் கட்சி செயல்படுகிறது என்பதை உணர்த்த 32 புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் ஆளும் கட்சியின் தலைமைச் செயலாளரும் பிரதமருமான லாரன்ஸ் வோங். எதிர்க்கட்சிகளும் படித்த, உயர் பதவிகளில் இருக்கும் பிரபலமானவர்களைத் தேர்தல் களத்தில் நிறுத்தியுள்ளன.

பிரசார உரைகளையும் விவாதங்களையும் மக்கள் கவனிப்பதுடன், அதுகுறித்து விவாதிக்கவும் செய்கின்றனர். சமூக ஊடகங்களில் கருத்திடுவது என்பதற்கும் அப்பால், சிந்தித்துப் பேசுவதும் எழுதுவதும் விவாதிப்பதும் வளர்ந்து வருவது ஆக்ககரமானது. அதேநேரம், பரந்த இணையவெளியில் வெளித்தாக்கங்களின் ஆபத்தும் உள்ளது.

சிங்கப்பூரராக நமது விருப்பங்கள், இந்தியராக நமது தேவைகளை அறிந்து நாட்டின் எதிர்காலம் குறித்து சுய சிந்தனையுடன் முடிவெடுப்பது முக்கியம்.

சிங்கப்பூரராக, இந்தியராக, தமிழராக இந்நாட்டில் நாம் என்றென்றும் நெஞ்சுயர்த்தி பெருமையுடன் வாழ்வது நம் கைகளில் உள்ளது. அந்த வாழ்க்கையைத் தீர்மானிப்பது நமது கையில் உள்ள வாக்கு அட்டை. அந்த வாக்கு அட்டைதான் நமது வருங்கால வெளிச்சத்தின் திறவுகோல்!

குறிப்புச் சொற்கள்